Anandha Barathi
"திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி" நூலின் பழம்பதிப்பு (1902) வெளியீடு.
திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி நூலின் பழம்பதிப்பு (1902) வெளியீடு.

நூலாசிரியர்:
வள்ளல் பெருமானின் மாணவர்
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்'

அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" -

நூல் அறிமுகம்:

திருஅருட்பிராகாச வள்ளல் பெருமான் நம்மை உய்விக்க வந்த அருளாளர், அவர் தம் சீடர்கள் அனைவரும் அவரின் பெருமையை முற்றும் நன்கு உணர்ந்தவர்களே, அவர்கள் உணர்ந்த விதத்தையும், பெருமானார் தம்மை ஆண்டுகொண்ட அருளினையும், வள்ளலாரின் பெருமைகளையும் "தமிழ்பாக்களாகவும், தோத்திரங்களாகவும், நூல்களாவும் வெளியீட்டு" அந்நூல்களுக்கு "பெருமானாரின் திருப்பெயரைச் சூட்டி வழங்கியுள்ளனர். எளியவனுக்குத் தெரிந்தவரை தமிழகத்தில் தோன்றிய அருளாளர் ஒருவருக்கு அவர்களின் மாணவர்களால் எண்ணிலடங்கா தோத்திரங்கள் எழுதப்பட்டது என்றால் அது வள்ளல் பெருமான் ஒருவருக்கேயாம்.

அந்த வகையில் வள்ளல் பெருமானின் மாணவர்களுள் ஒருவரும், திருஅருட்பாவிற்கு உரை எழுதத்தொடங்கி முதல் திருமுறை முழுவதும் உரை கண்டவரும், தமிழ் அறிஞருமான "'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்' அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" வள்ளல் பெருமான் மீது "திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி" என்னும் நூலினை தோத்தரித்து, வள்ளல் பெருமானின் அன்பராகிய "பெங்களூரில் வணிகர் குலதிலகம்" ம. அப்பாசாமி செட்டியார் அவர்களின் உதவியால் 1902 ஆம் ஆண்டு இந்நூலினை "பெங்களூர் நேஷனல் அச்சியந்திரசாலையில்" பதிப்பித்தார்கள்.

நூலின் அமைப்பு:

பதிற்றுப்பத்து என்னும் நூல் அமைப்பு சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றது. அரசனுக்குப் பத்துப் பாடல் என்று 10 சேர அரசர்கள்மீது பாடப்பட்ட நூல் சங்க இலக்கிய பதிற்றுப்பத்து ஆகும், அந்த முறையில் "திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி" 100 பாடல்களைக் கொண்டுள்ளது, இன்னூறு பாடல்களும் வள்ளல் பெருமானின் சிறப்பினை மெய்ஞானத் தேன் என எடுத்து இயம்புகின்றது,

அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள் மஹாவித்துவான் ஆகையால் பதிற்றுப்பத்துடன் அந்தாதி செய்யுள் (ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ, தொடரோ அடுத்தப் பாடலின் தொடக்கத்தில் வரும்படிப் பாடுவது அந்தாதி)முறையையும் இணைத்து மெய்ஞானத் தமிழில் தம் குருநாதர் மீதுபாடல்களை தோத்திரமாக சாற்றியுள்ளார். இப்பாடல்கள் உள்ளபடியே உள்ளத்தினை உருவக்குவதாயும் வள்ளல் பெருமானின் திருவடிக்கண் அன்பினை நமக்கு அதிகரிக்கச் செய்வதாயும், மிக எளிமையாகவும் அமைந்துள்ளது.

இன்னூல் நமக்கு கிடைத்த செய்தி:

தொழுவூர் வேலாயுதமுதலியாரின் மகன் செங்கல்வராய முதலியாரின் வழித்தோன்றலும் (பெயர்த்தி), பெங்களூர் சீராமபுரம் தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியருமான திருமதி. அருளாம்பிகை அம்மையார் அவர்கள் சன்மார்க்க சான்றோர்களின் வேண்டுகோளுக்கு இனங்கி தம் பாட்டனார் மற்றும் தந்தையார் ஆகியோர் சேர்த்துவைத்திருந்த சன்மார்க்க நூல்களை பெங்களூரு சன்மார்க்க சங்கத்தின் மூலமாக "வடலூர் வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின்" இயக்குனரும் மேனாள் தமிழக பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனருமான முனைவர் இராம. பாண்டுரங்கன் அய்யா அவர்களிடம் வழங்கினார்கள்,

வள்ளல் பெருமானின் சீடர்கள் பெருமான் மீது இயற்றிய பாடல்களை தொகுக்கும் எனது(ஆனந்தபாரதி) முயற்சியை அறிந்த இராம. பாண்டுரங்கன் அய்யா அவர்கள் இன்னூலினையும் அப்பணியில் சேர்த்துக்கொள்ளப்பணித்தார்கள், அன்னாருக்கு, அம்மையாருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன், இதுபோல நூல்கள் தங்களிடம் இருப்பின் இத்தொகுப்பிற்க்கு தந்து உதவும் படியும் அன்போடு வேண்டுகின்றேன்.

(வள்ளல் பெருமான் மாணவர்கள் வள்ளலார் மீது பாடியபாடல் தொகுப்புகளை இன்றுவரை தொகுத்தவை அனைத்தினையும் http://vallalarpootri.blogspot.in/ என்ற இணைய முகவரியில் காணலாம்)

அன்பர்களின் வசதிக்காக இன்னூலின் படக்கோப்புவடிவம் (PDF) இங்கு வெளியிடப்படுகின்றது, தட்டச்சுப்பணி நடைபெற்றுவருவதால் விரைவில் இன்னூலின் தட்டச்சு வடிவும் இங்கு வெளியிடப்படும்.

இவ்வரிய நூலினை வள்ளல் பெருமானின் அன்பர் ஓதியும் உணர்ந்தும், பிறருக்கு பரிந்துரைத்தும் உய்வார்களாக.

 

Vallalar Pathitrupaththu Andhaadhi_திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி.JPG

Vallalar Pathitrupaththu Andhaadhi_திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி.JPG

Download:

5 Comments
Daeiou Team Daeiou.
1902ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூலினை, இங்கே அன்பர்கள் அறியத் தந்ததற்குப் பாராட்டுக்கள் பாரதி...
Saturday, October 14, 2017 at 07:23 am by Daeiou Team Daeiou.
ram govi
Very Good Effort Bharathi!!
Saturday, October 14, 2017 at 08:42 am by ram govi
Anandha Barathi
நன்றி அய்யா
Saturday, October 14, 2017 at 21:48 pm by Anandha Barathi
TMR RAMALINGAM
“திருவருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்தந்தாதி” என்னும் பழம் நூல் கிடைக்கப்பெற்றதில் மகிழ்ச்சி. இந்நூலை வெளிகொணர்ந்த திருமதி.அருளாம்பிகை அம்மையார், பெங்களூரு சன்மார்க்க சங்கத்தினர்கள், முனைவர் இராம.பாண்டுரங்கன் ஐயா மற்றும் திரு.ஆனந்தபாரதி ஐயா மற்றும் யாவருக்கும் எமது நன்றி கலந்த வணக்கங்கள்.
Sunday, October 15, 2017 at 02:43 am by TMR RAMALINGAM
Anandha Barathi
நன்றி T.M.R அய்யா!
Monday, October 16, 2017 at 03:40 am by Anandha Barathi