Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
இங்கித மாலை பாடல் எண்.26க்கு உரை விளக்கம்...சுவாமி சரவணானந்தா.
சேடார் வளஞ்சூழ் ஒற்றி நகர்ச் செல்வப் பெருமான் இவர்தமைநான்
ஓடார் கரத்தீர் எண்தோள்கள் உடையீர் என்னென் றுரைத்தேன்நீ
கோடா கோடி முகம்நூறு கோடா கோடி களம் என்னே
ஈடாய் உடையாய் என்கின்றார் இதுதான் சேடி என்னேடி..................(பாடல் எண்.26).

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

     உலகில் விளங்கும் எல்லாப் பெருமைகளுக்கும், செல்வச் செழுமைகளுக்கும் காரணமாய் இருக்கின்றவர் நம் ஒற்றிப் பெருமானே.  அப்படிப் பட்டவர் இப்போது திருவோட்டைக் கைகளில் ஏந்திக் கொண்டு வந்து முன் நிற்கின்றார். “அந்தச் சிவக் கோலத்தை மறைத்துக் கொண்டு, இந்த தவக் கோலத்தில் வந்திருக்கும் பெருமானே, உமக்கு எட்டு தோள்கள் (அஷ்ட புஜம்) எட்டு கைகள் உண்டு என்கின்றார்களே..அதன் உண்மை என்ன?” என்று தலைவி கேட்கிறாள். இக்கேள்விக்குப் பதில், அவர் நேரடியாகக் கூறாது, மற்றொரு எதிர்க் கேள்வியாகவே கேட்டு வைக்கின்றார். அதாவது, “எனக்கு எண்தோள் இருப்பது எதற்கு என்றா கேட்கிறாய்; இதனைவிட வியப்பு உனக்கு கோடா கோடி முகம், நூறி கோடா கோடி கழுத்து இருக்கிறது எவ்வளவு பொருத்தமாய் இருக்கிறது” என்ற ஆச்சரியக் கேள்வியே பதிலாய் விடுக்கிறார்.

            பெருமானுக்கு இருக்கும் எண்தோள், அவரது ஆற்றல், எண் திசை வான்வெளி எங்கும் செயல்படும் உண்மையைச் சுட்டுவது. எட்டே அகர எழுத்தாகவும் உள்ளதாம். பரமாகாச சொரூபி அகர முதல்வன், ஆன்மத் தலைவிக்குத் தலைவன், அவனே தென் மெய்யறிவின்ப அனுபவத்தை வழங்குவதற்கென்றே இப்போது பிச்சைப் பெருமானாய்த் தோற்றியுள்ளார். அவ் அனுபவத்தின் பொருடே இவ்வினா விடைகள் யாவுமாம்.

          அவர், எட்டாம் ஆகாச வடிவினராய் உள்ளதை அறிவோம்.  இந்த ஆன்மத் தலைவி, அவ்வாகாசத்தினின்று செயல்பட்டுள்ள உகர, மகர மெய் விளக்கம் கொண்டதாய் உள்ளதைத்தான் இச் செய்யுளின் மூன்றாம் அடியில் காண்கின்றோம். தலைவியின் முகம் கோடா கோடியாம். அவளது கழுத்து நூறு கோடா கோடியாம். இந்தக் கோடா கோடியும், நூறு கோடா கோடியும் பதுமம், சங்கம் என்ற பெயரால் குறிக்கப்படும். பதுமநிதி கோடா கோடிப் பொன்னாகவும், சங்கநிதி நூறு கோடா கோடிப் பொன்னாகவும் கூறப்படும். இங்கு குறிக்க வந்தது பதுமமாகிய தாமரை போன்ற முகமும், சங்கு போன்ற கழுத்துமாய்க் கொள்ளப்படும். சங்கு நாதமும், தாமரை எனும் அரவிந்தம் ஜோதியுமாம். இப்படி நாதமும் விந்துவும் உகரமும் மகர மெய்யுமாய்க் கடினபகுதி தலைவியின் கூறாய் இருப்பதால், அகரமாகிய தலைவன் கூறோடு பொருந்தி (அ - உ - ம்) ஓமாகிய மெய்ப்பொருள் அனுபவ சித்தியின் பொருட்டே அமைந்துள்ளதென அறியலாகின்றது. 

                   எல்லா எழுத்துக்கும், அகர முதல் ஆவது போல, எண்களின் ஈற்றில், ஒன்று, இரண்டு, மூன்று என உகரமே தொடர்ந்து (தொள்) ஆயிரம் எனும்போது மகர மெய் கொண்டு முடிகின்றது. இதனால் அ - என அவர் நிற்க உம் - என இவள் கூடி, அ, உ, ம்...ஓமாம் சுகானந்த அனுபவம் சித்திப்பதாம்.

                    அஷ்டாக்‌ஷர சொரூபி ஆகிய திருமால், உகர நாத சங்கையும், மகரமெய் ஜோதிச் சக்கரத்தையும் கைக் கொண்டு விளங்குவதும் இதன் மூலமாக உள்ளுறை பொருளாகக் காணலாம்.

                    ஆன்மாவை யகரமாகிய பத்தாய்க் குறிக்கப்படும். அது, அகரமாகிய எட்டும் உகரமாகிய இரண்டும் சேர்ந்ததாக அறிவோம். ஓம் தானே நம் ஆன்மா. இதில் அ-உ-ம் கூடியிருத்தலை அறிவோம். ஆனால் யகரமாகிய பத்துள் மகர மய் மறைந்து கிடைத்தலை அறியோம்.   அது யகரமேல் நாதமும் விந்துவும் அதாவது (ய்) இப்படிச் சேர்த்து அக அனுபவத்தில் உண்மை காணலாம்.
IMG_20160821_122749.jpg

IMG_20160821_122749.jpg