தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்
சேர்கதி பலபல செப்புகின் றாரும்
பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்
பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்
மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்
மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்
எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே
தெற்றியிலே நான்பசித்துப் படுத்திளைத்த தருணம்
திருஅமுதோர் திருக்கரத்தே திகழ்வள்ளத் தெடுத்தே
ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றெனையங் கெழுப்பி
உவந்துகொடுத் தருளியஎன் உயிர்க்கினிதாந் தாயே
பற்றியஎன் பற்றனைத்தும் தன்அடிப்பற் றாகப்
பரிந்தருளி எனைஈன்ற பண்புடைஎந் தாயே
பெற்றியுளார் சுற்றிநின்று போற்றமணிப் பொதுவில்
பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்உவந் தருளே
Write a comment