Logith sharma
சுத்த சன்மார்க்கம் யாதெனில்...

கீழ்வருவன உரைநடை பகுதி பக்கம் 401 - 412 உள்ளது உள்ளபடி

94. ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்கம்
சமரச வேத சன்மார்க்க சங்கம் என்பதற்குப் பொருள்: எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாகிய அறிவுநூல் முடிபான நான்காவது மார்க்கத்தை அனுஷ்டிக்கின்ற கூட்டமென்று கொள்க. மேற்படி மார்க்கம் நான்காவன: தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் என நான்கு.
ஷடாந்த சமரச சுத்த சிவ சன்மார்க்கம் என்பதில் ஷடாந்தம் என்பது யாது? வேதாந்தம், சித்தாந்தம்,போதாந்தம், நாதாந்தம், யோகாந்தம், கலாந்தம் ஆக ஆறு. மேற்படி அந்தங்களின் அனுபவம் காலம் இடம் முதலிய வேறுபாடுகளால் ஏறிக் குறையும். ஆதலால், ஷடாந்தமும் வியாபகமில்லாமல் வேதாந்த சித்தாந்தத்தில் நான்கந்தமும் வியாப்பியமா யிருக்கின்றன. மேற்படி அந்தம் நான்கின் ஐக்கிய விவரம்:வேதாந்தத்தில் போதாந்த யோகாந்தமும், சித்தாந்தத்தில் நாதாந்த கலாந்தமும் அடங்கியிருக்கின்றன. இந்த ஐக்கியம் பற்றி வேதாந்த சித்தாந்தமே இப்போது அனுபவத்தில் சுத்த வேதாந்த சுத்த சித்தாந்தமாய் வழங்குகின்றன.
இவற்றிற்கு அதீதம் ஆகிய சுத்த வேதாந்த சித்தாந்த அந்தாந்தமாகிய சமரசசுத்த சன்மார்க்கமே நித்திய மார்க்கம். மேற்குறித்த மார்க்கத்திற்குச் சமய மதங்களாகிய சன்மார்க்கங்கள் அநந்நியமாய் விளங்கும்; அந்நியமல்ல. மேற்படி சமயமத மார்க்கங்கள் எவை எனில், சமய சன்மார்க்கம் மதசன்மார்க்கம் என இரண்டு. இவற்றுள் அடங்கிய சன்மார்க்கம் அனந்தம். அதில் சமய சன்மார்க்கத்தின் வகை ஆறு, தொகை முப்பத்தாறு, விரிவு அறுகோடி. இதுபோல் மதத்திலும் வகை தொகை விரிவு உள்ளன. மேற்குறித்த சமய மத சன்மார்க்கங்களில் வகரவித்தை தகரவித்தையுள. அவை அவ்வச் சமயமத சன்மார்க்கங்களின் தலைமையாகிய கர்த்தா மூர்த்தி ஈசுரன் பிரமம் சிவம் முதலிய தத்துவங்களில் காலப் பிரமான பரியந்த மிருக்கும்; அதற்குமேலிரா.
மேற்படி சமயமத சன்மார்க்கங்களில் ஷடாந்த சமரச முளதோவெனில்: உளது. யாதெனில்: வேதாந்த சித்தாந்த சமரசம், யோகாந்த கலாந்த சமரசம், போதாந்த நாதாந்த சமரசம். இதற்கு அதீதம் ஷடாந்த சமரசம். இதற்கு அதீதம் சன்மார்க்க சமரசம். இதற்கு அதீதம் சுத்த சமரசம். ஆதலால், சுத்த சமரசத்தில் சன்மார்க்கத்தைச் சேர்க்க சுத்த சமரச சன்மார்க்கமாம். இது பூர்வோத்தர நியாயப்படி, கடைதலைப்பூட்டாகச் சமரச சுத்த சன்மார்க்கமென மருவியது.
இதன் தாத்பரியம் யாதெனில்: சமரசம் என்பதற்குப் பொருள் - எல்லா அந்தங்களினது அந்தமும் தனக்குப் பூர்வமாக்கித் தான் உத்தரத்தி னின்று மருவியது சமரசம். இதற்கு அனுபவம் குருதுரிய ஸ்தானம். சுத்த சமரச மென்பதற்கு நியாயம்: விந்து பரவிந்து இரண்டையும் மறுக்கச் சுத்தவிந்து வந்தது போலும், சிவம் பரசிவம் இரண்டையும் மறுத்தது சுத்தசிவம் போலும். சன்மார்க்கம் சிவசன்மார்க்கம் இரண்டையும் மறுத்தது சுத்த சன்மார்க்கம். பூர்வத்தில் நின்ற சமயமத சன்மார்க்கங்களை மறுப்பது சுத்த சன்மார்க்கம். இதன் பொருட்டு ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க மென்றே மருவியது. ஒருவாறு, ஷடாந்தங்களின் பொதுவாகிய ஷடாந்த சன்மார்க்கம் ஒன்று. இதன் பூர்வத்தில் சமரச சன்மார்க்கம் ஒன்று, இதன் உத்தரத்தில் சுத்த சன்மார்க்கம் ஒன்று; ஆதலால் ஷடாந்த சமரசம். ஆன்மாவுக்கு அருள் எப்படி அநந்நியமோ, அதுபோல் சுத்த சன்மார்க்கத்திற்குப் பூர்வத்தில் சொன்ன சன்மார்க்கங்கள் யாவும் அநந்நியம்.
சன்மார்க்கம் என்பதில் வகை தொகை விரிவு அனந்தம். இதன் தாத்பரியம் யாதெனில்: சமய சன்மார்க்கத்தின் பொருள் குணத்தினது லக்ஷியத்தை அனுசந்தானஞ் செய்வது. குணமென்பது யாது? சத்துவகுணம். இயற்கை உண்மை ஏகதேசமான சத்துவ குணத்தின் சம்பந்தமுடைய மார்க்கமே சமய சன்மார்க்கம். சத்துவ சம்பந்தமுடைய மார்க்கம் யாதெனில்: சத்போதம், சத்கர்மம், சத்சங்கம், சத்காலம், சத்விசாரம், சத்பாத்திரம், சற்சனம், சற்செய்கை முதலியனவும் சத்துவ சம்பந்தம் உடையன. இதனியல்பாவன: கொல்லாமை, பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரியநிக்கிரகம், ஆன்ம இயற்கைக் குணமாகிய ஜீவகாருண்யம். இது சத்துவ குணத்தின் வாச்சியார்த்தம். இவ்வண்ணம் வாச்சியானுபவம் பெற்றுச் சொரூபானுபவமாகிய சாதனமே சமய சன்மார்க்கம்.

சமயாதீத மாவது மதம். மத சன்மார்க்கத்தின் பொருள் நிர்க்குண லக்ஷியஞ் செய்வது. நிர்க்குணமாவது பூர்வகுண மாகிய சத்துவத்தின் வாச்சியானுபவம் பெற்று லட்சியானுபவம் பெறுதல். யாதெனில்: சோகம், சிவோகம், தத்வமசி, சிவத்துவமசி என்னும் வாக்கியத்தில் முக்கியானுபவம். அனுபவம் என்பது யாது?.... சத்துவகுண நிர்க்குண லட்சியத்திற்கு மார்க்கம் நான்கு: எவை எனில் சத்துவ குணத்தின் முதல் விளைவு தன்னடிமையாகப் பலரையும் பாவித்தல், இரண்டாவது புத்திரனாகப் பாவித்தல், மூன்றாவது சிநேகிதனைப் போலப் பாவித்தல், நான்காவது தன்னைப்போலப் பாவித்தல். இது ஜீவ நியாயம். இவ்வாறே தான் கடவுளுக்கு அடிமையாதல், புத்திரனாதல், சிநேகனாதல், கடவுளேதானாதல். இது சத்துவகுண லட்சியார்த்த மாகிய மத சன்மார்க்க முடிவு.

சத்துவகுண விளைவு என்பதற்குப் பொருள் சத்துவகுணத்தின் முக்கிய லட்சியமாகிய எல்லாம் வல்ல சர்வ சித்தியோடு ஞானசித்தியைப் பெறுதல். நெல்லை விதைத்தான் என்பதன் பொருள் உழுதல் தொடங்கிக் கிருகத்தில் சேர்த்து அனுபவிக்கிற பரியந்தம் அடங்கியிருப்பதுபோல் சன்மார்க்கம் என்பது சாதாரணம் முதல் அசாதாரணம் ஈறாக அடங்கிய பொருளெனக் கொள்க. குண நிர்க்குண வாச்சிய லட்சியார்த்தமாகிய சமய மதத்தின் அனுபவ மல்லாதது சுத்த சன்மார்க்கம். இம் மார்க்கத்திற்கு மேற்குறித்த மார்க்கங்கள் அல்லாதனவே யன்றி இல்லாதன வல்ல.

சுத்த சன்மார்க்கந்தான் யாதெனில்: சுத்தம் என்பது ஒன்றுமல்லாதது. சுத்தம் என்பது சன்மார்க்க மென்னுஞ் சொல்லுக்குப் பூர்வம் வந்ததால், மேற்குறித்த சமய மதானுபவங்களைக் கடந்தது. சத்மார்க்கம் என்னும் பொருட்கு அர்த்தம் நான்கு வகை: அஃது பூர்வாதி உத்தரோத்தர பரியந்தம். இதன் முக்கிய லட்சியம் சுத்த சன்மார்க்க அனுபவ ஸ்தானமாகிய சுத்த சிவ துரியாதீத நிலை பெறில் விளங்கும். ஏகதேசத்தில் ஒருவாறு பூர்வம் என்பதற்குப் பொருள்: சிருஷ்டியாதி அனுக்கிரக மீறாகச் செய்யும் பிரமாதி சதாசிவ மீறாகவுள்ள பஞ்ச கிருத்திய கர்த்தர்களி லொவ்வொரு கிருத்தியத்தின் விரிவு ஐந்தாக விரிந்த கர்த்தர் பேதம் இருபத்தைந்தாக விரிந்த மஹாசதாசிவாந்த அனுபவ காலத்தை அறுபத்து நாலாயிரத்தில் பெருக்கிய கால அளவு எவ்வளவோ அக்கால அளவு சுத்த மகா சதா சிவானுபவத்தைப் பெற்றுச் சுத்த தேகியா யிருப்பது. சத்தென்பது பரிபாஷை அது அனந்த தாத்பர்யங்களைக்கொண்டு ஓர் வாக்கிய பதமாய் நின்றது. மார்க்கம் என்பது யாதெனில்: துவாரம், வழி, வழியென்பது சத்தென்னும் பொருளின் உண்மையைத் தெரிவிக்கிற மார்க்கம். ஆதலால், எவ்வகையினும் உயர்வுடையது பாவனாதீத அதீதம், குணாதீதஅதீதம், லட்சியாதீதஅதீதம், வாச்சியாதீதஅதீதம் ஆகிய சுத்த சன்மார்க்கம்.
மேற்படி மார்க்கத்தின் ஏகதேசம் அடியிற் குறிக்கும் அனுபவங்கள்: எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வகைத் தடையும் வாராத சுத்தமாதி ஞானதேக சித்தியும், அண்ட பிண்ட தத்துவங்களைச் சுதந்தரத்தில் நடத்தும் தனிப்பெரும் வல்லமையும், ஏமரவுப்பிய பிரேதஜீவிதாதி சித்தியும், வஸ்துப் பிரத்யக்ஷானுபவ சித்தியும் ஆகிய இவற்றை ஒருங்கே அடைவது மேற்குறித்த மார்க்கத்தின் முடிபு. ஒருவாறு.
சத் என்னும் சொல் பரிபாஷை என்பதற்குக் குழூஉக் குறியாக இதன் கீழ்வரும் சில மந்திர வாசக பதவர்ணாதிகளை உணர்க. காரண மாத்திரமாய் விளங்கா நின்ற விந்து நாத முதலியனவும், காரிய காரண மாத்திரமாய் விளங்கா நின்ற அம், அங், சிங், வங், மங், சிவா, வசி, ஓம் முதலியவும், காரிய மாத்திரமாய் விளங்கா நின்ற ஹரி, சச்சிதானந்தம், பரிபூரணம், ஜோதியுட் ஜோதி, சிவயவசி, சிவயநம, நமசிவய, நாராயணாயநம, சரவணபவாயநம முதலியவும் இவ்வண்ணம் குறித்த பரிபாஷைகளின் உண்மை ஆன்ம அனுபவத்திலும் வகர தகர வித்தையிலும் விளங்கும்.
மேலும், மேற்குறித்த வண்ணம் தத்துவங்களை உபாசித்தும், அர்ச்சித்தும், தத்துவாதீதாதீதத்தைத் தியானித்தும், இடையில் ஜபித்தும், கரணலயமாகச் சமாதி செய்தும், தத்துவச் சேட்டைகளை அடக்காநின்ற விரதமிருந்தும், சாதாரண யோகபாகத்தில் மூச்சடக்கியும் சாதகர்கள் மேற்குறித்த வண்ணம் செய்வார்கள். சாத்தியர்கட்கே கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிஷ்டைகூடல் என்னும் நான்கும் கடந்து அவர்கள் ஆருடராக நிற்பதால் சாதனமொன்றும் வேண்டுவதில்லை. மேற்படி சாத்தியர்களே சுத்ததேகிகள். அவர்கள் அனுபவத்தை விரிக்கில் பெருகும்.

சன்மார்க்க சங்கம்
சமரச வேத சன்மார்க்க சங்க மென்பதற்குப் பொருள்: எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாகிய அறிவு நூலின் முடிவான நான்காவது மார்க்கத்தை அனுஷ்டிக்கின்ற கூட்டமென்று கொள்க. மார்க்கம் நான்காவன: தாச மார்க்கம், சத்புத்திர மார்க்கம், மித்திர மார்க்கம், சன்மார்க்கம்.

சத்திய மார்க்கம்
ஷடாந்தங்களினது அனுபவம் ஒன்றானாலும் காலம் இடம் முதலியவற்றால் அவை வேறுபடும். ஆதலால் ஷடாந்தங்களு மிப்போது வெளிக்கு வியாபகமில்லாம லிருக்கின்றன. வேதாந்தம் சித்தாந்தம் என்னும் இந்த 2-ல் வேதாந்தத்தில் போதாந்தமும் யோகாந்தமும், சித்தாந்தத்தில் நாதாந்தமும், கலாந்தமும் அடங்கியிருக்கின்றன. ஆதலால் வேதாந்த சித்தாந்தமே சிறந்தது. வேதாந்த அந்தாதீத சித்தாந்த அந்தாதீத சுத்த சன்மார்க்கமே நீடூழி அழியாத சத்திய மார்க்கம்.

சமரசம்
சமரசமென்பது யாது? எல்லா அந்தங்களினது அந்தமும் தனக்குப் பூர்வமாக்கித் தான் உத்தரத்தில் நின்று மருவியதால் சமரசமாயிற்று. இதற்கு நியாயம்: விந்து பரவிந்து இவ்விரண்டையும் மறுக்கச் சுத்த விந்துவானது போலும்: சிவம் பரசிவம் இவ்விரண்டையும் மறுக்கச் சுத்த சிவமானது போலும்; சன்மார்க்கம் சிவசன்மார்க்கம் இவ்விரண்டையும் மறுத்தது சுத்த சன்மார்க்கம். ஆகவே ஷடாந்த சமரசசுத்த சன்மார்க்க மென்று மருவியது.

சத்துவகுண லட்சியம்
சன்மார்க்க மென்பது யாது? அது 3 வகைப்படும். சமய சன்மார்க்கம், மத சன்மார்க்கம், சுத்த சன்மார்க்கம்.
சமய சன்மார்க்கமாவது சத்துவகுண லட்சியானு சந்தானம். சத்துவகுண சம்பந்தமுடைய மார்க்கமே சமய சன்மார்க்கம். சத்துவ சம்பந்தமுடைய சேர்க்கை யெல்லாம் சன்மார்க்கம். அதாவது சத்போதம், சத்கர்மம், சத்ஸங்கம், சத்காலம், சத்விசாரம், சத்பாத்திரம், சத்ஜனம், சத்செய்கை முதலியவை சத்துவகுண சம்பந்தமானவையாம். சத்துவகுண இயல்பாவது கொல்லாமை, பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரிய நிக்கிரகம், ஜீவகாருண்ணியம். இது சத்துவ குணத்தின் வாச்சியார்த்தம். இந்த உண்மையைக் கொண்டு சத்துவ குணத்தின் வாச்சியத்தை லட்சியம் செய்வதே சமய சன்மார்க்கம்.
சமயாதீத மத சன்மார்க்கம் - நிர்க்குண லட்சியமாகிய சத்துவ குணத்தின் லட்சியார்த்தத்தைக் கொள்வது மத சன்மார்க்கம். அதாவது சோகம், சிவோகம், அவன், அவள், நான் என்னும் அனுபவம். அதாவது சத்துவகுணத்திற்கு மார்க்கம் 4. சத்துவகுணத்தின் முதல் விளைவு தன்னடிமையாகப் பலரையும் பாவித்தல், 2-வது புத்திரனைப் போல் பாவித்தல், 3-வது சினேகிதனைப்போல் பாவித்தல், 4-வது தன்னைப் போல் பாவித்தல். இது ஜீவ நியாயம். இவ்வாறே தான் கடவுளுக்கு அடிமையாகுதல், புத்திரனாகுதல், சிநேகிதனாகுதல், கடவுளே தானாகுதல். இது சத்துவ குண லட்சியார்த்தமாகிய மத சன்மார்க்கத்தின் முடிபு. சத்துவ குணத்தின் விளைவென்று சொன்னதற்குப் பொருள் சத்துவ குணத்தின் முக்கிய லட்சியமாகிய எல்லாம் வல்ல சர்வசித்தியோடு ஞானதேகம் பெறுகிறவரையில் உள்ள அனுபவம் நெல் விளைத்தா னென்பதன் பொருள் உழுதல் தொடங்கிக் கிருகத்தில் சேர்க்கிறவரையில் அதன் தாத்பரிய மடங்கி யிருப்பது போல்.

சுத்தம்

சுத்த சன்மார்க்கமாவது குணநிர்க்குண வாச்சிய லட்சியார்த்தமாகிய சமய மதங்களினது அனுபவமன்று. சுத்த சன்மார்க்க மென்பது சத் சன்மார்க்கமேயாம். சுத்தமென்பது ஒன்றுமில்லாதது. ஆதலால், சுத்தமென்பது சன்மார்க்கம் என்னும் சொல்லுக்கு முன் வந்தமையால், முன் சொன்ன சமயமதங்களைத் தாண்டினது. அதன் அனுபவங்களையும் கடந்தது.

சத்மார்க்கம்
சத்மார்க்கம் என்பதற்குப் பொருள் 4 வகை: பூர்வம், பூர்வ பூர்வம், உத்தரம், உத்தரோத்தரம். ஆதலால் இதன் முக்கிய லக்ஷ்யம் இனிச் சுத்த சன்மார்க்கத்தில் வெளிப்படும். பூர்வம் என்பதற்குத் தாத்பரியம் ஒருவாறு: சிருஷ்டி, ஸ்திதி, சம்மாரம், திரோபவம், அனுக்கிரஹம் எனும் பஞ்சகிருத்திய தத்துவங்களைக் கர்த்தாவாக வழங்கி வருகிற பிரமா விஷ்ணு ருத்திரன் மயேசுரன் சதாசிவமென்னும் தத்துவங்களில், சிருஷ்டியில் சிருஷ்டி, மேற்படி ஸ்திதி, மேற்படி சம்மாரம், சிருஷ்டியில் திரோபவம், மேற்படி அனுக்கிரஹம் இதுபோல் 5 ஆக விரிந்த தத்துவங்கள் 25. இந்த இருபத்தைந்தையும் அறுபத்து நாலாயிரத்தில் பெருக்கிய காலம் எவ்வளவோ அவ்வளவு கால பரியந்தம் மகாசதாசிவ அனுபவத்தைப் பெற்று, சுத்த தேகியாக இருப்பது. வருஷம் தொகை மொத்தம் ஒரு கோடி அறுபது லக்ஷம்.
சத்தென்பது பரிபாஷை. குழூஉக்குறிப் பெயர். அனந்த தாத்பரியத்தைக் கொண்டு ஓர் மொழியானது. மார்க்கமென்பது வழி. வழியென்பது சத்தென்னும் பொருளின் உண்மையைத் தெரிவிக்கின்ற மார்க்கம். ஆகையால் எவ்வகையிலும் உயர்வுடையது சுத்த சன்மார்க்கம்.
சன்மார்க்கத்தின் ஏகதேசமென்பது எந்தக் காலத்தும் எவ்வகைத் தடைகளும் இன்றி அழியாத சுத்தப் பிரணவ ஞானதேகமென்கின்ற தேகசித்தியும் எல்லாம் வல்ல சர்வசித்தியும் பெற்றுக்கொள்வது.

சர்வ சித்தி
சமய சன்மார்க்கம் மத சன்மார்க்கம் ஆகிய இவற்றிற்குள் அடங்கிய சன்மார்க்கம் அனந்தம். அதில் சமய சன்மார்க்கம் 36. அதை விரிக்க ஆறுகோடியாம். இதுபோலவே மதத்தினும் 36. மேற்குறித்த சமயம் மதங்களிலும் ஏமசித்தி தேகசித்தி முதலியவை யுண்டு. அவை சமய மதங்களில் சொல்லுகிற கர்த்தா மூர்த்திகள் ஈசுவரன் பிரமம் சிவம் முதலிய தத்துவங்களின் காலப் பிரமாண பரியந்தம் இருப்பதொழிய, அதற்குமேல் இரா.
சமய மதங்களினும் சமரசம் உண்டு. வேதாந்த சித்தாந்த சமரசம், யோகாந்த கலாந்த சமரசம், போதாந்த நாதாந்த சமரசம் இதற்கு அதீதம் ஷடாந்த சமரசம். இதற்கு அதீதம் சன்மார்க்க சமரசம். ஆதலால் சுத்த சமரசத்தில் சன்மார்க்கத்தைச் சேர்க்கச் சுத்த சமரச சன்மார்க்கமாம். இவை பூர்வோத்தர நியாயப்படி, கடைதலைப் பூட்டாக, சமரசசுத்த சன்மார்க்கமென மருவின. இதற்குச் சாதனம் ஒருவாறு ஷடாந்த சமரசம்.
ஆன்மாவுக்கு அனன்னிய அருள் எப்படியோ, அதைப்போல் சுத்த சன்மார்க்கத்துக்கு அனன்னியமாக இருப்பது சர்வ சித்தியாம். சத்த சன்மார்க்கத்துக்குப் படி மூன்று. ஷடாந்தங்களின் பொதுவாகிய ஷடாந்த சன்மார்க்கம் 1, சமரச சன்மார்க்கம் 1, சுத்த சன்மார்க்கம் 1, ஆக 3. ஆதலால் சுத்த சன்மார்க்கத்திற்குப் படிகள் 3: சிற்சபை 1, பொற்சபை 1, சுத்த ஞானசபை 1, ஆக 3. இவைகள் மூன்றுந்தான் படிகளாக இருக்கும்.
சுத்த தேகத்தினுடைய அனுபவத்தை விரித்தால் விசேஷமாம். சுத்த சன்மார்க்கம் விளங்குங் காலத்தில் எல்லாம் ஆண்டவர் வெளிப்படையாய் தெரிவிப்பார்.

பரிபாஷையும் சுத்த சன்மார்க்கமும்
பரிபாஷை - அங், சிங், வங், பங், அம், விந்து, நாதம், சிவ, வசி, ஓம், அரி, அர, சத்து, சித்து, ஆனந்தம், பரிபூரணம், ஜோதி, சிவயவசி, சிவாயநம, நமசிவாய, ஆ, ஈ, ஊ, ஐ, நாராயணாயநம, சிவோகம், சோகம் முதலியவாகச் சமயமதங்களில் குறிக்கப்பட்ட மந்திர தந்திர ரகசிய வாசக வாச்சிய வசன அக்ஷர தத்துவ பவுதிக முதலியவையும் பரிபாஷையாம். மேற்குறித்த வண்ணம் ஜபித்தும், தியானித்தும், அர்ச்சித்தும், உபாசித்தும், சமாதிசெய்தும், சுவாசத்தை அடக்கியும், விரதமிருந்தும், இவை போன்ற வேறு வகைத் தொழிற்பட்டும் பிரயாசை யெடுப்பது வியர்த்தம். சுத்த சன்மார்க்கமே சிறந்தது. பாவனாதீதாதீதம், குணாதீதாதீதம், வாச்சியாதீதாதீதம், லட்சியாதீதாதீதம் ஆகிய சுத்த சன்மார்க்கப் பொருளாகிய அருட்பெருஞ் சோதி ஆண்டவரால் இதனது உண்மைகள் இனி வெளிப்படும்.

சாத்திய நிலை
சமய மத சன்மார்க்கிகளில் தாயுமான சுவாமிகளும் இன்னும் அனேக பெரியோர்களும் சுத்தப் பரப் பிரமத்தினிடத்தில் இரண்டறக் கலந்துவிட்டதாக முறையிடுவது வாஸ்தவமா அவாஸ்தவமாவென்றால், அவாஸ்தவம். சுத்த சன்மார்க்கம் ஒன்றுக்கே சாத்தியம் கைகூடும். என்றும் சாகாத நிலையைப் பெற்றுச் சர்வ சித்தி வல்லபமும் பெறக்கூடும். மற்றச் சமய மத மார்க்கங்களெல்லாம் சுத்த சன்மார்க்கத்துக்குச் செல்லக் கீழ்ப்படிக ளாதலால், அவற்றில் ஐக்கிய மென்பதே யில்லை. தாயுமானவர் முதலானவர்கள் சுத்த சன்மார்க்கிகள் அல்லர். மத சன்மார்க்கிகள் என்று ஒருவாறு சொல்லலாம். இதில் நித்தியதேகம் கிடையாது. இது சாதக மார்க்கமே அன்றிச் சாத்தியமல்ல. நாளைச் சுத்த சன்மார்க்கம் வழங்கும்போது இவர்கள் யாவரும் உயிர்பெற்று மீள வருவார்கள். முன்னிருந்த அளவைக் காட்டிலும் விசேஷ ஞானத்தோடு சுத்த சன்மார்க்கத்துக் குரியவர்களாய் வருவார்கள்; சாத்தியர்களாய் இரண்டறக் கலப்பார்கள்.

95. சுத்த சன்மார்க்கக் கொள்கை
சர்வசித்தியையுடைய தனித்தலைமைப் பதியாகிய ஆண்டவரை நோக்கி - தபசு செய்து சிருஷ்டியாதி பஞ்ச கிருத்தியங்களையும் பெற்றுக்கொண்ட மூர்த்திகளாகியவர் ஒரு தொழிலுடைய பிரமாவும், இரண்டு சித்தியுடைய விஷ்ணுவும், மூன்று சித்தியுடைய ருத்திரனும் - இதுபோன்ற மற்றையர்களும், மேற்குறித்த மூவரால் ஏற்படுத்திய தத்துவசித்திக் கற்பனைகளாகிய சமய மத மார்க்கங்களை அனுஷ்டித்து, அவர்களையே கர்த்தாக்களாக வணங்கி வழிபாடு செய்துவருகிற இது வரையிலுமுள்ள அணுக்கள் மேற்குறித்தவர்களது பதப்பிராப்தியை - மேற்படி அணுக்கள் - லேசம் பெற்றுக் கொண்டார்கள். ஆதலால் இவர்களை அசைப்பித்து அனுக்கிரகிக்கும் சர்வ சித்தியையுடைய தனித்தலைமைக் கடவுளின் சித்தியின் லேசங்கள் இவர்களுக்குள. ஆதலால் இவர்கள் அந்தச் சர்வ சித்தியை யுடைய கடவுளுக்குக் கோடி கோடிப்பங்கு தாழ்ந்த தரத்திலிருக்கின்றார்கள். ஆகவே சமயத் தேவர்களை வழிபாடு செய்வது அவசியமல்ல. மேற்குறித்தவர்கள் அற்ப சித்தியைப் பெற்று, அதில் மகிழ்ந்து அகங்கரித்து, மேல் படிகள் ஏறவேண்டியவைகளை ஏறிப் பூரண சித்தியை யடையாமல் தடைப்பட்டு நிற்றல்போல், இங்கு மற்றவைகளை உன்னி அவலமடைந்து நில்லாமல், சர்வ சித்தியுடைய கடவுள் ஒருவருண்டென்று அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து, பூரண சித்தியைப் பெற வேண்டுவது சன்மார்க்கக் கொள்கை. மேலும் தனித்தலைவன் லக்ஷியந் தவிர அநித்திய சடதுக்காதிகளைப் பொருட்படுத்தி உபாசனாதி மார்க்கமாய் வழிபடுவது கொள்கை யல்ல. உபாசனை முதலியவற்றால் வழிபடுதலும் மேற் குறித்த தலைவனைக் குறித்ததே தவிர வேறில்லை.
இதற்குப் பிரமாணம்: "சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன்" என்னும் திருஅருட்பாசுரத் திருஉள்ளக்கிடையானும், "அறங் குலவு தோழி இங்கே"* என்னும் அருட்பாசுர உள்ளக் கிடையானும் பெரும்பதி தெரிவித்தார். இதன்றி, திருக்கதவந் திருக்காப்பிடுவதற்கு முந்தின இரவில் "இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை. யாதெனில்: இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்" என்ற திருவார்த்தை யதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாக வுடையது கடமை.
________________________________________

* திருஅருட்பா 5452, 5695
________________________________________

சன்மார்க்கக் கொள்கை
சர்வசித்தியையுடைய தனித்தலைமைப் பதியாகிய ஆண்டவரை வேண்டித் தபசுசெய்து சிருட்டிக்குஞ் சித்தியைப் பெற்றுக்கொண்டவன் பிரமன்; சிருட்டி, திதி, ஆகிய சித்தியைப் பெற்றுக்கொண்டவன் விஷ்ணு; சிருட்டி, திதி, சங்காரம் ஆகிய சித்தியைப் பெற்றுக் கொண்டவன் ருத்திரன். இவர்கள் ஏற்படுத்திய சமய மார்க்கங்களை அனுட்டிக்கின்றவர்கள் இவர்களை அந்தந்தச் சமயங்களுக்குத் தெய்வங்களாக வணங்கி வழிபாடு செய்துவந்தார்கள். இம் மூர்த்திகளுடைய சித்திகள் சர்வசித்தியையுடைய கடவுள் சித்தியின் இலேசங்கள்; அதில் ஏகதேசம்கூட அல்ல. ஆகையால், இவர்கள் அந்தச் சர்வசித்தியையுடைய கடவுளுக்கு ஒப்பாகார்கள்; கோடி கோடிப் பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கின்றார்கள். ஆகையால், சமயத்தெய்வங்களை வழிபாடு செய்து, அந்தச் சமயத் தெய்வங்கள் பெற்றுக்கொண்ட அற்ப சித்தியில் அவர்கள் மயங்கி மகிழ்ந்து அகங்கரித்து மேலேறவேண்டிய படிகளெல்லாம் ஏறிப் பூரண சித்தியை யடையாமல் தடைப்பட்டு நிற்றல்போல் நில்லாமல், சர்வசித்தியையுடைய கடவுளொருவர் உண்டென்றும், அவரை உண்மையன்பால் வழிபாடு செய்து பூரண சித்தியைப் பெற வேண்டுமென்றும் கொள்ள வேண்டுவது சன்மார்க்க சங்கத்தவர்களுடைய கொள்கை.இதை யாண்டவர் தெரிவித்தார்.
ஆங்கீரச வருடம் ஆவணி மாதம் **. இதற்குப் பிரமாணம்: அருட்பிரகாச வள்ளலார் அருட்பாவில் "சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன்" "அறங்குலவு தோழியிங்கே நீயுரைத்த வார்த்தை" என்னும் இரண்டு திருப்பாசுரங்களின் தாத்பர்யத்தால் காண்க.

96. சுத்த சன்மார்க்க முடிபு

சன்மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியைத் தெரிவிப்பதேயன்றி வேறில்லை. சாகிறவன் சன்மார்க்க நிலையைப் பெற்றவனல்லன். சாகாதவனே சன்மார்க்கி.
97. சாகாத கல்வி
வேதங்கள் முக்கியம் சாகாதகல்வியைச் சொல்லியிருக்கின்றன. தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் சாகாத கல்வியைக் குறித்துச் சொல்லியிருக்கிறது. அதைத் தக்க ஆசிரியர் மூலமாய்த் தெரிந்து கொள்ளலாம்.

98. சாகாக்கல்விக்கு ஏது
தூக்கத்தை ஒழித்தால் ஆயுசு விருத்தியாகும். ஒருவன் ஒரு நாளைக்கு இரண்டரை நாழிகை தூங்கப் பழக்கஞ் செய்வானானால், அவன் ஆயிரம் வருடஞ் சீவித்திருப்பான். எப்போதும் மறப்பில்லாமல் ஆசானுடைய திருவடியை ஞாபகஞ் செய்துகொண்டி ருப்பதே சாகாத கல்விக்கு ஏதுவாம்.
(வேறுகுறிப்பு)
ஒருவன் இரண்டரை நாழிகை தூங்கப் பழக்கஞ் செய்வானானால், அவன் ஆயிரம் வருஷம் ஜீவித்திருப்பான். எப்போதுஞ் சலிப்பில்லாமல் சுத்தக் கரணமாய் அருள் வடிவாய்த் தானாக நிற்றலே சாகாக் கல்விக்கு ஏது.
99. சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்
சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள். மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் - இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள். அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும். அப்படி இல்லாது இவ்விடம்* காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள். அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள்.
________________________________________

* இவ்விடம் என்பது மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தைக் குறிக்கும். அடிகள் அங்கிருந்த காலத்திற் செய்த உபதேசம்.
________________________________________

100. சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம் புருஷார்த்தம்
நாம் பெறும் புருஷார்த்தம் நான்கு. அவையாவன:
ஏமசித்தி.
சாகாக்கல்வி.
கடவுணிலை யறிந்து அம்மயமாதல்.
தத்துவநிக்கிரகம் ஆக 4.
ஒழுக்கம்
இவை பெறுவதற்கு ஒழுக்கம் யாதெனில்: நான்கு வகைப்படும்.
1. இந்திரிய ஒழுக்கம்.
2. கரண ஒழுக்கம்.
3. ஜீவ ஒழுக்கம்.
4. ஆன்ம ஒழுக்கம்.

1. இந்திரிய ஒழுக்கம்

இவற்றில் இந்திரிய ஒழுக்கம், கன்மேந்திரிய ஒழுக்கம் ஞானேந்திரிய ஒழுக்கமென இருவகைப்பட்டது. கொடிய சொல் செவிபுகாது நாத முதலிய ஸ்தோத்திரங்களைக் கேட்டல்; அசுத்த பரிசமில்லாது தயாவணமாகப் பரிசித்தல்; குரூரமாகப் பாராதிருத்தல்; உருசி விரும்பாதிருத்தல்; சுகந்தம் விரும்பாதிருத்தல்; இன்சொல்லாடல்; பொய் சொல்லாதிருத்தல்; ஜீவஹ’ம்சை நேரிடுங் காலத்தில் எவ்விதத் தந்திரத்தினாலாவது தடை செய்தல்; பெரியோர்கள் எழுந்தருளி யிருக்கும் இடங்களுக்குச் செல்லுதல்; ஜீவோபகார நிமித்தமாய் சாதுக்கள் வாசஸ்தானங்களிலும் வேறு இடங்களிலும் சஞ்சரித்தல்; நன்முயற்சியிற்கொடுத்தலெடுத்தலாதி செய்தல்; மலஜல உபாதிகளை அக்கிர மாதிக்கிரம மின்றி கிரமத்தில் நிற்கச் செய்வித்தல், எவ்விதமெனில், மிதஆகாரத்தாலும் மித போகத்தாலும் செய்வித்தல், கால பேதத்தாலும் உஷ்ண ஆபாசத்தாலும் தடை நேர்ந்தால், ஓஷதி வகைகளாலும் பௌதிக மூலங்களாலும் சரபேத அஸ்தபரிச தந்திரத்தாலும் மூலாங்கப் பிரணவ த்யான சங்கற்பத்தாலும் செய்வித்தல், சுக்கிலத்தை அக்கிரம் அதிக்கிரமத்தில் விடாது நிற்றல் - மந்ததரம், தீவிரதரம் - எவ்வகையிலுஞ் சுக்கிலம் வெளிப்படாமல் செய்வித்தல்; இடைவிடாது கோசத்தைக் கவசத்தால் மறைத்தல், இதுபோல் உச்சி மார்பு முதலிய அங்கங்களையும் மறைத்தல்; சஞ்சரிக்குங் காலத்தில் காலிற் கவசந்தரித்தல்; அழுக்காடை உடுத்தாதிருத்தல் முதலியன இந்திரிய ஒழுக்கமாம்.

2. கரண ஒழுக்கம்

கரண ஒழுக்கமாவது: மனத்தைச் சிற்சபை என்னும் அறிவாகிருதி ஆக்கல்; இதன் பூர்வத்தில் புருவமத்தியில் நிற்கச்செய்தல். இதன்றி துர்விஷயத்தைப் பற்றாதிருக்கச் செய்தல்; சீவதோஷம் விசாரியா திருத்தல்; தன்மதிப்பில்லாதிருத்தல்; இராகாதி நீக்கி இயற்கைச் சத்துவ மயமாதல், தனது தத்துவங்களை அக்கிரமத்திற் செல்லாது கண்டித்தல்.
3. ஜீவ ஒழுக்கம்
ஜீவ ஒழுக்கமாவது: ஆண்மக்கள் பெண்மக்கள் முதலிய யாவர்களிடத்திலும், ஜாதி, சமயம், மதம், ஆசிரமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திரசம்பந்தம், தேசமார்க்கம், உயர்ந்தோர் தாழ்ந்தோரென்னும் பேதம் நீங்கி, எல்லாரும் தம்மவர்களாய்ச் சமத்திற் கொள்ளுவது.

4. ஆன்ம ஒழுக்கம்

ஆன்ம ஒழுக்கமாவது: யானை முதல் எறும்பீறாகத் தோன்றிய ஜீவர்களினது சூக்குமம் தனித் தலைவன் ஆதலால் - அவ்வச் சீவர்களில் ஜீவான்மாவே திருச்சபையாய் அதனுள் பரமான்மாவே பதியாய் நிற்பதால் - யாதும் நீக்கமற எவ்விடத்தும் பேதமற்று எல்லாந் தானாக நிற்றல்.
இவ்வண்ண நின்றால் மேற்குறித்த அரும்புருஷார்த்தங் கைகூடும். ஒருமை யென்பது தனது அறிவு ஒழுக்கம் ஒத்த இடத்தில், தானே கூடும்; மற்ற இடத்தில், தன்னால் இதரர்களுக்கு இம்சை இல்லாது அவர்கள் செய்யினும் தான் சகித்து அடங்கி நிற்பது. ஆங்கீரச வருடம் கார்த்திகை மாதம் 3ஆம் நாள்.
நான்கு புருஷார்த்தம்
மனிதன் முக்கியமாய்ப் பெற்றுக்கொள்ள வேண்டியன அடியில் குறித்த 4 விஷயங்களாம். அவையாவன: ஏமசித்திசெய்தல், சாகாத கல்வி கற்றல், கடவுணிலையறிதல்-அம்மயமாகுதல், தத்துவநிக்கிரகஞ் செய்தல். இந்நான்கையும் பூரணமாக அடைதல் வேண்டும்.
நான்கு வகை ஒழுக்கம்
ஒழுக்கம் 4 வகையாம். 1. இந்திரிய ஒழுக்கம், 2. கரண ஒழுக்கம், 3. ஜீவ ஒழுக்கம், 4. ஆன்ம ஒழுக்கம்.
1. இந்திரிய ஒழுக்கம்
இவற்றுள் இந்திரிய ஒழுக்கம் ஆவது: கொடிய வார்த்தை முதலியவை யாடாமலும் செவிபுகாமலும் நிற்றல்; நாத முதலிய ஸ்தோத்திரங்களை அதிசயிக்காமல் உற்றுக்கேட்டல்; மற்றவைகளைக் கேளாதிருத்தல். அசுத்தங்களைத் தீண்டாதிருத்தல்; கொடூரமானவற்றைக் கேளாதிருத்தல், பாராதிருத்தல்; ருசியின் மேல் விருப்பமில்லா திருத்தல்; சுகந்தம் விருப்ப மில்லாமல் அனுபவித்தல்; இனிய வார்த்தை யாடுதல்; பொய் சொல்லாதிருத்தல்; ஜீவர்களுக்கு இம்சை நேரிடுங் காலத்தில் அதை எந்தவிதத் தந்திரத்திலாவது தடைசெய்தல்; பெரியோர்கள் எழுந்தருளி யிருக்கும் இடத்திற்குச் செல்லுதல்; உயிர்களுக்கு உபகார நிமித்தம் சஞ்சரித்தல்; உயிர்களுக்கு மனத்தாலும், வாக்காலும், சரீரத்தாலும், தனத்தாலும் தன் சத்தியின் அளவு மீறாமல் உபகரித்தல்; மலஜலாதிகளை அளவு மீறாமலும் குறையாமலும் கிரமமாய்க் கழியும்படி சரபேத அஸ்தபரிச தந்திரத்தாலும், ஓஷதிகளாலும், ஆகாரத்தாலும், பௌதிகப் பக்குவத்தாலும் செய்வித்தல் முதலியன இந்திரிய ஒழுக்கமாம்.
2. கரண ஒழுக்கம்
கரண ஒழுக்கமாவது: உண்மையான கடவுள் ஒருவரே என்று சத்திய சங்கல்பம் கொள்ளல்; சிற்சபையின்கண் மனஞ் செல்லுவது தவிர, வேறு எந்தவகை ஆபாசத்திலும் செல்லாமல் அதை இழுத்து மேற்குறித்த இடத்தில், அதாவது, கடவுளிடத்தில் நிறுத்துவது; பிறர்குற்றம் விசாரியாது இருத்தல்; தன்னை மதியாதிருத்தல், செயற்கைக் குணங்களா லுண்டாகிய கெடுதிகளை நீக்கி இயற்கையாகிய சத்துவமயமாக நிற்றல்; பிறர்மேல் கோபியா திருத்தல்; தனது சத்துருக்களாகிய தத்துவங்கள் - அரிஷ்டவர்க்கங்கள் - மேல் கோபித்தல்; அக்கிரம அதிக்கிரமப் புணர்ச்சி செய்யாதிருத்தல் முதலிய இவற்றையே கரண ஒழுக்க மென்பர்.
3. ஜீவ ஒழுக்கம்
ஜீவ ஒழுக்கம்: எல்லா மனிதரிடத்தும் ஜாதி, சமயம், மதம், ஆசிரமம், கோத்திரம், சூத்திரம், குலம், சாத்திரம், தேகமார்க்கம், உயர்வு, தாழ்வு முதலியனவாகிய பேதம் அற்றுத் தானாக நிற்றலாம்.
4. ஆன்ம ஒழுக்கம்
ஆன்ம ஒழுக்கம்: எண்பத்து நான்கு லக்ஷம் யோனிபேத முள்ள ஜீவர்களிடத்திலும் இரக்கம் வைத்து, ஆன்மாவே சபையாகவும் அதனுள்ளொளியே பதியாகவும் கண்டு பூரணமாக நிற்றல் ஆன்ம ஒழுக்கமாம்.
101. சுத்தசன்மாக்க சாதனம் (பரோபகாரம், சத்விசாரம்)
பரோபகார மென்பது யாது? தேகத்தாலும் கரணத்தாலும் இந்திரியத்தாலும் திரவியத்தாலும் ஆன்மாக்களுக்கு உபகரித்தல், திரவியம் நேராத பட்சத்தில், திரிகரண சுத்தியாய் ஆன்மநேய சம்பந்தமான தயா விசாரத்தோடு எல்லாச் சீவர்களினது வாட்டத்தைக் குறித்தும் பிரார்த்தித்தல். சத்விசாரமென்பது கடவுளினது புகழையும் ஆன்மாவின் தரத்தையும் நமது சிறுமையையும் கடவுளின் தரத்தையும் இடைவிடாது விசாரித்து, நமது குறையெல்லாம் கடவுளின் திருவடியில் விண்ணப்பிப்பது. சிவானுபவமாகிய தேகத்திரயம் பெறுவதற்கு மேற்குறித்த இரண்டு துவாரந் தவிர வேறில்லை. மேலும் தயவென்பது இரண்டு வகைப்படும். யாவெனில் கடவுள் தயை ஜீவ தயை ஆகிய இரண்டு. கடவுள் தயை யென்பது இறந்த உயிரை எழுப்புதல், தாவரங்களுக்கு மழை பெய்வித்தல், மிருக பட்சி ஊர்வன வாதிகளுக்கு ஆகாரம் நியதியின்படி அருட்சத்தியால் ஊட்டி வைத்தல், சோம சூரி யாக்கினிப் பிரகாசங்களைக் கால தேச வண்ணம் பிரகாசஞ் செய்வித்தல், பக்குவிகளுக்கு அனுக்கிரகித்தல், அபக்குவிகளைச் செய்ய வேண்டிய அருள் நியதியின்படி தண்டனை செய்வித்துப் பக்குவம் வருவித்தல். ஜீவதயை யென்பது தன் சத்தியினளவு உயிர்க்கு உபகரித்தல் அல்லது ஆன்மநேய சம்பந்தம் பற்றித் தயாவடிவமாயிருத்தல்.

சுத்த சன்மார்க்க சாதனம்

சுத்த சன்மார்க்க சாதனம் 2 வகைப்படும்: பரோபகாரம், சத்விசாரம், பரோபகாரம் என்பது தேகத்தாலும், வாக்காலும், திரவியத்தாலும் உபகாரஞ் செய்வது. சத்விசாரம் என்பது நேரிடாத பக்ஷத்தில் ஆன்மநேய சம்பந்தமான தயாவிசாரத்தோடு இருப்பது. கடவுளது புகழை விசாரித்தல், ஆன்மாவின் உண்மையை விசாரித்தல், தன் சிறுமையைக் கடவுளிடத்தில் விண்ணப்பித்தல். இந்த மார்க்கத்தால்தான் சுத்தமாதி மூன்று தேகங்களைப் பெற வேண்டும்.
கடவுள் தயவும் ஜீவ தயவும்
கடவுள் தயை, ஜீவதயை யென்பது: கடவுள்தயை யென்பது இறந்தவுயிரை யெழுப்புதல், தாவரங்களுக்கு மழை பெய்வித்தல், மிருக பக்ஷி ஊர்வன வாதிகளுக்கு ஆகாரம் கொடுத்தல், கால சக்கிரத்தின்படி சோமன் சூரியன் அக்கினிப் பிரகாசங்களை அளவு மீறாமல் நடத்தி வைத்தல் முதலியன. இவற்றை விரிக்கில் பெருகும். ஜீவதயை யென்பது தன் சத்தியளவு உயிர்க்கு உபகரித்தல், ஆன்ம நேய தயா விசாரத்தோடு இருத்தல், அன்னிய ஜீவதோஷ விசாரம் கனவிலும் செய்யாதிருத்தல் முதலியவாம்.
சுத்த சன்மார்க்க சாதனம்
சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய சாதனம் என்னவென்றால், எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்புமே முக்கியமானவை. உதாரணம் அருட்பெருஞ் சோதி ஆண்டவர் சொல்லியது; கருணையுஞ் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக மற்றெல்லாம் மருணெறி யெனவே எனக்கு நீ உரைத்த வண்ணமே பெற்றிருக்கின்றேன்"*
________________________________________

* திருஅருட்பா 3503
________________________________________

சன்மார்க்க சாதனம்
சாதனங்கள் ஒன்றும் வேண்டாம். ஏதாவது ஓர் சாதனம் சொல்லக்கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாம். அதைக் கண்டு பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும். ஆதலால், காலந் தாழ்க்காது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம். இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை எழுப்புகிறவன்; அவனே ஆண்டவனுமாவான்.
102. சுத்த சன்மார்க்கப் பிரார்த்தனை
ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெலாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதால், அதில் ஒருவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன. பிரார்த்தனை செய்ய வேண்டுமாகில் இப்படித்தான் செய்ய வேண்டும்.
பாதி இரவி லெழுந்தருளிப் பாவி யேனை யெழுப்பியருட்
சோதி யளித்தென் னுள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை
ஓதி முடியா தென்போலிவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.*
என்பதே என் பிரார்த்தனை யாகும்.

கடவுள் மயமாவது

ஜீவ காருண்யத்தால் பிரமாவினுடைய ஆயுசும், பாசவைராக்கியத்தால் விஷ்ணுவுடைய ஆயுசும், ஈசுரபத்தியால் ருத்திரனாயுசும், பிரமஞானத்தால் என்று மழியாத சுவர்ண தேகம் முதலியவையும் பெற்றுக் கடவுள் மயமாகலாம்.

தயவும் கடவுளும்

கடவுள் சர்வஜீவ தயாபரர். ஆகையால் சர்வ வல்லபமுடையவர். அதுபோல் நம்மையும் சர்வ ஜீவ தயையுடையவர்களாய்ச் சர்வ வல்லபத்தையும் பெற்றுக் கொள்ளும்படி செய்வார். ஞானிக்குத் தயை அதிகப்பட்டிருப்பதால், அவர் இறந்தவர்களை யெழுப்புதல் முதலிய அற்புதங்களைச் செய்யும் வல்லப முடையவரா யிருக்கின்றார். யாரிடத்தில் தயவு அதிகப்பட்டிருக்கின்றதோ, அவரிடத்தில் கடவுள் இருக்கின்றார். அந்தத் தயை யில்லாதவர்களிடத்துக் கடவுளிருந்து மில்லாமையா யிருக்கிறார். கடவுளிடத்தில் சதா அன்பும் பத்தியும் செலுத்த வேண்டும்.

பத்தி

பத்தி என்பது மனநெகிழ்ச்சி மனவுருக்கம். அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி ஆன்மவுருக்கம். ஈசுவரபத்தி என்பது எல்லாவுயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருப்பதை அறிதல். ஜீவகாருண்யமுண்டானால் அருள் உண்டாகும்; அருள் உண்டானால் அன்புண்டாகும்; அன்புண்டானால் சிவானுபவம் உண்டாகும். அந்தக்கரண சுத்தியின் பிரயோஜனம் பத்தியை விளைவிப்பது.

சத்திய ஞானாசாரம்
ஜாதியாசாரம், குலாசாரம், ஆசிரமாசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாத்திராசாரம் முதலிய ஆசாரங்களொழிந்து, சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம் ஒன்றே இது தொட்டு வழங்க வேண்டும். அதாவது, பெருந்தயவே வடிவமாக இருக்க வேண்டும். அந்நியரின் தோஷம் விசாரியாமல் இருக்க வேண்டும்.

103. சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம்
ஜீவகாருண்யத்தால் பிரமன் ஆயுசும், பாசவைராக்கியத்தால் விஷ்ணு ஆயுசும், ஈசுர பக்தியால் ருத்திரன் ஆயுசும் பிரம்மஞானத்தால் என்றுமழியாத சுவர்ண தேக முதலியவைகளைப் பெற்றுக்கடவுள் மயமாகலாம். எப்படியெனில்: கடவுள் சர்வ ஜீவதயாபரன், சர்வ வல்லமையுடையவன்; ஆகையால், நம்மையும் சர்வ ஜீவதயையுடையவர்களாய்ச் சர்வவல்லமையையும் பெற்றுக் கொள்ளும்படி மனித தேகத்தில் வருவித்தார். ஞானிக்குத் தயவு அதிகப்பட்டிருக்கிறபடியால், கேளாதகேள்வி முதலிய மஹா அற்புதங்களான இறந்தாரெழுதல் முதலிய அற்புத வல்லமையைப் பெற்றிருக்கின்றார். எந்த ஜீவர்களிடத்தில் தயாவிருத்தியாகிய அருள் விசேஷம் விளங்குகின்றதோ, அந்த ஜீவர்களிடத்தில் கடவுள் விளக்கம் விசேஷமாயிருக்கும். மற்றவர்களிடத்தில் காரியப்படாது. ஆதலால் மலஜல சங்கல்ப காலங்கள் தவிர மற்றக் காலங்களில், கடவுளிடத்தில் அன்பும் ஜீவர்களிடத்தில் பக்தியும் செலுத்த வேண்டும். ஆதலால் பக்தியென்பது மன நெகிழ்ச்சி, மனவுருக்கம், அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி, ஆன்மவுருக்கம். எல்லாவுயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருப்பதை அறிதலே யீசுர பக்தியாம். அந்தக்கரண சுத்தியின் பிரயோசனம் பக்தியை விளைவிப்பது. ஜீவகாருண்யமுண்டானால் அருளுண்டாகும், அருளுண்டானால் அன்புண்டாகும், அன்புண்டானால் சிவானுபவமுண்டாகும். தத்துவவொழுக்கம் பற்றிச் சமயங்கள்ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. தொழிலொழுக்கம் பற்றி ஜாதிகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன.தயவை விருத்தி செய்வதற்குத் தடையாயிருப்பன சமய ஏற்பாடு ஜாதியேற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள். அவையாவன: ஜாதியாசாரம், குலாசாரம், ஆசிரம ஆசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாஸ்திராசாரம் முதலிய ஆசாரங்கள். ஆதலால் மேற்குறித்த ஆசாரங்கள் ஒழிந்து, சுத்தசிவசன்மார்க்க சத்திய ஞான ஆசாரத்தை வழங்கிப் பொது நோக்கம் வந்தால், மேற்படி காருண்யம் விருத்தியாகிக் கடவுளருளைப் பெற்று, அனந்த சித்தி முத்திகளைப் பெறக்கூடுமேயல்லது, இல்லாவிடில் கூடாது.

115. சுத்த சன்மார்க்க ஆகாரம்
சுத்த சன்மார்க்க சாதகர்கள் எக்காலத்தும் புழுக்காதிருக்கிற வஸ்துவைக் கொள்ளல் வேண்டும். புழுக்காத வஸ்துக்கள் யாவெனில்:- சர்க்கரை, தேன், கற்கண்டு, வெல்லம், அயம் முதலிய செந்தூரம், தாமிர முதலிய பஸ்பம். ஆதலால் அவசியம் ஆகாரத்திற்கு முக்கிய வஸ்து மேற்குறித்தவை பரியாயத்தில் சர்க்கரையென்று லவணத்தைச் சொல்லுவதுமுண்டு. மேற்படி லவணத்தைத் துரிசு போக்கி ஜய லவணமாய்க் கட்டி ஆகாரத்தில் கொண்டால் தேகம் நீடிக்கும். இதன்றி, சத்வ பதார்த்தத்தில் லவணம் சிறுகச் சேர்த்துக்கொள்ளவுங் கூடும்.
சன்மார்க்க ஆகாரம்
நெய் பால் தயிர் மோர் - இவைகளை ஆகாரத்தில் விசேஷம் சேர்ப்பது தேக நஷ்டம். மனிதர்களுக்கு எல்லாத் தாதுக்களிலும் முதல் தாது கொழுப்பு. அதன் சத்து நெய். அதை எடுத்தால் தேக நஷ்டம். இதுபோல் பசுக்களினது முதற்றாது நெய். ஆதலால் அதையெடுப்பது சுத்த சன்மார்க்க மரபல்ல. சன்மார்க்கத்தில் தேகவிருத்தி செய்து கொள்வதற்காவது புறப்புறவமுதம். ஆதலால், ஊற்றுநீர் பொற்றலைக் கரிசலாங்கண்ணி வாழை தென்னை முதலியவற்றின்மேல் பெய்கிற பனிசலம் மழைச்சலம் - இவைகள்தான் சுத்தசலம் அல்லது அமுதம். அல்லது சாதாரண ஜலமுங் கொள்ளலாம். அதாவது மேற்குறித்த ஜலத்தை 5-ல் 3, 5-ல் 2 பாகம் நிற்கக் காய்ச்சி, சர்க்கரை வெல்லம் இவைகளைச் சேர்த்துக் குடிக்கலாம். இவைகள் தேகவிருத்தி செய்யும். சுத்த சன்மார்க்க மரபிற் குரியது இனிப்புத்தான். ஆதலால் தேன் சர்க்கரை கற்கண்டு வெல்லம் இவைகளை ஆகாரத்தில் சேர்த்துக் கொள்வது உத்தமம்.
உப்பு
தேக நஷ்டஞ் செய்வது உப்பு. உப்பைக் கட்டி யாகாரத்திற் சேர்ப்பது சித்தமார்க்கம்.
சர்க்கரை
சர்க்கரை எந்தக் காலத்திலும் புழுத்தலின்றாகலி னுத்தமவாகாரமாம். மற்ற வஸ்துக்கள் எல்லாம் புழுக்கும்.
சன்மார்க்க ஆகார விலக்கு
சுத்த சன்மார்க்க சாத்தியர்கள் நெய் முதலிய வஸ்துக்கள் கொள்ளப்படாது. அதுபோல் சாதகர்களும்....ஒருவாறு கொள்ளப்படும். ஏனெனில், ஓர் தேகத்திலுள்ள தாதுக்களில் முதல்தாது கொழுப்பு, அதின் அம்சமே பால், அதின் அம்சம் நெய், மேற்படி ஆபாசம் மோர் தயிர். ஆதலால், மேற்படி கொழுப்பு வெளிப்பட்டால், மேற்படி பசுவின்கண் கெடுதியும் நேரும். ஆதலால் கொலை. கன்றுக்கு ஒருவாறு விட்டு பாலை கிரகிக்கலாம். ஆதலால், இஃதால் ஜீவ இம்சை நேருதலால், மேற்படி வஸ்துக்கள் கொள்ளலாகாது; நேராத பக்ஷத்தில் கொள்ளலாம்.
சாதம்
சாதம் வடித்துச் சாப்பிடுதல் நலமா, பொங்கிச் சாப்பிடுதல் நலமா எனில்:- வடித்துச் சாப்பிடுவது அதிலுள்ள எண்ணெய் போய் விடுவதால் நலம். பொங்குவதில் எண்ணெய் போகாது; தாமச குணம் உண்டாகும். இதுபோலவே உப்பு, புளி, மிளகாய் முதலிய வஸ்துக்களின் எண்ணெய் போகச்சுட வைத்துச் சாப்பிடுதல் வேண்டும். பச்சரிசி என்பது இப்போது கொண்டுவருவது அல்ல... மேலும் உஷ்ணத்தை உண்டுபண்ணக்கூடிய ஆகாரங்கள் கொள்ளுதல் வேண்டும்.
116. வெந்நீர்
அண்டத்தையும் பிண்டத்தையும் ஓருங்கே வளர்ப்பது புறப்புற அமுதம். ஆதலால் அஃதே கொள்ளல் வேண்டும். யாதெனில்:- ஊற்றுநீர், பொற்றலை, வாழை, தென்னை முதலியவற்றின் பேரிலுள்ள பனிஜலம், மழைஜலம் - இவைகள் கொள்ளலாம்; சாதாரண ஜலங்கொள்ளுவது கெடுதி. ஏனெனில் மேற்படி ஜலத்தில் மூன்று குணமுண்டு. எனைஎனில்: விஷம், பூதம், அமுதம். இம்மூன்று மொன்றாகவே இருக்கும். எப்படியெனில்: மேல்பாகத்தில் சிலிர்ப்பாகிய விஷமும், அதனடியில் ஏகதேசம் சுடுகையுள்ள பூதமும், அதனடியில் விசேஷ உஷ்ணமுள்ள அமுதமும் கூடி ஒன்றாயிருக்கும். மேற்படி ஜலத்தினது குணங்கள் ஆவன: பூதஜலம் தத்துவ விருத்தி செய்யும்; அமுதஜலம் பிராணசக்தி செய்யும்; விஷஜலம் தத்துவத்துரிசைப் போக்கும். ஆதலால் இடபேதத்தால் மேற்படி நீர்கள் தனித்தனியாகவுமுள்ளன; ஒவ்வொன்றில் மும்மூன்றாகவும் விரியும். ஆதலால், மேற்படி சுத்தாமுதங்கிடையாத பக்ஷத்தில் இதர ஜலங்களைப் பச்சையாகக் கொள்ளப்படாது; வெந்நீராகக் கொள்ளுதல் வேண்டும். அந்நீரும் ஐந்து மூன்றும் ஐந்து இரண்டுமாகக் காய்ச்சி, சர்க்கரை வெல்லம் கற்கண்டு - இவைகள் சேர்த்துக் கொள்ளவும். நேராத பக்ஷத்தில், தென்னை நாயுருவி வாழை முதலிய வஸ்துக்களைச் சம்பந்தப்படுத்தியாவது, சூரிய கிரணத்தில் வைத்தாவது, சூரியசரத்தால் பார்த்தாவது, சிகரத்தை உன்னியாவது கொள்ளல் வேண்டுமேயல்லது பச்சையாய்க் கொள்ளப்படாது. சநிநீராடென்று சொல்வது சநி போன்ற கருமையான கருகியநீராலாடென்று சொன்னது. யாதெனில் வெந்நீர், ஒருவாறு ஊற்றுநீர். இதன்றி - மற்றப்படி - சொல்வது தெரியாமை.
வெந்நீர்
சுத்த சன்மார்க்கத்தில் தேகவிருத்தி செய்தல் வெந்நீராதலால். எக்காலத்தும் சுத்தஜலம் சேர்க்கக்கூடாது. பச்சை ஜலத்தினிடத்தில் மூன்று குணமுண்டு: விஷஜலம், பூதஜலம், அமுதஜலம். இந்த மூன்றும் ஒன்றாகவே இருக்கும். ஜலத்தின் மேல் பாகத்தில் விஷமாகிய சிலிர்ப்பும், அதனடியில் கொஞ்சம் சுடுகையுள்ள பூதமும், அதனடியில் விசேஷம் சுடுகையுள்ள அமுதமுமாக இருக்கும். பூதஜலம் தத்துவ விருத்தி செய்யும். அமுதஜலம் பிராணவாயுவை விருத்தி செய்யும். விஷஜலம் ஆபாசநீர்களாகப் பற்றும். ஆதலால் பச்சைஜலம் கொள்ளப்படாது. வெந்நீர் நேரிடாத பக்ஷத்தில், சர்க்கரை நாயுருவி தென்னை வாழை முதலிய வஸ்துக்களைச் சம்பந்தப்படுத்தியாவது கொள்ள வேண்டும்.
குளிர்ந்த ஜலம்
காலங்கடந்து குளிர்ந்த ஜலத்தில் குளித்து ஈர உடையுடன் இருப்பது தேகக்கெடுதி. குளிக்க வேண்டுமானால் வெந்நீரில் குளிக்க வேண்டும்.

117. கரிசலாங்கண்ணியும் தூதுளையும்
கரிசாலையை தினந்தோறும் பச்சையாகவாவது சமையல் செய்தல் முதலிய வகையாலாவது சாப்பிட்டு வரவேண்டும். பிரதம உள்ளுடம்பாகியதை நீடிக்கப் பண்ணும். மேற்குறித்த மூலிகையை அலக்ஷியம் செய்யாது ஆசாரியன் திருவடியின் கண்ணே இலக்ஷியம் வைத்து, எவ்வித தந்திரத்தினாலாவது தினம் தினம் உட்கொண்டால், தேகக் கெடுதியாகிய அசக்தம் நீங்கி, தேகம் வலுவுள்ளதாய் நெடுநாளைக்கு இருக்கும். முத்தியடைவதற்கு சகாயமாயுமிருக்கும். மகான்களிடத்தில் அனந்த காலம் காத்தாலும் மேற்குறித்த மூலிகையின் பிரயோஜனத்தையும் உண்மையையும் அனுபவத்தையும் வெளியிடார்கள். பரம கருணாநிதியாகிய நம் தலைவனால் கிடைத்தது. அசட்டையின்றி உட்கொள்ளல் வேண்டும். மேற்குறித்த மூலிகை ஜலமில்லாத இடத்தில் இருக்கிறது விசேஷ நன்று. ஜலமுள்ள இடத்திலுள்ளதில் காரமிராது. தந்தசுத்தி செய்து அண்ணாக்கில் தர்ஜனி விரலால் தேய்க்க - மேற்குறித்த மூலிகையால் - பித்தநீர் கபநீர் வெளியாகி, கண்ணொளி விசேஷ’க்கும். நேராத பக்ஷத்தில் பொற்றலைக் கையாந்தக்கரை கூடும். மேற்குறித்த மூலிகை செந்தூரம் செய்வதற்குச் சிறந்தது. உலர்த்திக் குழித்தயிலம் வாங்கியும் செந்தூரஞ் செய்யலாம். அது போலவே, அறிவை விளக்குவதற்கும், கவனசத்தி உண்டுபண்ணுவதற்கும், கரணம் ஓய்வதற்கும், கபத்தை அரிப்பதற்கும் யோக்கிதையுடைய ஓஷதிதூதுளை. அதை மேற்குறித்தபடி அனுஷ்டித்தால் விசேஷ நன்மை செய்யும். கரிசாலை தந்த சுத்தியால் வசீகரமும் நேரிடும். உண்மை.
கரிசலாங்கண்ணியும் தூதுளையும்
கரிசலாங்கண்ணியைப் பச்சையாகவாவது அல்லது சமையல் செய்தாவது தினந்தோறும் அனுஷ்டானம் செய்துவர வேண்டும். தேகம் திடமுள்ளதாகி நெடுநாளைக்கிருக்கும். தூதுளையையுமப்படியே சேர்த்துக் கொண்டு வந்தால், புத்தியை விகாசப்படுத்தும்.

121. ஏழு திரைகள்
இந்தப் பவுதிக உடம்பிலிருக்கிற நீ யாரெனில்: நான் ஆன்மா, சிற்றணு வடிவன். ஷெ அணு கோடி சூரியப் பிரகாசமுடையது, லலாடஸ்தானமிருப்பிடம், கால்பங்கு பொன்மை முக்கால்பங்கு வெண்மை கலந்த வண்ணம். இப்படிப்பட்ட ஆன்மப் பிரகாசத்தை மறைக்க மாயா சத்திகளாகிய 7 திரைகளுண்டு. அவையாவன:
கறுப்புத் திரை மாயாசத்தி.
நீலத்திரை கிரியாசத்தி.
பச்சைத்திரை பராசத்தி.
சிவப்புத்திரை இச்சாசத்தி.
பொன்மைத்திரை ஞானசத்தி.
வெண்மைத்திரை ஆதிசத்தி.
கலப்புத்திரை சிற்சத்தி.*

________________________________________

* திருஅருட்பா 3630
________________________________________