சரியைஓர் நான்கும் கிரியைஓர் நான்கும் சாற்றிடும் யோகமோர் நான்கும்
புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசைசற் றறியேன்
பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்திபெற் றிடவும்
உறியதோர் இச்சை எனக்கிலை என்றன் உள்ளம்நீ அறிந்ததே எந்தாய்.
சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும்
தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன்
உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்
ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன்
அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்
ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்
பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்
பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.
Write a comment