Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
திருவடிப் புகழ்ச்சி (வரி 58க்கு) உரை விளக்கம்..சுவாமி சரவணானந்தா..
திருவடிப் புகழ்ச்சி. வரி.58.

உரை விளக்கம்.

சுவாமி சரவணானந்தா.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=

சகலர் விஞ்ஞானகலர் பிரளயாகலர் இதய சாட்சியாகிய பூம்பதம்.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=

உரை விளக்கம்.

அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணையே கடவுளின் திருவடியாக, தலை நடு ஆயிரமிதழ் தாமரையில் அவிர்கின்றது. அந்தத் திருவடியினின்றே யாவும் எழுகின்றனவாம். இந்த இடம்தான் உண்மையில் உயர் சன்மார்க்க அனுபவத்தில் இதயமாக இருக்கின்றதாம். இதயம் என்றால் நடு இடம் எனவும் பொருளாம். மனித பிண்ட தேகத்தில் அண்டமாகிய தலை நடுவில் உள்ள நம் ஆன்மக் கடவுள் நிலையமே பதி ஜோதி அனுபவம் வெளிப்படுகின்றபோது, இந்நிலையே சிற்றம்பல, பேரம்பல நடு இடமாக விளங்குகின்றதாம். ஆகவே, இந்த உண்மை இதயத்திலிருந்துதான் யாவும் உதயமாகின்றன என்று அறியலாகும். இங்கு ஒளிரும் அருட்ஜோதியே சர்வ சாட்சியாகும்.

பொறிபுலன் வயப்பட்ட மன அறிவுதான் கீழ் ஆதார இதயத்துற்று, மனச்சாட்சியாகத் திகழ்கின்றதாம். இங்கு அசுத்த மனம் அவா, வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களால் பாதிக்கப்பட்டு சலித்துக்கொண்டும் நினைவு மறப்பு என்னும் சகல கேவலத்தால் அவத்தைப் பாட்டால் அல்லல் அடைந்து கொண்டிருக்கின்றதாம். இந்த நிலையில் இந்த இதயத்தில் உள்ள மனதை சாட்சியாகக் கொண்டு வாழ்கின்றவர்கள், என்ன நன்மை பெற்று விடமுடியும். இந்நிலையினரின் இதய சாட்சி மேலான உண்மையை உள்ளபடி உணர்த்தாது. அதன் உண்மையை உள்ளபடி அறிந்து கொள்ளவும் முடியாதாம். இதனால்தான் ஒவ்வொருவரும் தமக்கு இதமானவற்றையே இதய சாட்சி கூறுவதாக அந்தரான்மா அறிவிப்பதாக மனச்சாட்சி உரைப்பதாக அல்லது உணர்த்துவதாகக் கொண்டு உண்மையைத் தெளிந்து கொண்டு, உயர் நலம் பெறாது, வீண் போகின்றார்கள்.

ஆகவே, மக்களை அவர்களது அறிவு விளைவுக்கு ஏற்ப மூன்று வகையாகப் பிரித்துக் கூறுகின்றனர். அவர்கள் சகலர், பிரளயாகலர், விஞ்ஞானகலர் எனப்படுவார்கள்.

1. சகலர்

ஆணவம், மாயை, கன்மம் என்னும் மும்மலமுடையவர்கள். இவர்கள் மனித குருவையே சரணடைந்து பக்குவமுறுவார்கள்.

2. .பிரளயாகலர்.

கன்மமாகிய ஒரு மலம் ஒழித்து விட்டவர்கள். எல்லாம் கடவுளின் செயல் எனக் கண்டும், அச்செயல் யாவும் மேலான நன்மை விளையும் பொருட்டே என்றும், கருதிக் கொண்டு எதையும், எவரையும் விருப்பு வெறுப்பால் அடுக்காது எப்போதும் நன்மையையே புரிந்து கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு உண்மையை உணர்த்தி உயர்நிலைக்கு ஏற்ற மனிதர்கள், நூல்கள், கருவிகள், குருவெனத் தோன்றி உண்மை நெறியொழுக்கம் புகட்டிவிடும். அப்படி ஒழுகும் அவர்கள் எல்லாம் அவன் செயல் என்பதை சத்விசாரத்தால் மெய்யாகவே அறிந்து உண்மை நிலைபெற முயற்சி மேற்கொண்டிருப்பார்கள். இவர்கள், உள்ளொளியையே ஞான குருவால் உபதேசிக்கப் பெறுவார்கள்.

3. விஞ்ஞான கலர்.

இவர்களே கன்மமும் மாயையும் ஒழித்தவர்களாவர். இவர்கட்கு, கருணையும் சிவமும் ஆக கன்மமும் மாயையும் மாறிவிட்டிருக்கும். இவர்களுக்கு உபதேசிக்கும் குரு தெய்வ தெய்வீக இயல்புடன் தோன்றி உண்மை உணர்த்திவிட்டு, உடன் மறைந்து போம். அதுமுதல் அவ்வுபதேசப் பொருள் தானே உள்நிலை கொண்டிடும் உண்மைக் குருவாக விளங்கும். இவர்கள் இந்த அக குருவினால்தான் எப்போதும் உண்மை உணர்த்தப் பெற்று, கடவுள் நிலையை அடைய உதவுவது, இந்த உள்ளொளி குருவே. இந்த விஞ்ஞானகலர் ஆன்ம பரிபாகிகள்தான் சுத்த சன்மார்க்க நிலைக்குரியவர்களாக மேல், இதய ஜோதிக் குருவால் ஒளிநெறியில் செலுத்தப்பெறுகின்றார்கள். இவர்கள் இரு மலம் நீத்த மேல் ஆணவமாகிய ஒரு மலம் நீக்கப்படவுள்ள விஞ்ஞானகலர் ஆவர். விஞ்ஞான கலர் பிரளயா கலர், சகலர் என்னும் மூவகையினரின் இதயத்தும் (சிரநடு) உள்ள அருட்ஜோதி பூம்பதமே உண்மை சாட்சியாக இருக்கின்றது. ஆகையால் எல்லோரும் இந்த இதய சாட்சியின்படி நடக்கப் பழகுதல் ஒன்றே ஏற்றமுடைத்தாம். இவர்கள் எல்லாம் பக்குவப்பட்டு, மெய்யின்பானுபவ வாழ்வு அடைதல் ஒன்றே மிக மிக இன்றியமையாதது. ஆகையால், அதற்கான முறையில் சுத்த சன்மார்க்கம் வழங்கப்பட்டிருக்கின்றது. இந் நெறியில், ஜீவகாருண்யம், உண்மை சத்விசாரம் அக, அனக நிறை இன்ப வாழ்வு நிலைகளே ஒவ்வொரு வகை ஆன்மாக்களையும் சகல பிரளயாகல விஞ்ஞானகல நிலைக்கு ஏற்றி இறைமயமாக்கி வாழ்விப்பதாகும்.

2013-09-12 19.56.17.jpg

2013-09-12 19.56.17.jpg

20150109_143655.jpg

20150109_143655.jpg

Audio:

Download: