சிதம்பர தரிசனம் காண வெளியூர் அன்பர்களோடு, மற்றவர்களும் கலந்து கொண்டு வடலூர் வருவது வழக்கம். அவ்வாறு ஒரு சமயம் வந்தபோது வள்ளற்பெருமான் உற்சவத்திற்கு விரைவில் புறப்படாமையால், வந்த அன்பர்களில் சிலர் உற்சவ காலம் நெருங்க நெருங்க இருப்பு கொள்ளாது சிதம்பரத்திற்கு புறப்பட்டுச் சென்று விட்டனர். ஆனால் எப்பொழுதும் பெருமானோடு சென்று தரிசனம் காணும் அன்பர்கள் சிலர், கடைசி நாள்வரை காத்திருந்து சிதம்பர தரிசனம் தவறியதே என்று எண்ணி ஏங்கி வருந்தினர். வள்ளற்பெருமான் அவர்களை சாலைக்கு வரும்படி அழைத்தார். அவர்களது ஆசையை நிறைவேற்றும்பொருட்டு சத்திய தருமச்சாலையின் மத்தியில் திரை ஒன்று போடச் செய்து, சிதம்பர தரிசனத்தை நேரலையாகக் காணச் செய்தார். அன்பர்கள் அனைவரும் சிதம்பர தரிசனத்தை கூட்டத்தில் சிக்கி அல்லல் படாது அமைதியாக அமர்ந்து கண்டு மகிழ்ந்தனர். பெருமானின் அருளால் கண்ட தரிசனத்தால் பெருமானை வணங்கி மனநிறைவோடு விடை பெற்றுச் சென்றனர்.