Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
பக்குவமுண்டாக்கல்..ஆன்ம பரிபாக நிறைவு..சோறான முத்தி நிலைப் பேறு...சுவாமி சரவணானந்தா.
திண்டுக்கல்லில் வாழ்ந்த சுவாமி சரவணானந்தாஅவர்கள் எழுதி வெளியிட்ட வாழ்த்தி வணங்கி வாழ்தல் என்ற நூலில் ஒரு பகுதி...”பக்குவமுண்டாக்கல்” என்பதாகும். அன்பர்களின் தகவலுக்காக, இங்கு அது பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.

பக்குவமுண்டாக்கல்.

     எதையுமே பக்குவப்படுத்த வேண்டுமானால், கீழ்நிலையிலிருந்துமுறைப்படி இளைவுகொள்ளச் செய்ய வேண்டியுள்ளது. இதற்குத் தகுந்த சூழ்நிலையை அமைத்துக் கொடுத்து, கால வரையறையும் செய்ய வேண்டியுள்ளதாம்.

     நெடுங்கால எல்லையில் இவ்வுலகம் உயிரினங்கள் வாழப்பக்குவப்பட்டது. அவ்வுயிர்களினுள் புலனறிவு தோன்றி நிறைவு பெற எவ்வளவோ காலம் பொறுக்க வேண்டியிருந்தது. அப்புலனறிவு ஐம்பொறியுடம்பில் நிரம்பி, ஆறாவதாகிய மன அறிவு தோன்றியபோது ஆன்மாவுக்கு மனித தேகம் வந்தது. இம்மனோவறிவு பக்குவப்பட எத்தனை கோடி காலம் சென்றதோ... பகுத்தறிவு வந்தும் சுத்த அன்பு நிரம்பாததால் பண்பாடெய்தாதிருந்தது நெடுங்காலம்.   வேத கால முதல் சமீப காலம் வரை விளைந்த அறிவுக்குச் சரியாக அன்பு விளையவில்லை. கந்தழிக் கடவுணிலையைக் கண்ட அறிவுக்கும் கருணை நிறைவு உண்டாகாதிருந்தது. அதனால்தான் இவ்வளவு நீண்ட காலம் மனுக்குலம் அபக்குவத்தால் எல்லையில்லா அல்லல் வாழ்வில் பிழைத்துக் கொண்டு வந்துள்ளதாகும். ஏன் இவ்வளவு காலம் கசக்கிப் பிழிகின்றார் கருணைக் கடவுள், என்றால், அது தான் ஆன்ம பரிபாகஞ் செய்யும் முறையாகவுள்ளதென, அருள் நிலை நின்று, இன்று தெளிகின்றோம்.

     அரிசியை அன்னமாகப் பாகஞ்செய்ய வேண்டுமானால், அவ்வரிசியைச் சுத்தஞ் செய்து, கலத்திற் பெய்து, நீர் கூட்டி, அடுப்பேற்றி, தீ கொண்டு, எரித்து குறிப்பிட்ட காலம் வரை வேக வைக்க வேண்டியுள்ளது. பின்னர் தான் சோறாகி, ஏற்றத் தக்கதாக விளங்கும். இதில், அன்னம் பாகம் செய்யபடுவதில் எத்தனை எத்தனை மாற்ற தோற்றச் செயல்களும் கால விரயமும் ஆகின்றன..இதே போலத்தான், கடவுள் அன்னமாகிய ஆன்மா, பரிபாகம் அடைவதற்கு மாற்ற தோற்ற கால விரயங்கள் உண்டாகின்றன. ஆனால், இதன் காலமோ யுகயுகமாக விரிந்துள்ள ஒன்றாம். இப்பரிபாக காலத்தில் ஏற்படுகின்ற சுக, துக்க அனுபவங்கள் எல்லாம் பொறியுடம்பின் சேர்க்கையால் தோன்றி மறைந்தவையேயாம்.  உடலினிற் பிரிந்த ஆன்மாவுக்கு எந்த சுக துக்க அனுபவமும் இல்லை. கால எல்லையும் இல்லை. கற்ப கோடி காலம் ஒரு இமையளவும் போதாகக் கடந்திடுகின்றது. உடல் வாழ்வில் நெடுங்காலம் பட்ட துன்பமெல்லாம் ஒரு கணத்தில் மறைந்து மறந்து போகின்றதாம். எத்தனை கோடி பிறப்பில் பிறந்து பிறந்து, எத்தனை கோடி காலம் எவ்வளவு துன்ப வேதனைகள் பட்டோமோ, அது ஒன்றுந் தெரியவில்லை இன்று நமக்கு.   ஆனால் அப்படி பட்டுப்பட்டு வந்துள்ளது உண்மையே. இந்தப் பிறப்பில் சிறிய ஆயுளெல்லையில் படுகின்ற துன்பங்களும் கஷ்டங்களுமே பெரிய்னவாகத் தோன்றுகின்றன. இவையெல்லாமென்று தொலையும், எப்போது திருவருள் கிட்டும், இன்னும் எத்தனை நாட்களில் இவ்வல்லல்கள் எல்லாம் பட வேண்டுமோ என்றெல்லாம் நினைந்து நினைந்து வருந்திக் கொண்டுள்ளோம். இச்சூழலிலிருந்து கொண்டு விசார மேற்கொள்ள, திருவருள் நாட்டமுண்டாகிட வேண்டாமை வேண்டுதல் அறுகின்றது. அப்போது, அன்பும் அறிவும் செறிந்த அருட் பக்குவம் சிறிது சிறிது உண்டாகின்றது. பூர்ண அருள் கிடைக்கும் நொடியில், அமைதி பிறக்கின்றது, ஆனந்தம் உதிக்கின்றது. பழையனவெல்லாம் மறந்து புத்தம் புதிய அருட்ஜோதிப் பொலிவோடு ஆனந்த வாழ்வு ஏற்கின்றோம். இதுதான் ஆன்ம பரிபாக நிறைவு, சோறான முத்தி நிலைப் பேறு.
New Doc 2018-08-10_1.jpg

New Doc 2018-08-10_1.jpg