அருள்பாவலர் சக்திவேல் .வே
வள்ளல் பெருமானார் காண விரும்பிய சமுதாயம்....
வள்ளல் பெருமானார் காண விரும்பிய சமுதாயம்...:
-------------------------------------------------------------------
வள்ளலார் ஞான நெறி" எனும் புலனக் (வாட்ஸாப்) குழுவில் 2018 ஏப்ரல் 5 முதல் 11 -ஆம் தேதி வரை "வள்ளலார் காண விரும்பிய சமுதாயம் " என்ற தலைப்பில் சத்விசாரக் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. அக்கருத்துகளின் தொகுப்பு வருமாறு..

" ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும்...."

- என்று வள்ளல் பெருமானார் திருஅருட்பா ஆறாம் திருமுறையில் ( 349 ) பாடியுள்ளார்கள்.

ஆம்....
இந்த உலகில் உயந்தவர் என்றும் தாழ்ந்தவர் என்றும் எவ்வித வேறுபாடும் இல்லாமல்...

அனைவரும் சமநிலையில் மதிக்கப்பட்டு.... ஒருமைப்பாட்டுடன் நடத்தப்பட வேண்டும்..

" பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ..."
என்ற திருவள்ளுவரின் குறள் ( 972 ) கருத்தைப் போன்றும்....

"ஒன்றே குலம் ; ஒருவனே தேவன் " - என்ற திருமூலரின் தமிழ் மரபிலும் வள்ளல் பெருமானாரின் சமுதாயச் சிந்தனை அமைந்திருக்கின்றது.

இவ்வுலகத்தில் அனைவரும் சமமாக மதிக்கப்படம் நிலை உருவாக வேண்டுமென பெருமானார் விரும்பினார்கள்.

வள்ளல் பெருமானார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்து வைக்கும் வேண்டுகோளைக் கேளுங்களே.....!

"எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே...! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள் , மதங்கள் , மார்க்கங்கள் என்பவற்றின் ஆச்சார சங்கற்ப விகற்பங்களும்...

வருணம் , ஆசிரமம் , முதலிய உலகச்சார சங்கற்ப விகற்பங்களும்.....

எங்கள் மனதில் பற்றா வண்ணம் அருள் செய்தல் வேண்டும்....

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருள வேண்டும்...

-என்று வள்ளல்பெருமனார் உரைநடைப் பகுதியில் (பக்கம் 560 & 561) "சுத்த சன்மார்க்க சத்திரச் சிறு விண்ணப்பம் என்ற தலைப்பில் கூறியுள்ளார்கள்....

மேற்கண்ட பகுதியை மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்களே....!

வள்ளல் பெருமனார் காண விரும்பிய புதிய - பொதுமையான - ஒருமைப்பட்ட சமுதாயத்தை உணர முடியும்.....

இன்றளவில்... சன்மார்க்க சங்கங்களின் கூட்டு வழிபாடுகளில் மேற்கண்ட சத்திய சிறு விண்ணப்பம் உறுதிமொழியாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

"சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே...

ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணே நீர் (நீங்கள்) அழிதல் அழகலவே

-என்று வள்ளல்பெருமனார் திருஅருட்பா ஆறாம் திருமுறையில் ( 1473 ) பாடியுள்ளார்கள்.

இவ்வருட்பா வரிகளின் பொருள்....தான் என்ன...?

சாதியிலே.... மதங்களிலே.... சமய நெறிகளிலே.... சாத்திரச் சண்டைகளிலே.... கோத்திர (குல) சண்டைகளிலே.... அலைகின்ற.... உலக மக்களே....!

வீணாக அலைந்து அலைந்து அழிவது அழகல்ல....

என்று வள்ளல் பெருமனார் மக்களை நோக்கி பாடியுள்ளார்கள்.

"நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்ற கலைச் சரிதம் எலாம் பிள்ளை விளையாட்டே

மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலை ... நீ விழித்து இது பார் என்றெனக்கு விளம்பிய சற்குருவே...

-என்று *வள்ளல் பெருமனார்* ஆறாம் திருமுறையில் (621) பாடியுள்ளார்கள்.

இவ் அருட்பா வரிகளால் நாம் புரிந்துகொள்வதென்ன....?

★வருணாச்சரம முறையிலான சாதிய வேறுபாடு , ஆச்சார முறைகள் எல்லாம் சிறுபிள்ளை விளையாட்டாகும்.

★தோலின் நிறத்தை வைத்து மேல் சாதியினர் என்றும் - கீழ் சாதியினர் என்றும் .... கண்டறிவார் இல்லை....

" இருட்சாதி தத்துவச் சாத்திரக் குப்பை இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு...

மருட்சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்....

தெருட்சாறும் சுத்த சன்மார்க்க நன்னீதி சிறந்து விளங்க.....

- என்று வள்ளல் பெருமனார் திருஅருட்பா ஆறாம் திருமுறையில் (496) பாடியுள்ளார்கள்.

இப்பாடலால் நாம் புரிந்துகொள்வதென்ன....?

★சாதியத்தை வலியுறுத்தும் சாத்திரக் குப்பைகளை எல்லாம் புன்செய் நிலைத்தில் எருவாக - உரமாக போட்டு.....

★சாதி - சமயம் - மதம் - ஆச்சார வழக்கங்கள் எல்லாவற்றையும் குழிவெட்டி மண்ணுக்குள் புதைத்து...

★சுத்த சன்மார்க்கம் எனும் நல்ல நீதி சிறந்து விளங்க வேண்டும்...

" சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி...

"சாதியும் மதமும் சமயமும் காண ஆதி அனாதியாம் அருட்பெருஞ்ஜோதி...

"சமயம் கடந்த தனிப்பொருள் வெளியாய் அமையும் அருட்பெருஞ்ஜோதி ..."

"சமயம் குலம் முதல் சார்பெலாம் விடுத்த அமயம் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி..."

-என்று வள்ளல்பெருமனார் திருஅருட்பாவில் அருட்பெருஞ்ஜோதி அகவலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இக்குறிப்புகளால் வள்ளலார் கண்ட அருட்பெருஞ்ஜோதி கொள்கையானது சமயம் - மதம் - சாதி - குலம் - இனம் என்ற குறுகிய வட்டத்திற்கு அப்பாற்பட்டது என்பது தெளிவாகின்றது.

"தத்துவ ஒழுக்கம் பற்றிச் சமயங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. ...

தொழிலொழுக்கம் பற்றி ஜாதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ..

தயவை விருத்தி செய்வதற்குத் தடையாயிருப்பன சமய ஏற்பாடு , ஜாதியேற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள். .....

-என்று வள்ளல்பெருமானார் உபதேசித்துள்ளார்கள்.

பெருமானாரின் இக்குறிப்பிலிருந்து நாம் புரிந்துகொள்வதென்ன....?

★உலகில் நடைமுறையில் உள்ள பல்வேறு சமயங்கள் யாவும்.... இறைத் தத்துவத்தின் வேறுபாடே...!

★அதே போல் சாதிகள் யாவும் செய்கின்ற தொழிலின் வேறுபாடே...

★இவ்வேறுபாடுகள் சன்மார்க்கத்தின் ஆணிவேராக உள்ள தயவை வளர்ப்பதற்குத் தடையாக உள்ளன...

அதனால் தான் வள்ளல் பெருமனார் திருஅருட்பா ஆறாம் திருமுறையில்.... (1616 )

"எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான் சுத்த

சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடம் என நான் தெரிந்தேன்.....

என்று பாடியுள்ளார்கள்.

மேற்கண்ட பெருமானாரின் அருட்பாவால் நாம் புரிந்துகொள்வதென்ன.....?

★சாதி - சமயம் - மதம் என .... எவ்வித வேறுபாடும் பார்க்காது ...அனைத்து உயிரினங்களையும் தம் உயிரைப் போன்று நேசிப்பவர் உள்ளத்திலேயே இறைவன் விளங்குகின்றான்...

" சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே சத்தியச் சுத்த சன்மார்க்க

வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை விளம்பினேன் வம்மினோ விரைந்தே....

- என்று வள்ளல் பெருமானார் திருஅருட்பா ஆறாம் திருமுறையில் ( 1735 ) பாடியுள்ளார்கள்.

ஆம்...

சாதி - சமய - மத பேதங்களைத் தவிர்த்து ;

சத்திய சுத்த சன்மார்க்க வீதியை நிறுவ...

நம்மையெல்லாம் .... உண்மையைக் கூறி அழைப்பதாகப் பெருமானார் பாடுகினன்றார்கள்.

" சாதி சமய சழக்கை விட்டேன் அருட்பெருஞ்ஜோதி க் கண்டேன்..."*

என்று ஆறாம் திருமுறையில் (2213) பெருமானார் பாடியுள்ளார்கள்.

" சாதி சமய சழக்கெலாம் அற்றது சன்மார்க்க ஞான சபை நிலைபெற்றது...."*

-என்று ஆறாம் திருமுறையில் (2177) பெருமானார் பாடியுள்ளார்கள்.

மேலும் ...

"இது நல்ல தருணம் " (2111)எனும் பதிகத்தில்....

" மதித்த சமய மத வழக்கெல்லாம் மாய்ந்தது...

வருணாச்சிரமம் எனும் மயக்கமும் சாய்ந்தது..

கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது....

என்றும்....

" குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று....

என்று வள்ளல் பெருமானார் பாடுகின்றார்....

சாதி - சமய - மத... பேதங்கள் நம் மனதில் இல்லாது போனால்....

அருள் செய்ய.... இறைவனை நாமே அழைக்கலாம்....

இது நல்ல தருணம் என்று....

சாதி சமய சழக்கை எல்லாம் நாம் விட்டுவிட்டால் நமக்கு அருள் செய்வதைத்தவிர கடவுளுக்கு வேறு வழியே கிடையாது ; அப்படிப்பட்ட நிலைக்கு கடவுளைக் கொண்டு வரக்கூடிய வாய்ப்பு நம்மிடம் இருந்தும் செயல்படுத்தாமல் உள்ளார்களே என்ற ஏக்கம் இல்லாமலில்லை. (- என்று சென்னையிலிருந்து வெளிவரும் செந்நெறி எனும் சன்மார்க்க திங்களிதழின் ஆரியர் தயவுதிரு ப . தண்டபாணி ஐயா அவர்கள் சத்விசாரத்தில் கருத்தைப் பகிர்ந்தார்கள்....

ஆம்...

சாதி - சமய பேதத்தை விட்டொழித்துவிட்டால் ; நமக்கு அருள் செய்வதைவிட ஆண்டவருக்கு வேறு வழியில்லை...

" கலை உரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும் கண்மூடி வழக்கம் எலாம் மண் மூடிப் போக...

மலைவறு சன்மார்க்கம் ஒன்றே நிலை பெற மெய் உலகம் வாழ்ந்தோங்கக் கருதி அருள் வழங்கினை என் தனக்கே....

- என்று வள்ளல் பெருமானார் திருஅருட்பா ஆறாம் திருமுறையில் ( 187 ) பாடியுள்ளார்கள்.

இலக்கிய கற்பனைக் கதைகளில் வரும் செய்திகளை... நிலையானவை என நினைக்கும் மூடநம்பிக்கை எல்லாம் மண்மூடிப்போக.....

இவ் உலகில் சன்மார்கம் ஒன்றே நிலைபெற எனக்கு அருள் வழங்கிய இறைவனே...!

- என்பது மேற்கண்ட அருட்பாவின் கருத்து எனக் கொள்ளலாம்...

" நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம் , ஆகமம் , புராணம் , இதிகாசம் முதலிய கலைகள் எதனினும் லக்ஷியம் வைக்க வேண்டாம்....

ஏனென்றால் , அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறி யன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும் , தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல் , மண்ணைப் போட்டு மறைத்துவிட்டார்கள்..."
- என்று வள்ளல் பெருமானார் பேருபதேசத்தில் (உரைநடைப் பகுதி : பக்கம் 466 ) கூறியுள்ளார்கள்.

பெருமானாரின் இவ் பேருபதேசக் குறிப்பால் நாம் புரிந்துகொள்வதென்ன....?

வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் முதலிய கலைகளில் இறை இயல்பை வெளிப்படையாகச் சொல்லாமல்.....

ஒரு கூட்டத்தாருக்கு மட்டும் புரியும் படி.... மண்ணைப் போட்டு மறைத்துவிட்டார்கள்...

ஆதலால் ....; அவற்றில் கவனம் செலுத்த வேண்டியதில்லை.

"....தயவுக்கு ஒருமை வர வேண்டும். அந்த ஒருமை இருந்தால் தான் தயவு வரும். தயவு வந்தால் தான் பெரிய நிலை மேல் ஏறலாம்...."

- என்று வள்ளல் பெருமானார் பேருபதேசத்தில் ( பக்கம் 470 )குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆம்....சன்மார்கத்தின் ஆணி வேர் தயவு....

அத் தயவு வளர வேண்டுமெனில் ஒருமைப்பாடு மிக மிக அவசியமான தேவை.....

ஒருமைப்பாடு இருந்தால் தான் தயவு வளரும்....

"எச்சபை பொது என இயம்பினர் அறிஞர்கள் அச்சபை இடங்கொளும் அருட்பெருஞ்ஜோதி..."

- என்று வள்ளல் பெருமானார் அகவலில் பாடுவார்கள். .

எவ்வித பேதமும் வேறுபாடும் பார்க்காது... அனைவரும் ஒன்றாக... குழுமும் ... பொதுவான இடத்திலேயே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விளங்குகின்றார் என்வது பெருமானாரின் கருத்து.

நிறைவுரை :
-----------------

வள்ளல் பெருமானார் வகுத்தளித்த சன்மார்க்கத்தில் சாதி -சமய - மத - இன - குல -...... என எவ்வித வேறுபாட்டிற்கும் இடமில்லை...

அனைவரையும்... எல்லா உயிர்களையும் ..அன்பால்.. கருணையால்... தயவால்...ஒருமைப்பாட்டுணர்வோடு பார்ப்பதே சன்மார்க்கம்....

19 மற்றும் 20 -ஆம் நூற்றாண்டுகளில் மேற்கத்திய - ஐரோப்பிக் கல்வியைக் கற்றும்... அதன் தாக்கத்தாலும் சிலர் தங்களைச் சீர்திருத்தவாதிகள் என்று கூறிக்கொண்டனர்...

ஆனால் ...வள்ளலார் கண்ட ஆன்மநேய ஒருமைப்பாடானது திருவள்ளுவர் - திருமூலர் சித்தர் பெருமகானார்கள்... வழியில் ... தமிழ் பாரம்பரியத்தினை மீட்டுருவாக்கும் செய்யும் புரட்சியான சிந்தனையே வள்ளல் பெருமானாரின் சன்மார்க்கம்...

ஆம்...

வள்ளல் பெருமானார் அருளிய அருட்பாக்களையும் உபதேசங்களையும் தொடர்ந்து கற்போம்.... பேதமில்லா ..பொதுவுடைமை..புத்துலகைப் படைப்போம்.....

[கட்டுரை ஆக்கம் : அருள்பாவலர் சக்திவேல் .வே]

-------------------------------------------------------------

"வள்ளலார் ஞான நெறி " வாட்ஸாப் குழுவில் அடுத்த வார (12 / 4 /18 முதல் 18 / 4 /18 வரை ) சத்விசார கருத்துப் பரிமாற்றத் தலைப்பு ;

வள்ளல் பெருமானாரும் தமிழ்ப் பற்றும்