ஓங்கிய பெருங்கருணை பொழிகின்ற வானமே
ஒருமைநிலை உறுஞானமே
உபயபத சததளமும் எனதிதய சததளத்
தோங்கநடு வோங்குசிவமே
பாங்கியல் அளித்தென்னை அறியாத ஒருசிறிய
பருவத்தில் ஆண்டபதியே
பாசநெறி செல்லாத நேசர்தமை ஈசராம்
படிவைக்க வல்லபரமே
ஆங்கியல்வ தென்றுமற் றீங்கியல்வ தென்றும்வா
யாடுவோர்க் கரியசுகமே
ஆனந்த மயமாகி அதுவுங் கடந்தவெளி
யாகிநிறை கின்றநிறைவே
தூங்கிவிழு சிறியனைத் தாங்கிஎழு கென்றெனது
தூக்கந் தொலைத்ததுணையே
துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
சோதிநட ராஜகுருவே.
Write a comment