"உபய கலாநிதிப் பெரும்புலவர்"
தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களின்
வாழ்க்கை வரலாறு
===========
தொழுவூர் வேலாயுத முதலியார் கி.பி 1832 ல் (நந்தன, ஆவணி 9) செங்கற்பட்டு மாவட்டம், திருவள்ளூர் கூற்றம், ஈக்காட்டுக் கோட்டம், சிறுகடல் என்னும் சிற்றூரில் தோன்றியவர்.
தந்தையார் தொழுவூர் செங்கல்வராய முதலியார், தாயார் ஏலவார் குழலி ஆவார்கள், (தொழுவூர் அஞ்சல் நிலையம் பக்கம் அமைந்ததே சிறுகடல்).
தமிழ், வடமொழி, தெலுங்கு, கன்னடம், மாகராஷ்டிரம், இந்துஸ்தானி ஆகிய பல மொழிகளில் புலமை பெற்றவர்.
இவரின் மனைவியார் ஸ்ரீ சீரங்கம்மாள், மகன் திரு நாகேச்சுரன், மகள் சிவகாமி அம்மை,
1849 இல் இவர் தந்தையாரின் நண்பரான காளவாய் குப்பண்ண முதலியார் என்பவரால் வள்ளற் பெருமானிடம் சேர்ப்பிக்கபட்டார்,
பெருமானும் 'புதியவனல்லன்; நம்பிள்ளை நமக்கே கிடைத்தான்' என இவரை ஏற்றுக்கொண்டார்கள்.
பின்பு பலகாலம் பெருமானோடு வடலூரிலும், மேட்டுக்குப்பத்திலும் குடும்பத்தோடு தங்கி இருந்து தொண்டு செய்தார், பெருமானாரின் அருள் உபதேசங்களை பெற்றவர்,
நமது பெருமானாரின் தலைமை மாணவர் என்னும் உயரிய தகுதியினை பெற்றவர்,
நமது பெருமானாரின் கட்டளைக்கு ஏற்ப முதன் முதலாக திருக்குறள் வகுப்பை நடத்தியவரும் இவரே,
இறுக்கம் இரத்தினம் முதலியார் போன்றோரது முயற்சியால் பெருமானின் பாடல்கள் முதல் நான்கு திருமுறைகளாக 1867 இல் அச்சிடப்பட்ட போது, அப்பாடல்களுக்குத் "திருஅருட்பா" என்றும், அதன் பகுதிகளுக்குத் திருமுறை என்றும், இராமலிங்க அடிகள் என்னும் பெயருக்கு சிறப்பு பெயராக "திருஅருட்பிரகாச வள்ளலார்" என்றும் பெயரிட்ட பெருமை தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களையே சாரும்,
அவர் பாடிய திருஅருட்பா வரலாறு என்னும் நூலில் இவற்றை பற்றி விளக்கமாக அறியலாம்.
தொழுவூரார் பாடிய பல பக்தி பாடல்களை வள்ளற் பெருமானார் கண்ணுற்றருளி, 'நமது முதலியாரப்பா மதுர வாக்கிது', 'வித்துவான் பாட்டிது', 'அமுதப் பாட்டிது' எனப் பாராட்டி 'உபய கலாநிதி' எனப் பட்டமும் தந்தருளினார், பெருமானால் பட்டம் சூட்டப்பட்ட பெருமைக்கு உரியவர் இவர்.
பெருமான் சித்தி பெற்ற பிறகு பிரம்ம ஞான சபையின் அன்பர்களுக்கு, பெருமானைப்பற்றி வாக்கு மூலம் தந்தார்,
திருஅருட்பா ஐந்தாம் திருமுறையை 1880 இல் வெளியிட்டு சன்மார்க்க பெரும்பணி செய்தவரும் இவரே.
சென்னை 'பிரசிடென்சி' கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார்,
முதல் மனைவியும் மகளும் இறந்து போய் விட்டதால் ஸ்ரீ சுவர்ணம்மாள் என்பவரைத் திருமணம் செய்து செய்து கொண்டார், இவர்களுக்கு மகன் செங்கல்வராயர்,
1889 இல் (சர்வதாரி, மாசி 12) இவர் திருவடிப்பேறு எய்தினார், திருஒற்றியூரில் வேலாயுத நகர், ஈசானமூர்த்தி தெரு, முத்து கிருஷ்ண தொடக்கப்பள்ளி வளாகத்தினுள் சமாதி உள்ளது.
இவர் பல உரை நடை நூல்களையும் விநாயகர், முருகர், சிவன், அம்பிகை, திருஞானசம்பந்தர், மயிலம் சிவஞான பாலையர் ஆகியோரின் மீதும் பல செய்யுள் நூல்களை செய்துள்ளார்.
திருஅருட்பிரகாச வள்ளலார் சந்நிதி முறை (முறையீடு) என்னும் நூலினை பாடி வள்ளல் பெருமானாரை போற்றியுள்ளார்,
அந்நூலின் பகுதிகள் இவை
1. சற்குரு துதிகள் (4 பாடல்கள்)
2. திருப்பள்ளி எழுச்சி (15 பாடல்கள்)
3. நாம சங்கீர்த்தனம் (11 பாடல்கள்)
4. சரண மஞ்சரி (24 பாடல்கள்)
5. அருணாம மந்திராமிர்தம் (10 பாடல்கள்)
6. திவ்விய நாமாமிர்தம் (10 பாடல்கள்)
7. போற்றி சங்கீர்த்தனம் (10 பாடல்கள்)
8. முறையீட்டு விண்ணப்பம் (11 பாடல்கள்)
9. குறையிரந்த விண்ணப்பம் (11 பாடல்கள்)
10. அற்பித்த விண்ணப்பம் (10 பாடல்கள்)
11. திருக்கழற் சந்நிதி விண்ணப்பம் (3 பாடல்கள்)
12. மங்கள வாழ்த்து (5 பாடல்கள்)
13. வாழ்த்து திருவிருத்தம் (1 பாடல்)
14. அலங்காரம் (90 பாடல்கள்)
என 215 பாடல்கள் அமைந்துள்ளன, இது 1912 ஆம் ஆண்டு சனவரி மாதம் அவரது பிள்ளைகளால் தனி நூலாக வெளியிடப்பட்டது.
(Source from : கடலூர் ஞானப்பிரகாசம் அய்யா)

Velaautha_muthaliyaar.jpg
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி