ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயா
அரைக்கணமும் நினைப்பிரிந்தே இனித்தரிக்க மாட்டேன்
கோணைநிலத் தவர்பேசக் கேட்டதுபோல் இன்னும்
குறும்புமொழி செவிகள்உறக் கொண்டிடவும் மாட்டேன்
ஊணைஉறக் கத்தையும்நான் விடுகின்றேன் நீதான்
உவந்துவராய் எனில்என்றன் உயிரையும்விட் டிடுவேன்
மாணைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்நீ எனது
மனம்அறிவாய் இனம்உனக்கு வகுத்துரைப்ப தென்னே.
ஆணவமாம் இருட்டறையில் கிடந்தசிறி யேனை
அணிமாயை விளக்கறையில் அமர்த்திஅறி வளித்து
நீணவமாம் தத்துவப்பொன் மாடமிசை ஏற்றி
நிறைந்தஅருள் அமுதளித்து நித்தமுற வளர்த்து
மாணுறஎல் லாநலமும் கொடுத்துலகம் அறிய
மணிமுடியும் சூட்டியஎன் வாழ்முதலாம் பதியே
ஏணுறுசிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும்
இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
Write a comment