Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
திருக்கதவம் திறத்தல்.பாடல் எண்.4 விளக்கவுரை...சுவாமி சரவணானந்தா.
திருக்கதவம் திறத்தல் பாடல் எண்.4க்கு விளக்கவுரை....சுவாமி சரவணானந்தா, திண்டுக்கல்.

உன்புடைநான்பிறர்போல உடுக்கவிழைந் தேனோ
   உண்ணவிழைந் தேனோவே(று) உடைமைவிழைந் தேனோ
அன்புடையாய் என்றனைநீ அணைந்திடவே விழைந்தேன்
   அந்தோஎன் ஆசைவெள்ளம் அணைகடந்த தரசே
என்புடைவந் தணைகஎன இயம்புகின்றேன் உலகோர்
   என்சொலினும் சொல்லுகஎன் இச்சைஎலாம் விடுத்தேன்
தென்புடையோர் முகநோக்கித் திருப்பொதுநிற் கின்றோய்
   சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே...                                   (திரு அருட்பா)

உரை விளக்கம்...

     பொதுவாக உலகியல் மக்கள், தெய்வ நம்பிக்கையும், பக்தியும், புலன் இன்ப வாழ்வில் பேராவலும் உடையவர்கள் ஆவர். இவர்கள் எல்லாம் நம் ஞான சபா அருட் ஜோதிமுன் உற்று என்ன வேண்டுவார்கள் ? சுகபோக வாழ்வுக்காம் இடம், பொருள், ஏவல்களையே மிக விரும்பி வேண்டிக்கொள்ளுதல் இயல்பு.   அப்படி இல்லை, நம் அடிகள்.    ஆகையால், உன்புடை நான் பிறர் போல உடுக்க விழைந்தேனோ ? உண்ண விழைந்தேனோ ? வேறு உடைமை விழைந்தேனோ ? என வினாவாக முறையிடுகின்றார். அதாவது, இவர் மற்றவர்களப் போல உண்டு, உடுத்து, உடைமை கொண்டு களித்து இருக்க விரும்பவில்லை என்பது கருத்தாம்.

     “அன்புடையாய் என்றனை நீ அணைந்திடவே விழைந்தேன்” என்று, தன் குற்றமற்ற இச்சையைக் குறிக்கின்றார்.  இப்படி யார் தெய்வத்தின் முன் உற்று, அத் தெய்வத்தையே பெற்று, அதன் மயமாகி விட வேண்டிக்கொள்ளுகின்றார்கள் ? ஆண்டவரோடு இணைந்து அவர் மயமாய் வாழ எவர்தான் வரம் வேண்டுகின்றனர் ? அப்படி இதுகாறும் யாரும் வேண்டவுமில்லை...பெறவுமில்லை...இந்தப் புதுமையான கோரிக்கைதான் நம் பெருமானாரின் வேண்டுகை. இவ்வேண்டுகையே பெரும் வேட்கையாகி, ஆவற்பெருக்காகி அணை கடந்து விட்டது என்று இறைமுன் இசைத்து நிற்கின்றார்.

     இந்த, உய்யும் நெறிமுறையை எல்லாம் உலகவர்க்கு, இதம் பதமாக எவ்வளவோ எடுத்துச் சொல்லிச் சொல்லி, தன்பால் வந்து சேரும்படி அழைக்கின்றார், அருட்பிரகாச அடிகள். இவரது உரைகளை உலகத்தார் எப்படி வேண்டுமானாலும், மதித்துக் கொண்டாலும், மதியாவிட்டாலும் சரி.  “எந்த ஓர் ஆசையும் இல்லாமல் வெளியிடுகின்றேன்” என்று விண்ணப்பித்துள்ளார்.

     இந்த விண்ணப்ப முறையீடு, தென்முக நோக்கிய சத்திய ஞானப் பொதுவாம் திருச்சபை முன் இருந்து வெளிப்படுத்துகின்றார் நம் வள்ளலார். தென் திசை நோக்கியுள்ள அருட்பெருஞ்ஜோதி நடனபதியை வணங்கி வழிபட்டு நிற்கும் ஒருவன், அத்திருச் சந்நிதியில் வடபால் நோக்கி, வளர் ஒளியின் சேர்க்கை பெற விண்ணப்பஞ் செய்து கொண்டு, ஜோதிபதியை பார்ப்பற பார்த்து நிற்கின்றான்.   இது சமயம், அந்த அருட்ஜோதி இவனைத் தன்பால் ஈர்த்துக் கொள்ளுகின்றது; இதற்குப் புறவான் வெளி ஒளிர் வடதுருவ நட்சத்திரமும் அத்திசையில் ஒருவனது உடலுயிர் ஆற்றலையும் இழுத்துக் கொண்டிருப்பதால் வெகு விரைவிலே அருட் சுடரின் இணைப்பு கைகூடுவதாகிவிடுகின்றதாம்.

     இந்தத் தென்முக நோக்கின் சிறப்பு உண்மையை அடிப்படையாகக் கொண்டு ஆக்கப் பெற்றதே, நடராஜர் தெக்‌ஷிணாமூர்த்தி முதலியவற்றின் தத்துவம் ஆகும். மரணமில்லா வாழ்வு பெறுவதற்கு இவ்வகை தெய்வீக வழிபாட்டு முறை பொருந்துவதாம். புற விளக்கங்களைத் துணை கொண்டு, அக உண்மையைக் கண்டு, அடைந்து, அனுபவ சித்தி பெறல், திருவுளக் கருத்தாம்.
IMG_20171005_064157.jpg

IMG_20171005_064157.jpg