Vallalar Universal Mission Trust   ramnad......
சிவன்பெறும்நற் பேறே தணிகைப் பெருவாழ்வே முருகா முகம்மூ விரண்டுடையாய் முறையோ முறையோ முறையேயோ.
அன்பின் உனது திருஅடிக்கே ஆளாய்த் தொண்டொன் றாற்றாதே
துன்பின் உடையோர் பால்அணுகிச் சோர்ந்தேன் இனிஓர் துணைகாணேன்
என்பில் மலிந்த மாலைபுனை எம்மான் தந்த பெம்மானே
முன்பின் நடுவாய் முளைத்தோனே முறையோ முறையோ முறையேயோ.
அருகா மலத்தின் அலைந்திரக்கம் அறியா வஞ்ச நெஞ்சகர்பால்
உருகா வருந்தி உழன்றலைந்தேன் உன்தாள் அன்றித் துணைகாணேன்
பெருகா தரவில் சிவன்பெறும்நற் பேறே தணிகைப் பெருவாழ்வே
முருகா முகம்மூ விரண்டுடையாய் முறையோ முறையோ முறையேயோ.
பொன்னின் றொளிரும் மார்பன்அயன் போற்றும் உன்தாள் புகழ்மறந்தே
கன்னின் றணங்கும் மனத்தார்பால் கனிந்தேன் இனிஓர் துணைகாணேன்
மின்னின் றிலங்கு சடைக்கனியுள் விளைந்த நறவே மெய்அடியார்
முன்னின் றருளும் தணிகையனே முறையோ முறையோ முறையேயோ.