www.vallalarspace.com/durai
'கடவுட் கருணைக்குக் கைம்மாறு எதுண்டு'- அருட்பா



ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

087. கைம்மாறின்மை / kaimmāṟiṉmai

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

1. கடையேன் புரிந்த குற்றமெலாம் கருதா தென்னுட் கலந்துகொண்டு
தடையே முழுதும் தவிர்த்தருளித் தனித்த ஞான அமுதளித்துப்
புடையே இருத்தி அருட்சித்திப் பூவை தனையும் புணர்த்திஅருட்
கொடையே கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

2. கடுத்த மனத்தை அடக்கிஒரு கணமும் இருக்க மாட்டாதே

படுத்த சிறியேன் குற்றமெலாம் பொறுத்தென் அறிவைப் பலநாளும்
தடுத்த தடையைத் தவிர்த்தென்றும் சாகா நலஞ்செய் தனிஅமுதம்
கொடுத்த குருவே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

3. மருவும் உலகம் மதித்திடவே மரண பயந்தீர்த் தெழில்உறுநல்

உருவும் பொருள்ஒன் றெனத்தெளிந்த உணர்வும் என்றும் உலவாத
திருவும் பரம சித்திஎனும் சிறப்பும் இயற்கைச் சிவம்எனும்ஓர்
குருவும் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

4. சேட்டித் துலகச் சிறுநடையில் பல்கால் புகுந்து திரிந்துமயல்

நீட்டித் தலைந்த மனத்தைஒரு நிமிடத் தடக்கிச் சன்மார்க்கக்
கோட்டிக் கியன்ற குணங்களெலாம் கூடப் புரிந்து மெய்ந்நிலையைக்
காட்டிக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

5. தோலைக் கருதித் தினந்தோறும் சுழன்று சுழன்று மயங்கும்அந்த

வேலைக் கிசைந்த மனத்தைமுற்றும் அடக்கி ஞான மெய்ந்நெறியில்
கோலைத் தொலைத்துக் கண்விளக்கம் கொடுத்து மேலும் வேகாத
காலைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

6. பட்டிப் பகட்டின் ஊர்திரிந்து பணமே நிலமே பாவையரே

தெட்டிற் கடுத்த பொய்ஒழுக்கச் செயலே என்று திரிந்துலகில்
ஒட்டிக் குதித்துச் சிறுவிளையாட் டுஞற்றி யோடும் மனக்குரங்கைக்
காட்டிக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

7. மதியைக் கெடுத்து மரணம்எனும் வழக்கைப் பெருக்கி இடர்ப்படும்ஓர்

விதியைக் குறித்த சமயநெறி மேவா தென்னைத் தடுத்தருளாம்
பதியைக் கருதிச் சன்மார்க்கப் பயன்பெற் றிடஎன் உட்கலந்தோர்
கதியைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

8. தருண நிதியே என்னொருமைத் தாயே என்னைத் தடுத்தாண்டு

வருண நிறைவில் சன்மார்க்கம் மருவப் புரிந்த வாழ்வேநல்
அருண ஒளியே எனச்சிறிதே அழைத்தேன் அழைக்கும் முன்வந்தே
கருணை கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

9. பொற்பங் கயத்தின் புதுநறவும் சுத்த சலமும் புகல்கின்ற

வெற்பந் தரமா மதிமதுவும் விளங்கு329 பசுவின் தீம்பாலும்
நற்பஞ் சகமும் ஒன்றாகக் கலந்து மரண நவைதீர்க்கும்
கற்பங் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

10. புலையைத் தவிர்த்தென் குற்றமெலாம் பொறுத்து ஞான பூரணமா

நிலையைத் தெரித்துச் சன்மார்க்க நீதிப் பொதுவில் நிருத்தமிடும்
மலையைக் காட்டி அதனடியில் வயங்க இருத்திச் சாகாத
கலையைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

11. அருணா டறியா மனக்குரங்கை அடக்கத் தெரியா ததனொடுசேர்ந்

திருணா டனைத்தும் சுழன்றுசுழன் றிளைத்துக் களைத்தேன் எனக்கந்தோ
தெருணா டுலகில் மரணம்உறாத் திறந்தந் தழியாத் திருஅளித்த
கருணா நிதியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

12. மண்ணுள் மயங்கிச் சுழன்றோடு மனத்தை அடக்கத் தெரியாதே

பெண்ணுள் மயலைப் பெருங்கடல்போல் பெருக்கித் திரிந்தேன் பேயேனை
விண்ணுள் மணிபோன் றருட்சோதி விளைவித் தாண்ட என்னுடைய
கண்ணுள் மணியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

13. புலந்த மனத்தை அடக்கிஒரு போது நினைக்க மாட்டாதே

அலந்த சிறியேன் பிழைபொறுத்தே அருளா ரமுதம் அளித்திங்கே
உலந்த உடம்பை அழியாத உடம்பாப் புரிந்தென் உயிரினுளே
கலந்த பதியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

14. தனியே கிடந்து மனங்கலங்கித் தளர்ந்து தளர்ந்து சகத்தினிடை

இனியே துறுமோ என்செய்வேன் எந்தாய் எனது பிழைகுறித்து
முனியேல் எனநான் மொழிவதற்கு முன்னே கருணை அமுதளித்த
கனியே கரும்பே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

15. பெண்ணே பொருளே எனச்சுழன்ற பேதை மனத்தால் பெரிதுழன்ற

புண்ணே எனும்இப் புலைஉடம்பில் புகுந்து திரிந்த புலையேற்குத்
தண்ணேர் மதியின் அமுதளித்துச் சாகா வரந்தந் தாட்கொண்ட
கண்ணே மணியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

16. பொருத்திக் கொடுத்த புலைஉடம்பில் புகுந்தேன் புணைத்தற் கிணங்காத

எருத்தில் திரிந்தேன் செய்பிழையை எண்ணா தந்தோ எனைமுற்றும்
திருத்திப் புனித அமுதளித்துச் சித்தி நிலைமேல் சேர்வித்தென்
கருத்தில் கலந்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

17. பெண்ணுக் கிசைந்தே பலமுகத்தில் பேய்போல் சுழன்ற பேதைமனத்

தெண்ணுக் கிசைந்து துயர்க்கடலாழ்ந் திருந்தேன் தன்னை எடுத்தருளி
விண்ணுக் கிசைந்த கதிர்போல்என் விவேகத் திசைந்து மேலும்என்தன்
கண்ணுக் கிசைந்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

18. மாட்சி அளிக்கும் சன்மார்க்க மரபில் மனத்தைச் செலுத்துதற்கோர்

சூழ்ச்சி அறியா துழன்றேனைச் சூழ்ச்சி அறிவித் தருளரசின்
ஆட்சி அடைவித் தருட்சோதி அமுதம் அளித்தே ஆனந்தக்
காட்சி கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே



19. பொய்யிற் கிடைத்த மனம்போன போக்கில் சுழன்றே பொய்உலகில்

வெய்யிற் கிடைத்த புழுப்போல வெதும்பிக் கிடந்த வெறியேற்கு
மெய்யிற் கிடைத்தே சித்திஎலாம் விளைவித் திடுமா மணியாய்என்
கையிற் கிடைத்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

20. போதல் ஒழியா மனக்குரங்கின் போக்கை அடக்கத் தெரியாது

நோதல் புரிந்த சிறியேனுக் கிரங்கிக் கருணை நோக்களித்துச்
சாதல் எனும்ஓர் சங்கடத்தைத் தவிர்த்தென் உயிரில் தான்கலந்த
காதல் அரசே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.