Damodaran Raman
வள்ளலார் யார்? எது சுத்த சிவம்? எது சுத்த சிவ சன்மார்க்கம்?
அன்பர்களே,வணக்கம். சாத்திரம்,மக்களை மூன்று பிரிவுகளுள் அடக்கும். சாமு சித்தர்,விநயிகர்,பிராகிருதர் எனும் இவையே முப்பிரிவு.சாமு சித்தர் என்பவர் கருவிலேயே திரு வுடையார்-திரு ஞான சம்பந்தரைப் போன்று. இத்தகையோர்க்குக் குருவும் தேவைப்படாது. நூல்களும் தேவைப்படா.வள்ளலார் இப்பிரிவைச் சேர்ந்தவர் ஆவார். ஓதாதுணர்ந்தவர். விநயிகர் என்பவர் பெரியோர் சொற்படி ஒழுகுவர்.இவர்களுக்குக் குருவும் தேவைப்படும்:ஞான நூல்களும் தேவைப்படும். பிரகிருதி என்பது மூலப்பிரகிருதி. பிரகிருதி என்னும்  உலகத்துடன் தொடர்பு உடையவர் பிராகிருதர்-உலோகாயதர். இப்பிரிவினர் பெண்ணுடன் கொள்ளும் உடலுறவே முத்தி யின்பம்,பெண்ணிடம் ஏற்படும் ஊடலைத் தீர்ப்பதுவே தவம் என்பர்.இப்பிரிவினர் சன்மார்க்கம் சேர மாட்டார்.சன்மார்க்கத்தைப் பழிப்பார்கள்.பெரியோர் உபதேசத்தைக் கேட்க மாட்டார்கள்.                                                                                                                                                      சுத்த சிவம் என்பது,சிவம் மற்றும் பர சிவம் என்னும் இரண்டனுக்கும் இடைப்பட்ட தாகும்.சிவனுக்கு மூவகை வடிவங்கள் உள.  உருவம்,அருவம்,அரு வுருவம் என்பன.நடராசப் பெருமான் உருவத்திருமேனியர்.சிவலிங்கம் அரு வுருவம்.சிதம்பர ரகசியம், சிவ பெருமானின் அருவத் திருமேனியைக் குறிக்கும். சிதம்பரத்தில் சிவ பெருமானின் மூவகை வடிவமும் உள்ளன. பர சிவம்,அருவம்.சுத்த சிவம், அருவுரு.சிவம், உருவம்.மூவகை வடிவமும் ஒரே சிவத்தைத்தான் குறிக்கும்.சுத்த சிவம்,பர சிவத்தையோ சிவத்தையோ  இல்லையென்று மறுக்காது.இடையில் இருப்பது என்பதுதான் உண்மையான பொருள்.சிவ லிங்கம்,அம்பலவாணரையோ சிதம்பர ரகசியத்திலுள்ள அருவ சிவத்தையோ ஒருபோதும் இல்லையென்று மறுக்காது.சாத்திரங்களைத் தொட்டும் பாராதவர்கள், சுத்த சிவம் என்பதன் உண்மையான பொருளை உணர மாட்டார்கள்.                                                                                                                                                      சுத்த சன்மார்க்கம் என்பது பரசிவ சன்மார்க்கம்,சன்மார்க்கம் என்னும் இரண்டனுக்கு இடைப்பட்டது. சைவ சித்தாந்தம் கூறும் சன்மார்க்கமே சன்மார்க்கமாகும்.கோயிலாவதேதடா என்று கேட்கும் சித்தர் பெரு நெறியே பரசிவ சன்மார்க்கமாகும். சுத்த சன்மார்க்கம்,சித்தாந்தம் விளக்கும் சன்மார்க்கத்தையோ சித்தர் பெருநெறி கூறும்  பரசிவ சன்மார்க்கத்தையோ தவறென்றும் இல்லையென்றும் மறுக்காது.நிட்டை கூடினால்,சைவ சித்தாந்தம் கூறும் சன்மார்க்கத்தின்படி (ஜீவன்) முத்தியைப் பெறலாம். வேகாத காலாதிகளைக் கண்டு கொண்டு மெய்த்தொழில் புரிந்து அதில் வெற்றி பெற்றால் தேக சித்தி பெறலாம்.முத்தியை அறியாதோர் சித்தி பெறுவது கனவிலும் நடக்காத ஒன்றாகும்.                                                                                                                                                       வள்ளலார்,நடராசபதி மாலையில் அம்பலவாணர் கூறிய சுத்த சன்மார்க்க மரபுகளைத் தெளிவு படுத்தியுள்ளார்.இதனைச் சரியாக விளங்கிக் கொள்ளாமல் குழம்பிக்கொள்வதும் குழப்புவதும் தவறானது. 1.சாகாத கல்வியே கல்வி. வள்ளலார் உரைப்பகுதி அறிவுறுத்திய திருமந்திரமும் இனம் பற்றிச் சித்தர் நூல்களும்  சாகாக் கல்வியைக் கற்றுக் கொடுக்கும். 2.ஒன்றே சிவந்தான் என அறிந்த அறிவே தகும் அறிவு. பேருபதேசத்தில்  இறைவன்,அக்காலத்திலேயே தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில்,கருணையும் சிவமே பொருளெனக் காட்சியும் பெறுக வென்றதுதான் தம்மை ஏறாநிலைமிசை (தயவால்)ஏற்றி விட்டதாகத் தெளிவு படுத்தியுள்ளார்.திருச்சிற்றம்பலத்தே திருநட சோதியானவர், சிவமே பொருளென்று தேற்றித் தம்மைச் சிவ வெளிக்கேறும்  சிகரத்திலேற்றிச் சிவமாக்கிக் கொண்டதை உலக மக்கள் காண்பீராக என்றார். பதி நிலை,பசு நிலை, பாச நிலையெலாம்(அகவல்1045) ஓதி உணராமல் தங்கள் மனத்திற்கு உகந்ததே சரியென்றும் பிறர் கூறுவது தவறென்றும் வாதிப்பது சரியாகுமா? சம்பு பக்கம்,அணு பக்கம் என்றால் என்னவென்று கூட விளங்கிக் கொள்ளாது  சிவத்தை-நடராசப்பெருமானை விட உயர்ந்தவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் என்றால் சிவ பெருமான் பசு வருக்கத்தைச் சேர்ந்தவர் ஆவாரா? வள்ளலார்,தனித் தலைமைப் பெரும்பதி ஒருவர் என்று தெளிவு படுத்தியுள்ளார். திருச்சிற்றம்பலத்தே திருநடம்புரியும் திருநட சோதியானவர்(ஆனந்தக் களிப்பு) அம்பலவாணர்(நடராசப் பெருமான்)என்பது தெளிவான உண்மை.அம்பலவாணரும்  அருட்சோதி யாண்டவரும் ஒருவரே ஆவார்.இல்லை!இல்லை!இப்போது வரும் ஆண்டவர் சிவன் ஆக மாட்டார் என்று கூறினால் சிவன் யார் என்பதைத் தெளிவு படுத்த வேண்டும். ஒன்றே சிவந்தான் என்பதில் உள்ள சிவம் எது? ஏன்,அகவல் திருச்சிற்றம்பலம் எனத்தொடங்கித் திருச்சிற்றம்பலம் என்று முடிவு பெறுகிறது? ஞானச்சரியை கூறும் எண்டகு சிற்றம்பலத்தே எந்தை(பாடல்4)என்பது அம்பலவாணரைத்தான் குறிக்கும். இவற்றை யெல்லாம் பகுத்தறியாமல் அரிமா நோக்கில்லாமல் சும்மா கூறும் வெற்று விளக்கம் அறிவுடைமை   ஆகாது. 3.மலமைந்தும் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம். சைவ சித்தாந்தத்தை ஓதி உணராதவர்கள், மலமைந்தை உணர்ந்தவர் ஆகார்.மலமைந்தை உணராதவர்கள் எப்படி மலமைந்தை வெல்ல முடியும்? 4.வேகாத காலாதிகள் கண்டு கொண்டு விளைய விளைவிக்கும் மெய்த்தொழில் புரியாவிடின் மரணத்தை வெல்ல முடியாது. சாகாக்கல்வி என்ன வென்று தெரியாதவர்கள் கூறும் விளக்கம் வீண் விளக்கமாகும்.சிவயோக நிலையில் போகாப்புனல் என்னும் மதி மண்டலத் தமுதத்தைத் தெளிவு படுத்தியுள்ளார்.இது குறித்த அறிவு எதுவுமே இல்லாமல் போகாப்புனல் என்பதை(Grace Energy)கருணை ஆற்றலென்றும், அதனை மின்னோட்டத்தோடும் போட்டோன் எனப்படும் ஒளித்துக ளோட்டத்தோடும் மின் காந்தக் கதிர் வீச்சோடும் மின் காந்த அலைகளோடும்  ஒப்பீடு செய்வது எந்த வகையிலும் சரியானவை அல்ல.சாகாக்கல்வி கற்காமல் வெறும் நவீன அறிவியல் படிப்பும் நோக்கமும் மரணத்தை எப்படித் தடுக்கும்?  வள்ளலார்,சாகாக்கல்வியைத் தெரிவிப்பது திருமந்திரம் என்று தெளிவு படுத்தியதைக் கொஞ்சமும் யோசிக்காது தங்கள் மனம்போல் கூறுவது அறிவுடையோர் செயலாகாது. வள்ளலார் அறிவுரையைக் கேட்பீராக.அதன்படி நிற்பீராக.அதுதான் மரணமிலாப் பெருவாழ்வு வாழ்விக்கும்.வணக்கம். வாழ்க.