Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
இங்கித மாலை பாடல் எண்.28க்கு உரை விளக்கம்...சுவாமி சரவணானந்தா.
ஒருகை முகத்தோர்க்(கு) ஐயன் எனும் ஒற்றித் தேவர் இவர்தமைநான்
வருகை உவந்தீர் என்றனைநீர் மருவி அணைதல் வேண்டுமென்றேன்
தருகை யுடனே அகங்காரம் தனையெம் அடியார் தமை மயக்கை
இருகை வளைசிந்(து) என்கின்றார் இதுதான் சேடி என்னேடீ.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

     ஒற்றித் தேவர் ஒருகை முகத்தவர்க்கு ஐயர் ஆம். என்ன? ஒருகையாம் சிறப்புடைய, ஒப்பற்ற துதிக்கப்படும் துதிக்கை உடைய விநாயகருக்குத் தந்தையாம் இவ்வொற்றிப் பெருமான். அதுதான் புராணப் பொருள். இங்கு அருள் இங்கிதப் பொருள் வேறாம்.

     ஆன்மத் தலைவி பெண்ணுடல் கொண்டு திகழ்கிறாள். ஓங்கார பிரணவ சொரூபியாகிய இஅவளே, கணபதி, பிரணவி, யானைமுகத் துதிக்கையாளும் ஆவள், அகப்புற அனுபவத்தின் பொருட்டே ஒரு கையையே இருகையாகவும் கொண்டுள்ளாளாம். அக அனுபவத்திற்கு ஒன்றும், புற அனுபவத்திற்கு ஒன்றும் ஆக இருகை இயல்பும் ஒரு கையிற்பெறவுள்ளாள்: ‘அகத்தின் அழகு முகத்தில்’ என்பது பழமொழி. இரு கையானை என்றால், பெரிய கை, தும்பிக்கையுடைய யானை என்பது ஒரு பொருள். மணம் அறிகருவியாம் மூக்கும், தொட்டறி கருவியாம் கையும் ஒன்றாய் விளங்கும் ஒரு துதிக்கையுடைய (மூக்கு-கை) மூக்கையன் தானே இருகையனும், ஒருகையனும் முருகையனும் கூடவாம். இன்னோர்க்குத் தந்தையாய் இருப்பதைவிட, நம் ஆன்மத் தலைவிக்குத் தலைவனாம் ஐயராக இருப்பதே பேரின்பானுபவத்திற்குரியதாய் இருக்கிறது இங்கு.

     ஆன்மாவுக்கு அகத்தே அருள் மணம் விளைவு கொள்ளவும், புறத்தே உடற்பரிசம் நிறைவுறவும் இப்பிறவி வழங்கப் பெற்றுள்ளது. இதனால் தான் “அடியேன்முன் எழுந்தருளியுள்ள பெருமானே, உவந்து வந்திருக்கும் உரியோனே, அடியேனை நீர் மருவி இணைதல் வேண்டுகின்றாள். நீர் மருவி இணைதல் என்றதற்கு அன்பாம் நீரில் மூழ்கி அருளால் அணைத்துக் கொள்ள வேண்டும் என்றதாகக் கொண்டு, பதி பதில் பகருகின்றார். அருள் அணைப்புற அன்பில் நிறைவு பெற வேண்டுமாம்; அதற்காகத் தருகை, அகங்காரம், அடியார், மயக்கம் இந்நான்கோடு, இரு, கை, வளை, சிந்து எனும் நான்கு சொற்களைச் சேர்த்தால் அவளது வேண்டுதல் நிறைவேறுமாம். எப்படி;  தருகையோடு இரு; அகங்காரத்தைக் கை; அடியார் தமை வளை; மயக்கத்தைச் சிந்து; இப்படி இருத்தலால் பக்குவம் உண்டாகி, அன்பு நிரம்பிட, அருட் பதியால் அணைக்கப் பெறலாம். அருள் இன்ப அனுபவம் உறலாம் என்பது கருத்து.

     ‘இரு கை வளை சிந்து; என்பது, தலைவியின்பால், தலைவன் மீது ஏற்படும் அருட்காதல் மிகுதியால், பலவித, மென்மையும், இளைப்பும் தோற்றும்; அதனால் அவளது கரத்தில் அணிந்துள்ள வளையல் நழுவி விழுந்து விடுமாம். இது அகப்பக்குவத்திற்கோர் புற அடையாளமாம்.

      அருட்பெருஞ்ஜோதி அகவலில், ‘தனி அன்பு’ எனும் தலைப்பின் கீழ், “என்பெலாம் நெக்கு நெக் கியலிடை நெகிழ்ந்திட, மென்புடைத் தசை எலாம் மெய்யுறத் தளர்ந்திட.” என்ற ஈரடிகளின் குறிப்பால், தலைவியின் இளைப்புத் தோற்றம் யூகிக்கப்படலாம். அருட் பக்குவிக்கே இந்நிலைச் சூழலால் அகமிருந்து, இறை இன்பானுபவம் பொங்கும்.. மாறாக அன்பொழுக்கமும் அருள் வேட்கையும் இல்லார்க்கு உண்டாகும் இளைப்பால் கூட இருகை வளை சிந்தக்கூடும். கழன்று விழக்கூடும். அதனால் அன்னோர்க்கு அகத்ஹ்டில் இருளும், துன்ப வேதனையுமே நிரம்பி உயிர்க்கு ஊறு விளைவிக்கும். ஆகவே, பக்குவத் தலைவியின் இன்பானுபவ விளக்கமே இதில் இங்கிதமாய்க் கண்டு கொள்ள வேண்டும். 
vlcsnap-2018-03-25-21h21m14s761.png

vlcsnap-2018-03-25-21h21m14s761.png

vlcsnap-2018-03-25-19h46m56s364.png

vlcsnap-2018-03-25-19h46m56s364.png