கவிஞர். கங்கைமணிமாறன்
இறைவன் எங்கே இருக்கிறான்?

இறைவன் இல்லா
இடத்தில் எல்லாம்
ஏனோ தேடுகிறோம் - அவன்
இருப்பை உணரத்
தெரியா மல்நாம்
இருவிழி மூடுகிறோம்!

கல்லில் செம்பில்
காண்பன வெல்லாம்
கற்பனைப் படிமங்கள்-நம்
உள்ளும் புறமும்
உலாவு கின்றன
உண்மையின் வடிவங்கள்!

எலும்பும் சதையும்
இரத்தமும் கொண்டே
இறைவன் திரிகின்றான் - அதை
அலட்சியம் செய்யும்
அறிவீ னர்க்கே
அவனேன் தெரிகின்றான்!

இருகால் கொண்டே
எத்தனை கோயில் எதிரே
வருகிறது-அதை
இருகை குவித்து
வணங்கா முடியில்
மூடம் வாழ்கிறது!

நான்கு கால்களில்
நடப்பன எல்லாம்
நடமாடும் கோயில்-அவை
ஊனென எண்ணி
உயிர் பறிப்பவன்
பாவத் தின்வாயில்!

வானம் தீண்டிப்
பறப்பன வெல்லாம்
ஆகாயக் கோயில்-எனும்
ஞானம் இன்றி
நடப்பவன் எல்லாம்
நரகத் தின்தீயில்!

ஊர்வன நிற்பன
உறைவன என்றே
எங்கும் பொற்கோயில்- அதைப்
பாரா தவனின்
கல்நெஞ் சுக்குள்
எத்தனை கற்கோயில்!

வழிபட ஆயிரம்
வழிகற் பித்தால்
வாசல் திறக்காது-நேர்
வழியினில் ஆருயிர்
வணங்கு வோர்க்குக்
கதவே இருக்காது!

இருக்கும் இடங்கள்
எதிரே இருக்க
ஏனோ தேடுகிறோம் - அவன்
இல்லா இடங்கள்
எல்லா இடத்திலும்
தேடி வாடுகிறோம்!

விருப்பும் இல்லான்
வெறுப்பும் இல்லான்
வேண்டான் சுதைக் கோயில்- அவன்
இருப்ப தெல்லாம்
எத்தனை எத்தனை
கோடி சதைக்கோயில்!

எங்கே எதிலே
எவ்வுரு வத்தில்
இருப்பான் என்பதிலே - பலர்
எங்கெங் கும்பல
கேள்விகள் கேட்பார்
இதுதான் என்-பதிலே!

     _கவிஞர் கங்கைமணிமாறன்
        +91 9443408824
          04364 - 290787

 

Senthil Maruthaiappan
மிக அருமையான பாடல் வரிகள்.
Wednesday, December 9, 2020 at 23:34 pm by Senthil Maruthaiappan