அண்டம்எலாம் பிண்டம்எலாம் உயிர்கள்எலாம் பொருள்கள்
ஆனஎலாம் இடங்கள்எலாம் நீக்கமற நிறைந்தே
கொண்டஎலாங் கொண்டஎலாம் கொண்டுகொண்டு மேலும்
கொள்வதற்கே இடங்கொடுத்துக் கொண்டுசலிப் பின்றிக்
கண்டமெலாங் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும்
கடந்தவெளி யாய்அதுவும் கடந்ததனி வெளியாம்
ஒண்தகுசிற் றம்பலத்தே எல்லாம்வல் லவராய்
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
பாரொடுநீர் கனல்காற்றா காயம்எனும் பூதப்
பகுதிமுதல் பகர்நாதப் பகுதிவரை யான
ஏர்பெறுதத் துவஉருவாய்த் தத்துவகா ரணமாய்
இயம்பியகா ரணமுதலாய்க் காரணத்தின் முடிவாய்
நேருறும்அம் முடிவனைத்தும் நிகழ்ந்திடுபூ ரணமாய்
நித்தியமாய்ச் சத்தியமாய் நிற்குணசிற் குணமாய்
ஓர்தருசன் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
Write a comment