சன்மார்க்கம் நன்மார்க்கம் நன்மார்க்கம்
சகமார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம்.
சன்மார்க்கப் பெருங்குணத்தார் தம்பதியை என்னைத்
தாங்குகின்ற பெரும்பதியைத் தனித்தசபா பதியை
நன்மார்க்கத் தெனைநடத்திச் சன்மார்க்க சங்க
நடுவிருக்க அருளமுதம் நல்கியநா யகனைப்
புன்மார்க்கர்க் கறிவரிதாம் புண்ணியனை ஞான
பூரணமெய்ப் பொருளாகிப் பொருந்தியமா மருந்தை
அன்மார்க்கம் தவிர்த்தருளி அம்பலத்தே நடஞ்செய்
அருட்பெருஞ்சோ தியைஉலகீர் தெருட்கொளச்சார் வீரே.
சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்
என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்
எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்
புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே
புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்
தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே
தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.
Write a comment