உப்புற்ற பாண்டம்என ஒன்பது துவாரத்துள்
உற்றசும் பொழுகும்உடலை
உயர்கின்ற வானிடை எறிந்தகல் என்றும்மலை
உற்றிழியும் அருவிஎன்றும்
வெப்புற்ற காற்றிடை விளக்கென்றும் மேகம்உறு
மின்என்றும் வீசுகாற்றின்
மேற்பட்ட பஞ்சென்றும் மஞ்சென்றும் வினைதந்த
வெறுமாய வேடம்என்றும்
கப்புற்ற பறவைக் குடம்பைஎன் றும்பொய்த்த
கனவென்றும் நீரில்எழுதும்
கைஎழுத் தென்றும்உட் கண்டுகொண் டதிலாகை
கைவிடேன் என்செய்குவேன்
தப்பற்ற சென்னையில் கந்தகோட் டத்துள்வளா
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
Write a comment