Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
கார்த்திகை தீபம்...விளக்கம்..சுவாமி சரவணானந்தா.
கருணை வான் பொழிவதென்ற கார் காலத்திலே கடவுள் ஒளியைக் கண்டு வழிபடுதல் இந்நந்நாளின் குறிக்கோளாகும். மேலும் இவ்வாண்டின் பெயர்ப் பொருளுக்கொப்ப இருள் நீங்கி ஒளி வரும் காலம் இதுவாகக் குறிக்கப்படுதலின் இந்நாள் தனி சிறப்பதாம்.

     வான் ஜோதி வழிபாடு, நெடுங்காலத்திற்கு முன்பே தோன்றியதொன்றாம். அவ்வானச் சுடர், எப்பொழுதும் எந்த இடத்தும், புற ஆரவாரமின்றி மன அமைதியோடு இருந்து வந்தனை வழிபாடு இயற்றற்கு வசதியாய் கூடாததினால், அவ்வொளியின் அம்சமான பொன்னுயிர் ஜோதி தீபத்தை இல்லங்களிலும், கோயில் முதலான பீடங்களிலும் ஏற்றி வழிபடலாயினர் முன்னோர்.   அகத்தேற்றிய திருவிளக்கு, உளத்திலங்கும் அருள் விளக்கின் அடையாளமாகக் கண்டு கொண்டார்கள்.

     கார்த்திகை மாதம் முழுமதி நாள்..கார்த்திகை உடுவோடு உலந்து வருதல் முறை. இக்கார்த்திகை முக்கியமாக ஆறு நட்சத்திரங்களின் ஒரு கூட்டமாகும். ஆதலின், இவை நமது, முழுமதியாம் பூர்ண அறிவு விளங்கும்போது அனுபவப்படுகின்ற, சடாட்சர சண்முக பகவற்கற்பனாதி ஆறெழுத்தருட்பெருஞ்ஜோதி தீபத்தைக் குறிக்க வந்துள்ளதாம். இது வெளிப்பட்டு விளங்குகின்ற இடம், உண்ணாக்குக்கு மேல் அண்ணம் ஆகிய நிலையில், சுத்த தயா விளக்காய்ச் சுடருகின்றதாம். இவ்வுண்மையைப் புற உலகிற்கு விளக்க வந்த சிற்பகலா சித்தர்கள், திரு அண்ணாமலை மேற்றீபமிட்டு. பாமரரும் பரவும் வண்ணம் வழிவகை செய்தார்கள், இந்நாளில் வீடு, வாசல், கோயில் குளம் கடை வீதிகளிலும் தீபாலங்காரம் செய்து கொண்டாடுகின்றார்கள் சொர்க்கப்பனை கட்டிக் கொளுத்துகின்றார்கள்.. இவையெல்லாம், மனிதனுக்கு, அன்பும், அறிவும் உண்டாகி அகத்திருக்கும் அருள் ஒளியைக் கண்டு கொள்ளற்கே என்று உணர்த்தப் படுகின்றோம். உள்ளொளி கண்டு, அருளொடு மலராது, புறச் செயல்களோடு மட்டும் களித்திருந்தால் நலமில்லையாம். அது திருவுள்ளச் சம்மதமுமன்று. ஆதலின், சத் விசாரம் செய்து கொண்டு, இருந்தால், புறப்பொருள்கட்கும் சக்திகட்கும் செயல்கட்கும் காரணமாகிய கடவுள் ஒளியை, அதன் இயல் உண்மை விளக்கத்தோடு கண்டு கொள்ளுவோம். மேல் கண்ட அதில் இரண்டறக்கலந்து, பிரிவற்று அதுவாகி நின்று தயா மயமாய், பரோபகாரச் செயலோடு வாழ்வோம்.

     தயா ஒளி விளக்கு, தயா பரஞ்சுடராய் மலர்ந்து தயாபெருஞ்ஜோதியாய் விரிந்து அகண்ட வெளியுலகெல்லாம் தன்னாட்சியைப் புரியும் சுத்த சன்மார்க்க அனுபவ வாழ்வு தழைத்திடல் வேண்டும் என்பது திருவருளாணையாம்.
20150109_143655.jpg

20150109_143655.jpg