SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
சன்மார்கிகளில்ஜீவகாருண்யம் ஒன்றே போதும் தவம் வேண்டாம் :
ஜீவகாருண்யம் ஒன்றே போதும் தவம் வேண்டாம் :

இன்றைய சன்மார்கிகளில் சிலர் ஜீவகாருண்யம் ஒன்றே போதும் .இறைவனின் அருளை அடைய ஜீவகாருண்யம் ஒன்றுதான் வழி என்று வள்ளலார் அழுத்தம் திருத்தமாக அறிவித்துள்ளார். பேருபதேசத்தில்கூட என்னைத் தயவுதான் மேல் நிலைக்கு ஏற்றிவிட்டது என்று வள்ளலாரே கூறி இருக்கத் தவம் தேவைதானா? முடிந்த முடிபான பேருபதேசத்தில் தவம் செய்யுங்கள் என்று கூறவில்லை. கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்தால் என்ன வரும்.? அதை விட நாலு பேருக்குச் சோறு போட்டால் புண்ணியமாவது கி டைக்கும் என்கிறார்கள்.பல இடங்களிலும் கிராமங்களிலும் புதியது புதியதாகச் சன்மார்க்க சங்கங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. அநேகமாக எல்லாச் சங்கங்களிலும் அன்னதானம் ஒன்றே பிரதானமாகப் பேசப்பட்டு வருகின்றதைக் காண்கின்றோம். ஜீவகாருண்யமே தெய்வ வழிபாடு என்றும், மோட்ச வீட்டின் திறவுகோல் அதுவே என்றும் வள்ளலார் கூறியுள்ளார்

.ஜீவகாருண்யம் என்பது வாய்ப்பேச்சல்ல என்று நிரூபிக்கவே வடலூரில் 23.5.1867 அன்று தருமச்சாலை நிறுவினார்.அன்று அவர் ஏற்றிய அடுப்பு அணையாமல் இன்றுவரை அங்கு வருகின்ற மக்களின் பசியாற்றுதல் செய்து வருகின்றது.அவர் நிறுவிய ஞான சபையை அவரே மூடிச் சாவியை வாங்கி வைத்துக் கொண்டார். அவர் திருக்காப்பிட்டுக் கொள்ளும் வரை ஞானசபையை அவர் திறக்கவே இல்லை. தருமச் சாலையும் அவர் கருத்தின்படி நடக்கவில்லை என்று தெரிகிறது. அவருடைய அறிக்கையே இதற்குச் சான்று. சாலையில் உள்ளார்க்கு இட்ட ஒழுக்கக் கட்டளையைப் பார்க்கலாம்.

அப்பாசாமி செட்டியார் அவர்களுக்கு:

இந்தச் சாலையால் எனக்கு மிகவும் சலிப்பு உண்டாகிறது. அந்தச் சலிப்பு இரண்டு பக்கத்திலும் உபத்திரவம் பண்ணும்.ஆதலால் சாலையில் இருக்கின்றவர்கள் எல்லாம் சன்மார்கத்திற்கு ஒத்து வாயடங்கி மனமடங்கி இருக்கவேண்டும்.என்மேல் பழி இல்லை. சொல்லிவிட்டேன்.பின்பு வந்ததைப் பட வேண்டும்.

இந்தக் கடிதத்தை அப்பாசாமி செட்டியாருக்கு எழுதிய நாள் 9.3.1872
(உரைநடை ஊரன் அடிகள் பதிப்பு பக்கம் 434)

சாலையால் அவருக்குச் சலிப்பு ஏற்பட்டும் அவர் ஞான சபையை மூடியதுபோல் சாலையை மூடவில்லை என்பது பசியாற்றளில் அவர் கொண்டிருந்த உறுதியைக் காண முடிகிறது. இதுவரை கூறிவந்தது எதையும் மறுக்க முடியாது. ஆனாலும் சில வினாக்களுக்கு விடை தேவைப்படுகிறது.

தருமச்சாலையே போதும் என்றால் ஞான சபையை நிறுவ வேண்டிய அவசியம் என்ன?
தருமச்சாலையை மேலும் விரிவு படுத்தி இருக்கலாமே?
ஜீவகாருண்ய ஒழுக்கத்தை ஏழு பிரிவுகளாக எழுத எண்ணிய பெருமானார் ஏன் மூன்று பிரிவுகளோடு நிறுத்திவிட்டார்.?
மூன்றாவது பிரிவுகூட முழுமையாக எழுதப்படவில்லையே ஏன்?

ஜீவகாருண் யத்தாலேயே முத்தேக சித்தி பெற்றுவிடலாம் என்றால் ஜீவகாருண்யத்தால் பிரமன் ஆயுசு அதாவது 4,32,000 ஆண்டுகள் வாழலாம் என்றும்,பாச வைராக்யத்தால் விஷ்ணு ஆயுசு அதாவது 8,64,000 ஆண்டுகள் வாழலாம் என்றும், ஈஸ்வர பக்தியால் ருத்திரன் ஆயுசு அதாவது 12,96,000 ஆண்டுகள் வாழலாம் என்றும்,பிரம்ம ஞானத்தால் என்றும் அழியாத ஸ்வர்ண தேகம் முதலியவைகளைப் பெற்றுக் கடவுள் மயம் ஆகலாம் என்றும் ஏன் கூறினார்?(உரைநடை ஊரன் அடிகள் பதிப்பு பக்கம் 313 மற்றும் 336)

நடராஜபதி மாலையில் ஆண்டவனே தன்னை எழுப்பி யோக ஞானம் எதுவும் புரியாமல் நலிந்து போகாதே என்று அறிவுறுத்தியதாக வள்ளலார் எழுதியுள்ளார்.

வாட்டமொடு சிறியனேன் செய்வகையை அறியாது மனமிக மயங்கி ஒருநாள்
மண்ணில் கிடந்து அருளை உன்னி உலகியலினை மறந்து துயில்கின்றபோது
நாட்டமுறு வைகறையில் என் அருகணைந்து என்னை நன்றுற எழுப்பி மகனே
நல் யோக ஞானம் எனினும் புரிதல் இன்றி நீ நலிதல் அழகோ எழுந்தே
ஈட்டுக நின் எண்ணம் பலிக்க அருள் அமுதம் உண்டு இன்புறுக என்ற குருவே
என் ஆசையே எந்தன் அன்பே நிறைந்த பேர் இன்பமே என் செல்வமே
வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத வித்தையில் விளைந்த சுகமே
மெய்ஞான நிலை நின்ற விஞ்ஞான கலர் உளேமேவு நடராஜ பதியே
*(நடராஜபதி மாலை பாடல் 24)

கருவிலேயே திரு உடைய வள்ளலாரையே யோக ஞானம் எதுவும் புரியாமல் நலிந்து போகாதே என்றால் நம் கதி என்ன?

நானே தவம் புரிந்தேன் நானே அழியா வடிவம் அவை மூன்றும் பெற்றேன் என்று எத்தனை பாடல்கள் அருட்பாவில் உள்ளன. உதாரணத்திற்கு இரண்டு பாடல்கள்.

நானே தவம் புரிந்தேன் நம்பெருமான் நல்லருளால்
நானே அருட்சக்தி நாடடைந்தேன்---நானே
அழியா வடிவம் அவை மூன்றும் பெற்றேன்
இழியாமல் ஆடுகின்றேன் இங்கு (6 ம் திருமுறை தெய்வநிலைய பதிப்பு பாடல் 1509)

எல்லாம் செய் வல்ல துரை என்னை மணம் புரிந்தார்
எவ்வுலகில் யார் எனக்கு இங்கு ஈடு உரை நீ தோழீ
நல்லாய் மீக் கூற்றுடையார் இந்திரர் மாமுனிவர்
நான்முகர் நாரணர் எல்லாம் வான்முகராய் நின்றே
பல்லாரில் இவள் புரிந்த பெருந்தவத்தை நம்மால்
பகர்வரிது என்கின்றார் சிற்சபையில் நடம் புரியும்
வல்லானை மணந்திடவும் பெற்றனள் இங்கிவளே
வல்லாள் என்றுரைக்கின்றார் நல்லார்கள் பலரே (அனுபவமாலை பாடல் 3)

இந்திரர்,மாமுனிவர்,நான்முகர்,நாரணர் போன்றோர் அண்ணர்ந்து பார்த்து இவள் (வள்ளலார்) புரிந்த பெருந்தவத்தை நம்மால் கூறமுடியாது என்கின்றனராம்

வள்ளலார் கூறிய அருட்பெருஞ்சோதி என்பது ஓர் அனுபவமே ஆகும். ஆதாரம்.

தனு கரணாதிகள்தாம் கடந்து அறியும் ஓர்
அனுபவமாகிய அருட்பெருஞ்சோதி. அகவல் வரி 118

அருட்பெருஞ்சோதி என் ற அனுபவம் ஒருவர் கொடுக்க ஒருவர் வாங்கவும் உள்ளதே. சான்று வல்ளலார் பாடல்.

அஞ்சலை நீ ஒரு சிறிதும் என் மகனே அருட்பெருஞ்சோதியை அளித்தனம் உனக்கே துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே சூழ்ந்த சன்மார்கத்தில் செலுத்துக சுகமே
விஞ்சுற மெய்ப்பொருள் மேனிலை தனிலே விஞ்சைகள் பல உள விளக்குக என்றாய் தஞ்சம் என்றவர்க்கருள் சத்திய முதலே தனி நடராஜ என் சற்குரு மணியே

தவம் செய்தால்தான் முத்தேக சித்தி கிட்டும் இறைவனோடு கலக்கும் பேறும் கிட்டும்.ஜீவகாருண்யம் இல்லாமல் செய்கின்ற தவம் விரதம் தியானம் எல்லாம் பிரயோசனமற்ற மாயாஜாலச் செய்கையே என்ற வல்ளலார் வாக்கை நினைவில் கொண்டு ஜீவ காருண்யம் ஓர் கண் என்றால் தவம் இரண்டாவது கண் என்று பெருமானார் பெற்ற நிலையை நாமும் பெறுவோமாக.

Download:

3 Comments
MOHAN T
உயிர் உறவு சங்கரய்யா அவர்களின் அமுத மொழிகள்:
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

பிறவிப் பெரும் பயனடைய வாரிர்!


பெறுவதற்கு அரிய மனிதப்பிறவியைப்பெற்றுக்கொண்டவர்கள் இதுவரையில் வீண் காலங்கழித்தது போலிராமல், இது தொடங்கி அதி தீவிர விருப்ப முயற்சியால் பிறவிப் பெரும் பயனை எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் தடையில்லாத பேரின்பப்பெருஞ்சித்திப் பெருவாழ்வை அறிந்து அடைதல் வேண்டும். அப்பெருநிலையை அடைய இரண்டே வழிகள். ஒன்று பரோபகாரம்; மற்றொன்று சத்விசாரம். எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி அவ்வுயிர்கள் துன்பம் நீங்கி இன்புறச் செய்யவும் தேவையான ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையுணர்வைத் திருவருள் வல்லபத்தால் அடைதல் வேண்டும். இது ஒரு சுலபமான வழி.

'சீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றும் ', "அறிவு விளங்கிய சீவர்களுக்கெல்லாம் உயிர் வழிபாடே கடவுள் வழிபாடாகும்" என்று வள்ளற்பெருமான் அருளிய சீவகாருண்ய ஒழுக்கம் என்ற நுாலில் அறிவுறுத்தியதை ஏற்று நடக்கவேண்டும். உயிருள் யாம், எம்முள் உயிர் என்ற இறைவாக்கை மதித்து நடக்க வேண்டும்.

இரண்டாவது வழி தவமாகும். தன்னை ஏறா நிலமிசை ஏற்றியது தயவு என்னும் சீவகருண்யந்தான் என்கிற வள்ளற்பெருமான், அத்தயவினைப்பெற அவசியம் ஒருமை என்னும் நற்சிந்தனையோடு கூடிய தவமாகும் என்கிறார். இறையனுபவம் பெற்றவர்க்கே உண்மையில் பற்றுதலும் அவ்விறைவனின் கருவிகள் மாத்திரமாகவேயிருந்து பயன் கருதாச்செயலில் ஈடுபட முடியும். கர்த்தாவும் கருவியும் ஒன்று இணைந்து செயல்படுவது தான் பூரண இன்பமுள்ளது.

தவத்தினால் அடையக்கூடிய பேராற்றலை அளவிட முடியாது .மரணமில்லாப் பெருவாழ்வு வாழ முடியும். பகுத்தறிவும் அறிவுக்கறிவாகிய மெய்ப்பொருளும் இணைந்து செயல்படும் நிலை தான் அது.

வள்ளற்பெருமான் இறைவனருளை அடைய ஒவ்வொருவரும் உயிர்களிடத்தில் இரக்கமும் தொண்டும். இறைவனிடத்தில் ஒருமையோடு கூடிய மெய்யன்பையும் வலியுறுத்துகிறார். பறவை பறக்க இரண்டு இறக்கைகள் தேவை நடக்க இரு கால்கள் தேவையாவது போல், மனிதன் ஆன்ம இன்ப சுகத்தையடைய தானமும் தவமும் அவசியம், உயிர்ப்பணி பற்றி அருளிய பெருமான் தவத்தின் (ஓர்மை என்றும் ஒருமை) அவசியத்தை விளக்காமலில்லை. ஊன் உடம்பைக் கோயிலாக்கச் சொல்கிறார். சாதனையின்றி ஒன்றைச் சாதிப்பார் உலகில் இல்லையாதலால் முதல் சாதனை சகாயமாக இறைவன் தமக்களித்த மகா மந்திரதை

"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி"

எந்நேரமும் புறத்தும் அகத்தும் ஜபிக்கச் சொல்கிறார். அடுத்து பெருமான் உபதேசித்து அருளிய உண்மை நெறி என்ற பெரு நெறி ஒழுக்கத்தில், கரண ஒழுக்கம் பற்றிக் கூறும் பொழுது மனதைச் சிற்சபையின்கண்ணே நிறுத்தவேண்டுமென்கிறார். புருவமத்தி லலாடம், சுழிமுனை, நெற்றிக்கண், அருளிடம், மகாமேரு என்று பல குறிப்புப் பெயர்களால் அவ்விடத்தைச் சித்தர்கள் குறிப்பார்கள். வள்ளற்பெருமான் உயிர் அநுபவம், அருளநுபவம், இறையநுபவம் பெற்று அதன் பயனாய் சுத்த தேகம், பிரணவ தேகம் மற்றும் ஞான தேகம் பெற்று, நமது ஊனக்கண்களுக்குத் தெரியாமல் திருக்காப்பிட்டுக் கொள்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தாம் தங்கியிருந்த மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருமாளிகையில் முதன் முதலில் சன்மார்க்கக்கொடியை ஏற்றி வைத்து பேருபதேசம் ஒன்று நிகழ்த்தினார்கள் அவர்கள் கூறியுள்ளதாவது ;
"இது தொடங்கி ஞான சித்தர்காலம் தொடங்கிவிட்டது. இதற்குச் சாட்சியாக இப்போது தான் சன்மார்க்கக் கொடி கட்டிக்கொண்டது அக்கொடி இப்போதுதான் கட்டிக்கொண்டது அக்கொடி உண்மையில் யாதெனில் நமது நாபி முதல்புருவமத்தி ஈறாக ஒரு நாடியிருக்கிறது அந்த நாடியில் புருவ மத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகிறது. அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம் மேற்புறம் மஞ்சள் வர்ணம். அச்சவ்வின் கீழ் ஓர்மெல்லிய நரம்பு ஏறவும் இறங்கவும் செய்கிறது. அக்கொடி நம் அனுபவத்தில் விளங்கும் இவ்வடையாளக் குறிப்பாகவே இன்றையதினம்வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லாவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின் கண் தோன்றும்..“எல்லார்க்கும்தாய், தந்தை, அண்ணன், தம்பி முதலான ஆப்தர் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ, அதற்குக் கோடி கோடிப்பங்கு அதிகமாக உதவிகிடைக்கும்படியான இடம். இந்த டம் இது ஆண்டவன் கட்டளை" வள்ளலார் அருளிய பேருபதேசம்

வள்ளற்பெருமான் தமக்கு ஏற்பட்டுள்ள அநுபவங்களை

மெய்யருள் வியப்பு" என்ற அற்புதமான பாடல்களிலும் “சிற்சபையும் பொற்சபையும் சொந்தமெனதாச்சு தேவர்களும் மூவர்களும் பேசுவது என்பேச்சு' எனப் பல பாடல்களில் விவரித்துள்ளார்கள் குரு பாதத்தை நம்பி புருவ மத்தியில் நாட்டம் வைக்க வேண்டிய அவசியத்தை

"கையறவிலாத நடுக்கண் புருவப் பூட்டு

கண்டுகளி கொண்டு திறந்துண்டு நடுநாட்டு"

என்கிறார்

உரைநடைப்பகுதியில் இதைப்பற்றி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது யாதெனில் - "நாம் நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணை ஆசாரியர் அனுகிரக்கத்தால் திறக்கப்பெற்றுக்கொள்வது நலம். ஏனெனில் மேற்படிநெற்றிக் கண்ணை திறக்கப் பெற்றுக் கொண்டவனுக்கு எல்லா அநுபவங்களும் பட்டப்பகல்போல் தெரியும். அவன்தான் சுத்த ஞானி'.
மேற்படி கண்ணைத்திறப்பதற்கு ஒரு சாவியும், பூட்டுமுள்ளது. மேற்படி அருள் என்கின்ற திறவு கோலைக் கொண்டு திறக்க
வேண்டும் ஆதலால் மேற்படி அருளென்பது ஆன்ம இயற்கையாகிய பெருந்தயவு நாம் தயா வடிவமானால் மேற்படி அநுபவம் நேரும்

------திருவருட்பா உரைநடைப்பகுதி

இதிலிருந்து நாம் உணரவேண்டியது ஒன்று தானமும், தவமும் முறையாக நிகழ திருவருள் காரியப்படவேண்டும். சீவனது விடா முயற்சியும் சிரத்தையும் உறுதியாயிருத்தல் வேண்டும். பகவான் புத்தர், மகாவீரர், இராமகிருஷ்ணன், இரமண மகரிஷி, அரவிந்தர், தாயுமாணவர் போன்ற ஞானிகளும், மகான்களும் அவதார புருஷர்களும் இளமையில் கடுந்தவம் இயற்றி கடவுள் நிலையறிந்து அம்மயமாயினர்.

இராகாதிகள் எனப்படும் செயற்கை குணங்களாகிய மாயத் திரைகளை விலக்கி ஆன்ம விளக்கம் பெற மெய்யருள் கனல் என்னும் சுத்த உஷ்ணம் தேவைப்டுகிறது. இவ்வுஷ்ணம் யோகியின் அநுபவத்தில் தெரியும். இதனை மனிததரத்தில் உண்டு பண்ணத்தெரியாது. கடுந்தவத்தால் பெறக்கூடிய மேற்படி மெய்யருள் கனலை பார்க்கிலும் தெய்வத்தைத் தோத்திரம் செய்கின்றதிலும் தாகமாய் நினைக்கின்றதிலும் கோடிப்பங்கு, பத்துக்கோடிப்பங்கு அதிகமாக உண்டு பண்ணக்கூடும்.

உயிர்காப்போம், ஒருமையில் கலப்போம், உத்தமராவோம்!

தொகுத்தவர்

உயிர் உறவு கூ. சங்கரய்யா , இலட்சுமிபுரம் சன்மார்க்க சங்கம்
Sunday, April 11, 2021 at 00:49 am by MOHAN T
MOHAN T
தவமும் தானமும் இனைத்து செயல் பட வேண்டும். உங்கள் கருத்து மிகவும் அருமை. இதை உயிர் உறவு சங்கரய்யா அவர்களும் வழிஉறுத்தி உள்ளார். இதையும் இந்த நேரத்தில் பகிர்ந்து உங்களை வணங்குகிறேன்.
மோகன்.9003077772
Sunday, April 11, 2021 at 00:54 am by MOHAN T
MOHAN T
கோடி கோடிப்பங்கு அதிகமாக உதவிகிடைக்கும்படியான இடம். இந்த இடம் .இது ஆண்டவன் கட்டளை" வள்ளலார் அருளிய பேருபதேசம். சிற்சபை கோடி கோடிப்பங்கு அதிகமாக உதவிகிடைக்கும்படியான இடம்.
Sunday, April 11, 2021 at 00:59 am by MOHAN T