Vallalar Universal Mission Trust   ramnad......
பசி என்பது,
பசி என்பது, ஆகாரம் பொறாமையால் வயிற்றினுட் பற்றிநின்று தேகத்தின் அகத்தும் புறத்தும் உள்ள கருவி கரணங்களின் தன்மைகளைச் சுடுதல் செய்து அறிவை மெலிவித்து ஆன்மாவை வெளிப்படுத்துவித்தற்கு முதற்காரணமாகிய விகற்ப மாயாகாரியப் பிண்டப்பகுதி நெருப்பு.

கொலை என்பது,
தேகத்தின் அகத்தும் புறத்தும் உள்ள கருவி கரணங்களைப் பல்வேறு கருவி கரணப் புடைபெயர்ச்சிகளால் பதைப்புண்டாகக் கலக்கஞ்செய்து அறிவை மெலிவித்து ஆன்மாவை வெளிப்படுத்துவித்தற்கு நிமித்தமாகிய விகற்ப பூதகாரியக் கொடுந்தொழில்,


பிணி என்பது, வாத பித்த சிலேட்டும விகற்பங்களால் மாறுபட்டு, தேகத்தின் அகத்தும் புறத்தும் உள்ள கருவி கரணங்களை நலிவுசெய்து அறிவை மெலிவித்து ஆன்மாவை வெளிப்படுத்துவித்தற்கு நிமித்தமாக நின்ற விகற்ப மாயாகாரியப் பிண்டப் பகுதி வேற்றுமை விளைவு.


ஆபத்து என்பது, அகங்காரத்தாலும் மறதியாலும் கரும வேறுபாட்டாலும் தேகபோக அனுபவங்களைத் தடுக்கின்ற விக்கினங்கள்.


பயம் என்பது, தேக முதலிய கருவிகளுக்கு நட்டஞ் செய்வதாகிய விடயங்கள் நேரிட்டபோது கரணங்களுக்கும் அறிவுக்கும் உண்டாகின்ற நடுக்கம்.


இன்மை என்பது, கல்வி செல்வம் முதலிய கருவிகளைத் தற்சுதந்திரத்திற் பெறாமை.


இச்சை என்பது அடையக் கருதிய விடயங்களில் அருமை குறித்து அவற்றை மேன்மேலும் கருதச் செய்கின்ற சித்தவிருத்தி என்று அறியவேண்டும்.