கவிஞர். கங்கைமணிமாறன்
*வள்ளல் - ஆர்?* சந்தக் கவிதை
*எம்பெருமானார் வள்ளல்பெருமான்
பொற்பாதங்களுக்கு
இத் தீந்தமிழ்க் கவிதை சமர்ப்பணம்!*


சங்கத் தமிழ் பொங்கிவரச்
   சந்தநயம் கொஞ்சிவர
  சன்மார்க்கம் சொல்லவந்த வள்ளல்-ஆர்?-அவர்
சங்கம் வைத்துச் சாலையுடன்
   சபைவைத்துச் சாதனைகள்
  சங்கமிக்க வந்துதித்த வள்ளலார்!


சின்னபிள்ளை யாயிருந்து
   தில்லைநட ராசர்முன்னே
  செல்லப்பிள்ளை யாய்ச்சிரித்த வள்ளல்-ஆர்?-அவர்
வண்ணமய மானகவி
   வந்துவிழ தெய்வமணி
  மாலையது தந்துசென்ற வள்ளலார்!

சித்தமெங்கும் தித்திக்கின்ற
  சேக்கிழாரின் செந்தமிழைச்
  சிந்தைகொள்ளப் பேசிவைத்த வள்ளல்-ஆர்?-அவர்
முத்தமிழை எம்மொழிக்கும்
   தந்தையென வேமொழிந்து
  முத்திரை பதித்துவைத்த வள்ளலார்!

மண்ணுயிர்கள் அத்தனையும்
  என்னுயிராம் என்றுசொல்லி
  மன்னுபுகழ் பெற்றுவிட்ட வள்ளல்-ஆர்?-அவர்
கண்ணிரண்டில் ஆன்மநேயக்
   காவியங்கள் தீட்டிவைத்துக்
  காலக்கொடை யாகிநின்ற வள்ளலார்!

சிற்றுயிரைக் கொன்றுதின்ற
   சிற்றறி வாளரை மட்டும்
  சீற்றமுடன் தள்ளிவைத்த வள்ளல்-ஆர்?-அவர்
மற்றவரைப் போலில்லாமல்
  வாயில்லாத ஜீவருக்காய்
  வழக்காட வந்ததமிழ் வள்ளலார்!

மூடஜாதி மதமெல்லாம்
    முன்னேற்றத்தின் தடையென்று
  முன்னுரைத்த சமத்துவ வள்ளல்-ஆர்?-அவர்
நாட்டிலுள்ள ஜாதிக்கோயில்
   அத்தனையும் ஜோதிக்கோயில்
  ஆக்கிடவே போர்தொடுத்த வள்ளலார்!

பசித்துக் கிடப்பவரைப்
   பார்த்துமனம் நொந்து நொந்து
  பட்டினிக்குச் சோறு போட்ட வள்ளல்-ஆர்?-அவர்
பசிப்பிணி வேரறுக்கும்
  படையெனப் புறப்பட்டுப்
  பாரதப் புரட்சிசெய்த வள்ளலார்!

பசித்திரு தனித்திரு
   விழித்திரு என்றுரைத்துப்
  பாடங்கள் பலவெடுத்த வள்ளல்-ஆர்?-அவர்
பசிக்குண வாயிருந்து
   வெயிற்குடை யாயிருந்து
  பரிவுக்குப் பெயர்போன வள்ளலார்!

சித்தருக்கும் முத்தருக்கும்
  ரசவாத வித்தருக்கும்
   தத்துவத்தால் விடை சொன்ன வள்ளல்-ஆர்?-அவர்
சத்து சித்து ஆனந்தத்தைச்
   சாலையிலே கண்டெடுத்துச்
  சாகாமலே வாழுகின்ற வள்ளலார்!

எத்துணையும் பேதமில்லாச்
  சித்தத்திலே சுத்தசிவம்
  சித்துருவாய் நிற்குமென்ற வள்ளல்-ஆர்?-அவர்
சத்தியத்தை வென்றெடுக்கும்           
  சங்கல்பத்தை மார்க்கமெனச்
  சாசனம் எழுதிவைத்த வள்ளலார்!

உண்டு தெய்வம் ஒன்றுஎன்று
  கண்டுரைத்து ஞானவொளி
  உலகுக்கு விண்டுரைத்த வள்ளல்-ஆர்?-அவர்
பண்டுவந்த ஞானிகளின்
  பாதைகளைச் செப்பனிட்டுப்
  பத்தியங்கள் கொண்டுவந்த வள்ளலார்!

வல்லவன் மறைத்து வைத்த
  வாசலைத் திறப்பதற்கு
  வந்திருப்ப தாகச் சொன்ன வள்ளல்-ஆர்?-அவர்
வல்லவரும் நல்லவரும்
  எல்லவரும் போற்ற இங்கே
  வானகத்தை வருவித்த வள்ளலார்!

சாதன சகாயங்களால்
  மோட்ச வீட்டில் நுழைந்திட
 முடியாது என்று சொன்னவள்ளல்-ஆர்?- அவர்
வேதமுத லாயஇதி
    காசங்களின் சூதனைத்தும்
  வெடிவைத்துத் தகர்த்திட்ட வள்ளலார்!

கூற்றுவனை ஆடல் கொண்டு
   கோலவுடல் மூடிக்கொண்டு
  கும்பிடவே தான் மறைந்த வள்ளல்-ஆர்?-அவர்
ஏற்றவழி மாற்றுவதில்
   ஏற்றமிகு ஆற்றலுள்ள
  ஏமசித்த ராயிருந்த வள்ளலார்!

புத்துலகம் காண்பதற்கும்
  பொன்னுலகம் ஆவதற்கும்
  புதுநெறி புகட்டிய வள்ளல்-ஆர்?-அவர்
பக்தியுல கத்தில்ஒரு
   ராஜபாட்டை போட்டுவைத்துப்
  பல்கலைக் கழகமான வள்ளலார்!

கல்லுக்குள்ளும் செம்புக்குள்ளும்
   காணமுடி யாதவனைக்
  கருணைக்குள் கண்டெடுத்த வள்ளல்-ஆர்?-அவர்
சொல்லுக்குள்ளே அடங்காத
   ஜோதியே கடவுளென்று
  சொல்லி நம்மை வாழவைத்த வள்ளலார்!

        -கவிஞர் கங்கை மணிமாறன்
         +91  9443408824

3 Comments
Natarajan Subbiramani
கவிதை படிப்பதற்கு மிகவும் கனிவாக, இனிமையாக உள்ளது அய்யா.
தங்களுக்கு என் நன்றிகள்
Friday, October 16, 2020 at 02:40 am by Natarajan Subbiramani
கவிஞர் கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்
நன்றி ஐயா. எம்பெருமானார் பற்றிய இந்தச் சந்தக் கவிதைக்குப் பார்வையாளர்கள் அதிகம் இல்லையே என்னும் கவலை எனக்குள் இருக்கிறது.
ஆயினும் பெருமானார் இந்த அலங்கலை அணிந்தருள்வார் என்னும் நம்பிக்கை அதிகம் இருக்கிறது. தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா.
Monday, October 19, 2020 at 12:20 pm by கவிஞர் கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்
magudadheeban
அருமை அய்யா அருமை.
தங்கள் பேச்சின் வீர்யத்தை ஏற்கனவே இரசித்திருக்கிறேன்.
அதே வேகம் சந்தக் கவிதையில் துள்ளிக் குதிப்பதைக் கண்டு மகிழ்கிறேன் நிறையக் கவிதைகள் தாருங்கள். படிக்கக் காத்திருக்கிறோம் நாங்கள். அதிகம் பேர் படிக்கவில்லையே எனக் கவலற்க. வள்ளல் படிப்பார் நிச்சயமாக. அவர் படித்தால் அது அனைத்து உயிர்களும் படித்தது போல்.
உயிரில் யாம், எம்முள் உயிர்...
தொடர்க தங்கள் பணி...

மகுடதீபன்
Tuesday, October 20, 2020 at 05:02 am by magudadheeban