கவிஞர். கங்கைமணிமாறன்
தேகமே தித்திக்கத் தேவாரம் பாடுவோம்!
கடவுள் என்பவன் -
என்பது சரியா?
கடவுள் என்பவள் -
என்பது சரியா?
கடவுள் என்பது -
என்பது சரியா?

அவனோ அவளோ
அதுவோ.....அல்லது
எதுவோ ஒன்று
இறையாய் இருக்கலாம்!
அப்பொருள் பற்றிய
மெய்ப்பொருள் தன்மை
கைப்பொருள் போலக்
கையில் இருக்கையில்
அதைக் காட்டாமல்
அறிவுக் கெதிராய்ச்
சொல்லிவைத் திருக்கும்
சூழ்ச்சிகள் மீது
கொள்ளிவைத் தவர்தான்
வடலூர் வள்ளல்!

ஒலியும் ஒளியுமே
உலகம் என்பது
பொலியும் உலகைப்
பார்த்தால் புரிவது!
அவையில் லாமல்
அண்டமும் இல்லை!
அவையில் லாமல்
பிண்டமும் இல்லை!
எவையில் லாமல்
இவைகள் இல்லையோ
அவைதான் நமக்கு
அறிவுக் கடவுள்!

அதனைக் காண
ஆகுதி, வேள்விகள் -
எதையும் துறந்து
எண்ணிலாக் காலம்
கண்மூடித் தவங்கள் -
கற்பனை கலந்த
மந்திர ஜெபங்கள் -
மனத்தை மயக்கத்
தந்திர வழிகளில்
தனித்தனி இடங்கள் -
மலைகள்,குகைகள்
மழித்தல், நீட்டல்
சிலைகள் , கருவறை
காவடி, தேர்கள்,
அச்சம் ஊட்டி
அடிமைப் படுத்தும்
இச்சக முயற்சிகள் -
ஏமாற்று உத்திகள் -
பாவ ,புண்ணிய,
பழிகற் பித்து
பரிகா ரங்கள்
பலஜோ டித்து
ஏறா நிலைமிசை
ஏற விடாமல்
இன்னும் கீழே
இறக்கும் வித்தைகள் -
எவையும் வேண்டா :
எளிமையாய்ச் சொன்னால்..

இரக்கம்,அன்பு,
இவற்றின் முதிர்வில்
சுரக்கும் கருணை
சொந்தமாய்க் கொண்டால் ,
அனுதினம் நமக்கே அனுகூ லம்தான்!
அனுபவம் அனைத்தும் அவன்கோ லம்தான்!

'இரக்கமும் நானும் இரண்டல்ல; ஒன்றே'
என்றவர் அனுபவம் எமக்குப் போதுமே!

கண்களில் அன்பைக் காட்டவும்,சொற்களில்
கருணை குழைக்கவும் கற்றுக் கொள்வோம்.
குற்றமே காணும்
குணத்தினை விட்டுச்
சுற்றுப் புறமெலாம்
சுற்றமாய்க் கொள்வோம்!

மாதா கோயில் மணியொலித் தாலும்
மாரியாத் தாவின் உடுக்கடித் தாலும்
மசூதி வானில் பாங்கொலித் தாலும்
மெழுகு வத்தியோ குத்து விளக்கோ
ஒழுகி எங்கே ஒளிகி டைத்தாலும்......

அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
என்னும் வாசகம்
இதழ்பிறக் கட்டும்!
எங்கும் கருணை
நதிநடக் கட்டும்!

இல்லாத ஒன்றை எங்கும் தேடி
இல்லாமல் போகும் ஏழைமை ஓடி-
எங்கும் இருப்பவர் இதயம் நாடி
இரக்கம் என்னும் எழிற்கவி பாடி...
வாழும் வாழ்க்கை திரவியம் கோடி
வழங்கும்; அதுவே நிலைக்கண் ணாடி!

வள்ளல் சொன்னவை
வார்த்தைகள் அன்று!
வடித்துச் சொல்லிய
வாழ்வி லக்கணம்!

உரத்துக் கூறிய
உண்மை உரைகள்!
உள்ளுறை அறியப்
பயன்படும் உரை-கல்!

குருதியும் சதையும்
கூடாய்க் கொண்டு
உலவிடும் அநேக
உயிர்களை விட்டு..
கற்களை நம்பிக் கைகளைக் குவிக்கும்
மக்களை நினைத்து வாடினார் வள்ளல்!

கருணை அற்றவர் கண்பார் வைக்கும்
கசிந்துரு காதார் அகவிழி தமக்கும்
அகப்படா தப்பா அருட்பெருஞ் ஜோதி!
சுகப்பட மாட்டான் சுயநல வாதி!

கருணையே கடவுள்!
கலங்கும் உயிர்கள்
எவையென்றாலும்
இரக்கம் சுரக்கும்
இதயமே கோயில்!
எளிமையே வழிபாடு!
இவற்றை ஒதுக்கி இயற்றப் பட்டது
கவைக்குத வாத கடவுட் கோட்பாடு!

அதிர்வெடி யாக அகிலம் அதிர
எதிர்நிலை எடுத்த இயக்க வாதி
வடலூர் வள்ளல் வாய்மொழி யைத்தான்
கடலூர்த் தமிழில் கவிஞன் உரைக்கிறேன்!

இன்னும் ஆயிரம் மேடைகள் ஏறி
மின்னும் அடிகள் மேன்மை அருட்பா
என்னும் புரட்சி இலக்கியம் பேசவே
என்னைப் படைத்தனர் எந்தையும் தாயும்

எனநான் தொடர்கிறேன்
என்றன் பணியே!
என்றும்நான் இருப்பது
சன்மார்க்க அணியே!

புறவிழி காணும்
பொய்களைச் சுட்டி
அகவிழி திறக்கும்
அறிவியக்கம்தான்
சன்மார்க்கம் என்பதில்..
சமரசம் இல்லை!
உயிர்மேல் கருணை
உணர்வு மிகுந்தால்
அதைவிட பக்தி
மார்க்கமும் இல்லை!

படைத்தவன் இருந்தால்....
படைக்கப் பட்ட
உயிர்களில் அவனை
உணர்ந்து தேடுவோம்!
தேகமே தித்திக்கத்
தேவாரம் பாடுவோம் !

இதைமறுப் போர்கள்
இன்றும் இருந்தால்..
சன்மார்க்க வழியில்
அறப்போர் தொடுப்போம் !
என்மார்க்கம் இதுவென்று
எவர்க்கும் உரைப்போம்!

சன்மார்க்கத் துள்ளும்
சடங்குகள் நுழைந்தால்
அடங்கா நிலையுடன்
அதையும் எதிர்ப்போம்

குறிகள், அடையாளம்
குடமுழுக்கு என்று
பொறிகள் இழந்தால்
போய்விடும் சன்மார்க்கம்!

இன்றும் வாழ்கிறார்
எமது வள்ளலார் !
அவரின் பார்வையில்
அனைவரும் இருப்போம்!