www.vallalarspace.com/durai
"சமரச சுத்த சன்மார்க்கம்" - வள்ளலார்

"சமரச சுத்த சன்மார்க்கம்" - வள்ளலார்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum

பூர்வத்தில் (துவக்கத்தில்) நின்ற சமயமத ஷடாந்தம் மற்றும் சமரச சன்மார்க்கங்களை மறுப்பது சுத்த சன்மார்க்கம்.

ஒருவாறு, சமயமத சன்மார்க்கங்களின் பொதுவாகிய ஷடாந்த சன்மார்க்கம் ஒன்று. இதற்கு அதீதம் (மேலானது) சன்மார்க்க சமரசம் ஒன்று. இதற்கும் அதீதமாக(மேலானது) உத்தரத்தில் (முடிவாக அல்லது மேற்பட்டது) சுத்த சமரசம். ஆதலால், சுத்த சமரசத்தில் சன்மார்க்கத்தைச் சேர்க்க, சுத்த சமரச சன்மார்க்கமாம். இது பூர்வோத்தர(ஆதியந்த அல்லது துவக்க-முடிவு) நியாயப்படி, கடைதலைப்பூட்டாகச் (முடிவே முதன்மையானதாக) சமரச சுத்த சன்மார்க்கமென மருவியது.

ஆன்மாவுக்கு அருள் எப்படி அநந்நியமோ, அதுபோல் சுத்த சன்மார்க்கத்திற்குப் பூர்வத்தில் (துவக்கத்தில்) சொன்ன சன்மார்க்கங்கள் ((1. சமயமத சன்மார்க்கம் அல்லது ஷடாந்த சன்மார்க்கம், மற்றும் 2. சமரச (வேத) சன்மார்க்கம் அல்லது சமரச சன்மார்க்கம்)) யாவும் அநந்நியமே அல்லாது அந்நியம் அல்ல என்று அறியவும்.

பூர்வத்தில் (துவக்கத்தில்) காணப்பட்ட சமயமத மார்க்கங்கள் எவை எனில்,
“1. சமய சன்மார்க்கம், மற்றும்
2. மத சன்மார்க்கம்” - என இரண்டு.

இவற்றுள் அடங்கிய சன்மார்க்கம் அனந்தம். அதில் சமய சன்மார்க்கத்தின் வகை ஆறு, தொகை முப்பத்தாறு, விரிவு அறுகோடி. இதுபோல் மதத்திலும் வகை தொகை விரிவு உள்ளன. மேற்குறித்த சமய-மத சன்மார்க்கங்களில் வகரவித்தை தகரவித்தையுள. அவை அவ்வச் சமயமத சன்மார்க்கங்களின் தலைமையாகிய கர்த்தா, மூர்த்தி, ஈசுரன், பிரமம், சிவம் - முதலிய தத்துவங்களின் காலப் பிரமான பரியந்தம் வரை இருக்கும்; அதற்குமேல் இருக்காது.

அடுத்து, ஷடாந்தமென்பது, ஆறு அந்தங்கள்; அதாவது, ஆறுவகை ஆன்மீக முடிபுகள். அவைகள்,
1. வேதாந்தம்,
2. சித்தாந்தம்,
3.போதாந்தம்,
4.நாதாந்தம்,
5.யோகாந்தம்,
6.கலாந்தம் - ஆக மொத்தம் ஆறு.

மேற்படி சமய-மத சன்மார்க்கங்களில், ஷடாந்த சமரச முளதோவெனில்: உள்ளது. யாதெனில்; வேதாந்த - சித்தாந்த சமரசம், யோகாந்த -கலாந்த சமரசம், போதாந்த -நாதாந்த சமரசம். இதற்கு அதீதம் ஷடாந்த சமரசம்.

மேற்படி அந்தங்களின் அனுபவம் காலம் இடம் முதலிய வேறுபாடுகளால் ஏறிக் குறையும். ஆதலால், ஷடாந்தமும் வியாபகமில்லாமல் வேதாந்-சித்தாந்தத்தில் மற்ற நான்கந்தமும் வியாப்பியமா யிருக்கின்றன (Dissolved).

மேற்படி அந்தங்களின் ஐக்கிய விவரம்: வேதாந்தத்தில் போதாந்த யோகாந்தமும், சித்தாந்தத்தில் நாதாந்த கலாந்தமும் அடங்கியிருக்கின்றன. இந்த ஐக்கியம் பற்றி வேதாந்த சித்தாந்தமே இப்போது அனுபவத்தில் சுத்த வேதாந்த, சுத்த சித்தாந்தமாய் வழங்குகின்றன.

இந்தச் சமயமத ஷடாந்த சமரசத்திற்கும் அதீதமாகிய சமரச வேத சன்மார்க்க சங்கம் அல்லது சமரச சன்மார்க்க சங்கம் என்பதற்குப் பொருள் யாதெனில்; எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாகிய அறிவுநூல் முடிபான நான்காவது மார்க்கத்தை அனுஷ்டிக்கின்ற கூட்டமென்று கொள்க.

மேற்படி மார்க்கம் நான்காவன:
1. தாச மார்க்கம் (சரியை மார்க்கம் அல்லது சீல மார்க்கம்) ,
2. சற்புத்திர மார்க்கம் (கிரியை மார்க்கம் அல்லது நோன்பு மார்க்கம்),
3. சக மார்க்கம் (யோக மார்க்கம் அல்லது செறிவு மார்க்கம்),
4. சன்மார்க்கம் (ஞான மார்க்கம் அல்லது அறிவு மார்க்கம்) - என நான்கு.

இதில், சமரச வேத சன்மார்க்கத்திற்கும் அல்லது சமரச சன்மார்க்கத்திற்கும் அதீதம் (உத்திரம்/மேலான/முடிவாகிய) ஆகிய சுத்த வேதாந்த சித்தாந்த அந்தாந்தமாகிய (எல்லா ஆன்மீக முடிபுகளுக்கும் மேலான முடிவான முடிபாகிய) சமரச சுத்த சன்மார்க்கமே நித்திய மார்க்கம் என்று அறியவும்.

இதன் தாத்பரியம் யாதெனில்: சமரசம் என்பதற்குப் பொருள் - எல்லா அந்தங்களினது அந்தமும் தனக்குப் பூர்வமாக்கித் தான் உத்தரத்தி னின்று மருவியது சமரசம். இந்தச் சமரசத்திற்கு அனுபவ ஸ்தானம் “குரு துரியநிலை” - என்று அறியவும்.

அடுத்து, சுத்த சமரச மென்பதற்கு நியாயம்: விந்து, பரவிந்து இரண்டையும் மறுக்கச் சுத்தவிந்து வந்தது போலும், சிவம், பரசிவம் இரண்டையும் மறுத்தது சுத்தசிவம் போலும். சன்மார்க்கம், சிவசன்மார்க்கம் இரண்டையும் மறுத்தது சுத்த சன்மார்க்கம்.

சுத்த சன்மார்க்கங்தான் யாதெனில், சுத்தம் என்பது ஒன்றும் அல்லாதது, அதாவது நிர்மலம். ‘சுத்தம்’ - எனும் சொல் சன்மார்க்கம் எனும் சொல்லுக்குப் பூர்வமாக வந்ததால், சுத்த சன்மார்க்கம் மேற்குறித்த சமய-மதானுபவங்களைக் கடந்தது என்று உண்மையாக அறிக. அஃது பூர்வாதி உத்தரோத்தர பரியந்தமாகும். இதன் முக்கிய லட்சியம், சுத்த சன்மார்க்க அனுபவ ஸ்தானமாகிய “சுத்த சிவ துரியாதீத நிலை” பெறில் விளங்கும்.

இங்கு, சன்மார்க்கம் என்பது, “சத் + மார்க்கம்” என்பதாம். இதில், சத்தென்பது பரிபாஷை. அது அனந்த தாத்பரியங்களைக் கொண்டு ஓர் வாக்கிய பதமாய் நின்றது. ‘மார்க்கம்’ - என்பது யாதெனின் வழி. வழியென்பது சத்தெனும் பரிபாஷைப் பொருளின் இயற்கையுண்மையைத் தெரிவிக்கின்ற மார்க்கம். இந்த, இயற்கை யுண்மையானது ஆன்மா அனுபவத்திலும், வகர-தகர வித்தையிலும் விளங்கும்.
இந்த முடிவான, சுத்த சன்மார்க்க அனுபவத்திற்குப் படிக்கட்டுகள் மூன்று.

1. சமய-மத சன்மார்கங்களின் அதீதமாகிய ஷடாந்த சன்மார்க்கம். இஃது சிற்சபை அனுபவம் என்றறிக.
அடுத்து,
2. ஷடாந்த சன்மார்க்கத்தின் அதீதமாகிய சமரச (வேத) சன்மார்க்கம் அல்லது சமரச சன்மார்க்கம். இது பொற்சபை அனுபவமாகும்.
முடிவாக,
3. சமரச வேத சன்மார்க்கத்திற்கும் அதீதமாகிய சுத்த சன்மார்க்கம். இஃது, சுத்த ஞானசபை அனுபவமாகும்.

முன்பு, வேதாந்த சித்தாந்தத்தில் ஷடாந்தம் ஐயிக்கியமாய் அடங்கி இருக்கின்றது என்று கண்டோம். இந்த வேதாந்த-சித்தாந்தத்தம் சிறந்ததாகினும், அனுபவத்தில் சுத்த வேதாந்தம், சுத்த சித்தாந்தமாய் வழங்குகின்றன். இதில், சுத்த வேதாந்தத்திற்கும் அதீத அனுபவ முடையது சுத்த சித்தாந்தமாகும். இந்தச் சுத்த சித்தாந்தத்திற்கும் அதீதமானது சுத்த சன்மார்க்கம் என்றறிக.


ஆக, இந்த வேதாந்த அந்தாதீத சித்தாந்த அந்தாதீதமாகிய சுத்த சன்மார்க்கமே நீடூழி அழியாத நித்திய சத்திய மார்க்கம் என்று உண்மையாக அறியவும். சுத்த சன்மார்க்கத்தின் ஏகதேசமென்பது, எந்தக் காலத்தும், எவ்வகைத் தடைகளுமின்றி அழியாத சுத்தப் பிரணவ ஞானதேகமென்கின்ற தேகசித்தியும், எல்லாம் வல்ல சர்வசித்தியும் பெற்றுக்கொள்வது. சுத்த தேகத்தினுடைய அனுபவத்தை விசாரித்தால் விசேஷமாம்.

சுத்த சன்மார்க்கத்தின் முடிபு, சாகாத கல்வியைத் தெரிவிப்பதேயன்றி வேறில்லை. சாகின்றவன் சுத்த சன்மார்க்க நிலையைப் பெற்றவனல்லன். சாகாதவனே சன்மார்க்கி.

சுத்த சன்மார்க்கிக்கு மட்டுமே என்றும் சாகாத நிலையைப் பெற்றுச் சர்வ சித்தி வல்லபமும் பெறக்கூடிய சாத்தியம் கிட்டும். மற்ற சமய-மத மார்க்கங்களில் ஐக்கியம் என்பதே இல்லை. தாயுமானவர் முதலானவர்கள்,சுத்த சன்மார்க்கிகள் அல்லர்; மத சன்மார்க்கிகள் என்று ஒருவாறு சொல்லலாம். இதில் நித்திய தேகம் கிடையாது. இது சாதக மார்க்கமே அன்றிச் சாத்திய மார்க்கம் அல்ல. நாளைச் சுத்த சன்மார்க்கம் வழங்கும் போது, இவர்கள் யாவரும் உயிர்பெற்று மீள வருவார்கள். முன்னிருந்த அளவைக்காட்டிலும் விசேஷ ஞானத்தோடு (விஞ்ஞானத்தோடு) சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்களாய் வருவார்கள். சாத்தியர்களாய் இரண்டறக் கலப்பார்கள்.

சர்வசித்தியையுடைய தனித்தலைமைப் பதியாகிய ஆண்டவரை வேண்டத் தபசுசெய்து சிருட்டிக்குஞ் சித்தியைப் பெற்றுக்கொண்டவன் பிரமன்; சிருட்டி, திதி ஆகிய சித்தியைப் பெற்றுக்கொண்டவன் விஷ்ணு; சிருட்டி, திதி, சங்காரம் ஆகிய சித்தியைப் பெற்றுக்கொண்டவன் ருத்திரன். இவர்கள் ஏற்படுத்திய, சமய மார்க்கங்களை அனுஷ்டிக்கின்றவர்கள், இவர்களை அந்தந்தச் சமயங்களுக்குத் தெய்வங்களாக வணங்கி வழிபாடு செய்து வந்தார்கள். இம்மூர்த்திகளுடைய சித்திகள், சர்வ சித்தியையுடைய கடவுள் சித்தியின் இலேசங்கள்; அதில் ஏகதேசம்கூட அல்ல. ஆகையால், இவர்கள் அந்தச் சர்வசித்தியுடைய கடவுளுக்கு ஒப்பாகார்கள்; கோடி கோடிப்பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கின்றார்கள்.

ஆகையால், சமய தெய்வங்களை வழிபாடு செய்து, அந்தச் சமய தெய்வங்களிடம் பெற்றுக்கொண்ட அற்ப சித்தியில், அவர்கள் மயங்கி, மகிழ்ந்து, அகங்கரித்து மேலேறவேண்டிய படிகளெல்லாம் ஏறிப் பூரண சித்தியை அடையாமல், தடைபட்டு நிற்றல்போல் நில்லாமல், சர்வசித்தியுடைய அந்த ஒரே கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து, பூரண சித்தியைக் காலமுள்ள போதே பெற்றுக்கொள்ள வேண்டுவது, சுத்த சன்மார்க்கத்தவருடைய முக்கியமான இலட்சியக் கொள்கையாக இருக்க வேண்டும். இதை ஆண்டவர் தெரிவித்தாரென்று அறிக.

சுத்த சன்மார்க்கம் விளங்கும் காலத்தில், எல்லாம்வல்ல நம் ஆண்டவர் இன்னும் வெளிப்படையாகத் தெரிவிப்பார்.

குறிப்பு: மேற்படி பதிவு திருஅருட்பா உரைநடைப்பகுதியிலிருந்து (திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் வெளியீடு, ஐந்தாம் பதிப்பு 5-10-2006, பக்கம் 401 முதல் 411 வரை) எடுத்துத்தரப் பட்டுள்ளது.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All Possible, I swear on Divine Abode
Exalt HIM - the Almighty only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss!
Let the Grace-Feet reign Grace-Rule!

நன்றி, வணக்கம், சுபம்.
அன்புடன்,
அன்பன் துரை சாத்தணன்

2 Comments
Arivoli Muthukumarasamy
http://www.vallalarspace.org/KarunaiSabai/c/V000020949B
Thursday, January 19, 2017 at 20:31 pm by Arivoli Muthukumarasamy
Durai Sathanan
Dear Ayyah, Please read: "திருஅருட்பா உரைநடைப்பகுதி(திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் வெளியீடு, ஐந்தாம் பதிப்பு 5-10-2006, பக்கம் 401 முதல் 411 வரை to find the truth that the above article is copied from the "திருஅருட்பா உரைநடைப்பகுதி" only. A truth seeker who read the "திருஅருட்பா உரைநடைப்பகுதி" clearly knows the truth of my words here . All Sanmargies do copy either from the Arutpa Songs or from the "திருஅருட்பா உரைநடைப்பகுதி" only. No one can say on their own about Sutha Sanmargam other than Vallalar, Ayyah. All borrow from Vallalar only! I will try to post the true photocopies of those pages here as soon as possible. Thanks a lot for reading all my articles and commenting on them, which really keep me stay focused on Sutha Sanmargam, and arise from grace-light. Arutperunjothi...
Friday, January 20, 2017 at 03:50 am by Durai Sathanan