அந்தத் தயவுக்கு ஒருமை வர வேண்டும். அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம். இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது. நீங்களும் என்னைப்போல் ஒருமையுடனிருங்கள். என்னிடத்தில் ஒருவன் வசப்படாத முரட்டுத்தனமாய் எப்படியிருந்தாலும், அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன்; மிரட்டிச் சொல்லுவேன்; தெண்டன் விழுந்து சொல்லுவேன்; அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன்; அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன். இப்படி எந்த விதத்திலேயாவது நல்வழிக்கு வரச் செய்து விடுவேன். நீங்கள் எல்லவரும் இப்படியே செய்தல் வேண்டும். இராத்திரிகூட "நான் இல்லாமல் இந்த ஜனங்கள் க்ஷணநேரம் இருக்க மாட்டார்களே என்று, என்று..." ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன். அது இங்கே இருக்கிற ஜனங்கள் மட்டில் மாத்திர மல்ல. உலகத்திலிருக்கிற எல்லா ஜனங்களையும் குறித்தே விண்ணப்பித்துக் கொண்டேன். ஏன் அப்படி ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன் என்றால்: எல்லவரும் சகோதரர்களாதலாலும், இயற்கை யுண்மை யேகதேசங்களாதலாலும், நான் அங்ஙனம் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை வைத்துக் கொண்டிருக்கிறேன்.
Write a comment