www.vallalarspace.com/durai
சாகாதவனே சுத்த சன்மார்க்கி! ஆனால், 'சுத்த சன்மார்க்கி' - என்று சொல்லுகின்றவர்களும் சாகின்றார்களே! அது ஏன்?

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

அன்புடையீர்! வணக்கம் பல. இன்புற்று வாழ்க!

ஒரு ஆராய்ச்சிப் படிப்பில் தேர்ச்சி அடையாமல் போவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இருந்தாலும், அந்த ஆய்வுப்படிப்பானது மற்ற வகுப்புகளைவிட உயர்ந்ததுதான். நாம் அறிவோம். அதுபோலத்தான், வள்ளலார் வாழ்ந்து காட்டிய போதனையின்படி, நித்திய முத்தேகசித்தியாகிய சுத்த சன்மார்க்கச் சாத்திய அனுபவம் பெறவில்லையென்றால், அவர்கள் சுத்த சன்மார்க்கமாகிய சாகாக்கல்வியில் தேர்ச்சி பெறாதவர்களே.

ஒருவாறு அவர்களைச் சன்மார்க்கிகள் என்று கொள்க. இருந்தாலும், இவர்கள் உலக சமய-மத, கலாந்த, போதாந்த, நாதாந்த, யோகாந்த, வேதாந்த, சித்தாந்திகளினும் மிகமிக உயர்ந்த ஆன்மீக அனுபநிலைக்கு மேலேறிய அருட்புண்ணியர்களே என்று அறிவோமாக.

உலகரெலாம் முத்தி அனுபவத்தில் முடிவர். சன்மார்க்கியானவர் முத்தியில்தான் துவங்குகிறார். எப்பொழுது ஒருவர், சீவகாருண்யம்-சத்துவிசாரம் இயற்றுகின்ற அந்த உயர்ந்த இடத்திற்கு வந்துவிட்டாரோ, அப்பொழுதே அவர் முக்தியின்ப அனுபவ நிலைக்களுக்கும் மேலான படிநிலைக்கு வந்துவிட்டார் என்பதுதான் இயற்கையுண்மை.

யோகத்தின் யோகம் கடந்த அனபவமாகிய முக்தியனுபவம் கடக்கும் பொழுது, சுழுப்திநிலை கடந்து துரிய அனுபவமாகிய யோகத்தின் ஞான நிலை அனுபவத்திற்கு ஒருவர் வருவார். அந்நிலையும் கடந்தவரே சன்மார்க்கி. அவரின் அனுபவமானது சரியை, கிரியை, யோகம், ஞானமாகிய படிக்கட்டுகளில் பதிமூன்றாம் நிலையாகும்.

அதாவது, இந்தப் பதிமூன்றாம் நிலையாகிய ஞானத்தில் சரியையும், அதற்கும் மேலான பதிநான்காம் நிலை அனுபவமாகிய ஞானத்தில் யோகமும் மிகஉயர்ந்த சீவகாருண்ய அனுபவங்களாகும். சன்மார்க்கள் இந்த அனுபவங்களை இயற்கை இயல்பாகப் பெறுகின்றார்கள்.

அடுத்து, பதினைந்தாம் நிலையாகிய ஞானத்தில் யோக அனுபவத்தைச் சத்துவிசாரத்தால் ஒருவர் மிகஎளிதாக இயற்கை இயல்பாகப் பெறக்கூடும். இந்த நிலையில்தான் ஒருவர் நிராசை நிலையை அடைகிறார்.

அதற்கும் மேலான முயற்சியுடைய உத்தமர்கள், நிர்மல அனுபவமாகிய ஞானத்தின் ஞான நிலைக்கு வருகிறார்கள். இந்தப் பதினாறாம் நிலை அனுபவமாகிய, நிர்மலமான சுத்த அருட்பூரண ஞானத்தை எவர் ஒருவர் பெறுகிறாரோ, அவரே 'சுத்த சன்மார்க்கி '- என்கிறார் வள்ளற்பெருமான். அந்த நிலையைத்தான் 'சுத்தசிவ துரியாதீத நிலை' - என்று, வள்ளலார் குறிக்கும் அருட்குறிப்பு. இந்நிலையில்தான், நித்திய முத்தேக சித்தி வாய்க்கும் என்பது அருள்மொழி.

தேகசித்தி பெறாதவர்கள் இந்தச் சுத்தசிவ துரியாதீத நிலைக்குக் கீழே உள்ளவர்கள்தான் என்றாலும், இகத்தே காலமுள்ளபோதே முக்தியின்பத்தைப் பெற்றுகொண்டு அதற்கும் மேலான பலஅருள் அனுபவங்களை அனுபவிக்கின்ற சுத்த சன்மார்க்க ஞானிகளே என்பதில் ஒருசிறிதும் ஐயம் வேண்டாம். இவர்களுக்குப் பூரண அருட்துணையானது எக்காலத்தும், எவ்விடத்தும் எள்ளளவும் குறைவுபடாமல் இருக்கின்றது. எத்தேவர்களையும் எதிர்க்கலாம். ஆனால், இவர்களுக்கு இடையூறுகள் செய்யாது இருக்கும்வண்ணம் பார்த்துக்கொள்வதே ஒரு பெருந்தவமாகும். இவர்களின் உண்மையான அருட்பணிகளுக்கு தங்களால் முடிந்த நல்லது செய்வதற்கு ஒருவருக்கு வாய்ப்புக் கிட்டுமேயானால், அது அவர் செய்த பெரும் புண்ணியமே! அனுபவித்து அறிந்துகொள்க. இவர்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள். ஆனால், இவர்களின் அகமிருந்து அனகமாய் எங்கும் ஓங்கும் அருட்சத்தியானது எல்லாம் செய்யவல்லது.

இத்தகைய இயற்கைப் பூரண அருட்சக்தியை நாம் எல்லோருமே அனுபவிக்கக்கூடிய சுதந்திரர்களாய்ப் பிறந்தாலும், தவறான வளர்ப்பாலும், சமய-மதங்களாலும், மார்க்கங்களாலும், பல சமூக, ஆன்மீக, சன்மார்க்க அமைப்புகளாலும், எல்லாவிதமான மாயைகளிலும் மிகஎளிதாக மிகவசமாக மாட்டிக்கொண்டு முடிவில் மரணத்திற்கே இரையாகின்றோம்.

மனிதனுக்கு இறவாமை என்பது நிச்சயம் உண்டு. சிந்திப்போமாக!

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்

நன்றி, வணக்கம்!
அன்பன் ஆன்மநேயன்,
துரை சாத்தணன்