Vallalar Universal Mission Trust   ramnad......
சீவகாருணியம் இல்லாதபோது அருள் விளக்கம் தோன்றாது. அது தோன்றாதபோது கடவுள்நிலை கைகூடாது.
சீவகாருணிய ஒழுக்கம் சிறிதும் இல்லாத புலி சிங்கம் முதலிய மிருகங்கள் வழங்குகின்ற காட்டில் இகலோக ஒழுக்கம் வழங்கவே இல்லை. சீவகாருணியம் இல்லாத மனிதர்கள் வழங்குமிடத்திலும் இகலோக ஒழுக்கமும் வழங்கவே மாட்டாதென்று அறியவேண்டும். பரலோக ஒழுக்கமும் சீவகாருணியத்தால் வழங்குகின்றது. அது இல்லையாயின் பரலோக ஒழுக்கமும் வழங்க மாட்டாது. சீவகாருணியம் இல்லாதபோது அருள் விளக்கம் தோன்றாது. அது தோன்றாதபோது கடவுள்நிலை கைகூடாது. அது கூடாதபோது முத்தியின்பம் ஒருவரும் அடையவே மாட்டார்கள். அடையாத பட்சத்தில் பரலோக ஒழுக்கம் வழங்கவே மாட்டா தென்று அறியவேண்டும்.

சீவகாருணிய ஒழுக்கம் மிகவும் வழங்காமையால் துஷ்டப் பிறவிகளே பெருகித் தீய ஒழுக்கங்களே மிகவும் வழங்குகின்றன. முன்தேகத்தில் சீவகாருணியம் இல்லாத பாவ சீவர்கள் எல்லாம் அவரவர் பாவச் செய்கைக்குத் தக்கபடி, சிலர் நரகவாசிகளாகவும், சிலர் சமுத்திரவாசிகளாகவும், சிலர் ஆரண்யவாசிகளாகவும், சிலர் புலி, கரடி, சிங்கம், யாளி, யானை, கடமை, கடா, பன்றி, நாய், பூனை முதலிய துஷ்ட மிருகங்களாகவும், சிலர் காக்கை கழுகு முதலிய பட்சி சண்டாளங்களாகவும், சிலர் பாம்பு தேள் முதலிய துர்ச்செந்துக்களாகவும், சிலர் முதலை சுறா முதலிய கடின செந்துக்களாகவும், சிலர் எட்டி கள்ளி முதலிய அசுத்த தாவரங்களாகவும் பிறந்திருக்கின்றார்கள். ஆகலால், தீய ஒழுக்கங்களே மிகவும் வழங்குகின்றன வென்று அறியவேண்டும்.

சீவகாருணியம் கடவுள் அருளைப் பெறுவதற்கு முக்கிய சாதனமாவதுமன்றி அந்த அருளின் ஏகதேசவிளக்கம் என்றும், சீவகாருணியம் ஆன்மாக்களின் இயற்கைவிளக்கம் ஆகலால் அந்த இயற்கை விளக்கம் இல்லாத சீவர்களுக்குக் கடவுள்விளக்கம் அகத்திலும் புறத்திலும் வெளிப்படவே மாட்டாதென்றும் அறியவேண்டும்.