கவிஞர். கங்கைமணிமாறன்
பச்சை மோசடி...!
பசு நமக்குப் பால் கொடுக்கும்.
இதைக் காலங்காலமாய்க் கற்பித்தும்
கற்றும் வருகிறோம்.
சற்றே யோசித்தால் நம் சுயநலம் 
முற்ற விளங்கும் இந்தச் சொற்றொடரில்.
பசு நமக்குப் பால்கொடுக்கு்ம் என்பது
பச்சை மோசடி.
பசு அதன்  கன்றுக்குத்தான் பால் கொடுக்கும்.
நமக்குப் பால்  வேண்டுமென்றால் நாம்
வலிந்து கறக்க வேண்டும்.
கன்றுக்கோ அதுவே சுரக்கும்.
இயற்கை படைத்த  விதிகளை 
சுயநலம் கருதிச்
சிதைத்துச் சீரழித்த மனிதன்
தன்னைக் காத்துக் கொள்ளத்
தயாரித்த கவசங்களில் ஒன்றுதான்
இது போன்ற  ஏமாற்று  வாசகங்கள்.
கன்றுக்குப் பாலூட்டாது
கட்டிவைக்கும் கொடுமையை
வள்ளலார் நேரில் கண்டு 
நெக்குருகித்தான்
மனுமுறை கண்ட வாசகத்தில்
அதைப் பாவப்பட்டியலில் சேர்த்துப்
பதறினார்.