ஒள்ளிய நெருப்பிலே உப்பிலே ஒப்பிலா
ஒளியிலே சுடரிலேமேல்
ஓட்டிலே சூட்டிலே உள்ளாடும் ஆட்டிலே
உறும்ஆதி அந்தத்திலே
தெள்ளிய நிறத்திலே அருவத்தி லேஎலாம்
செயவல்ல செய்கைதனிலே
சித்தாய் விளங்கிஉப சித்தாய சத்திகள்
சிறக்கவளர் கின்றஒளியே
வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத
வானமே ஞானமயமே
மணியேஎன் இருகண்ணுள் மணியேஎன் உயிரேஎன்
வாழ்வேஎன் வாழ்க்கைவைப்பே
துள்ளிய மனப்பேயை உள்ளுற அடக்கிமெய்ச்
சுகம்எனக் கீந்ததுணையே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதிநட ராஜபதியே.
Write a comment