www.vallalarspace.com/durai
திருஅருட்பாவில் 'உள்ளம்' - என்பது கரணத்தைக் குறிக்காது!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

திருஅருட்பாவில் உள்ளம் என்கின்ற சொல்லானது
விரிந்துஅலையும் நமது மனமெனும் பேய்க்குரங்கைக்
குறிக்காது என்பதைநாம் நன்கறிந்து கொள்வோமாக!
திருஅருட்பாவில் உள்ளம் என்பது நம்ஆன்மாவேயாம்!

சர்வ தத்துவங்களினது அந்தத்தில் உன்மனிக்கப்பால்
சுத்த விவேகமாய்ச் சாந்தநிறைவாய் இருக்கும்ஒன்றே
சுத்த அருளறிவாயும் இருக்கின்றது! அதுவேநம்உள்ளம்!
அந்த உள்ளத்தின் சொரூபமானது சுத்தஅருள்வெளியே!

இந்தச்,

சுத்த அருள்வெளியாகிய உள்ளமே ஆன்மாவாகும்
சுத்த அருள்வெளியாகிய உள்ளமே சிற்சபையுமாகும்
சுத்த அருள்வெளியாகிய உள்ளமே திருச்சபையுமாகும்
சுத்த அருள்வெளியாகிய உள்ளமே திருச்சிற்றம்பலம்

சுத்த அருள்வெளியாகிய நம்உள்ளமே பொடித்திருமேனி
சுத்த அருள்வெளியாகிய நம்உள்ளமே ஞானசபையுமாம்
சுத்த அருள்வெளியாகிய உள்ளமே திருநடராஜசபையுமாம்
சுத்த அருள்வெளியாகிய உள்ளமே அறிவுத்திருக்கோயில்!

'எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ.' ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்

"தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால் தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்
பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப் பேசிய தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப் பாஇனிஆற்றேன்." - ஆறாம் திருமுறை /
பிள்ளைச் சிறு விண்ணப்பம்

"சத்தியமாந் தனித்தெய்வம் தடையறியாத் தெய்வம்
சத்திகளால்எல் லாம்விளங்கத் தானோங்கும் தெய்வம்
நித்தியதன் மயமாகி நின்றதெய்வம் எல்லா
நிலைகளுந்தன் அருள்வெளியில் நிலைக்கவைத்த தெய்வம்
பத்திவலைப் படுகின்ற தெய்வம்எனக் கெல்லாப்
பரிசுமளித் தழியாத பதத்தில்வைத்த தெய்வம்
சித்திஎலாந் தருதெய்வம் சித்தாந்தத் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்." - ஆறாம் திருமுறை / அருட்ஜோதி நிலை


"அகரநிலை விளங்குசத்தர் அனைவருக்கும் அவர்பால்
அமர்ந்தசத்தி மாரவர்கள் அனைவருக்கும் அவரால்
பகரவரும் அண்டவகை அனைத்தினுக்கும் பிண்டப்
பகுதிகள்அங் கனைத்தினுக்கும் பதங்கள்அனைத் தினுக்கும்
இகரமுறும் உயிர்எவைக்கும் கருவிகள்அங் கெவைக்கும்
எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும்முத்தி எவைக்கும்
சிகரமுதல் சித்திவகை எவைக்கும்ஒளி வழங்கும்
திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர். " - ஆறாம் திருமுறை / பதி விளக்கம்

"உள்ளமும் உயிரும் உணர்ச்சியும் உடம்பும் உறுபொருள் யாவும்நின் தனக்கே
கள்ளமும் கரிசும் நினைந்திடா துதவிக் கழல்இணை நினைந்துநின் கருணை
வெள்ளம்உண் டிரவுபகல்அறி யாத வீட்டினில் இருந்துநின் னோடும்
விள்ளல்இல் லாமல் கலப்பனோ சித்தி விநாயக விக்கினேச் சுரனே." - ஐந்தாம் திருமுறை / சித்தி விநாயகர் பதிகம்

இங்கு , "உள்ளமும் உயிரும் உணர்ச்சியும் உடம்பும் உறுபொருள் யாவும்நின் தனக்கே...: - என்ற முதல் அடியில்; "உள்ளம் (ஆன்மா / அகம்,), உயிர் (சீவன் / அகப்புறம்),  உணர்ச்சி (கரணம் / புறம்),  உடம்பு (பொறி / புறப்புறம்)" - என்று நம் அகமிருந்து வரிசைப் படுத்திக் காட்டியுள்ளதில் கண்டு தெளிவோமாக!

நன்றி, வணக்கம், சுபம்!

 

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

அன்புடன்,
அன்பன் துரை சாத்தணன்