Vallalar Universal Mission Trust   ramnad......
அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை.
இதற்கு மேற்பட, நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். "தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?" என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை. அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்குப் பத்து வருஷம் எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால், அற்ப சித்திகளையடையலாம். அதற்காக அவற்றில் லக்ஷியம் வைத்தால் ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டிருக்கிற லக்ஷியம் போய்விடும். ஆண்டவரிடத்தில் வைத்த லக்ஷியம் போய்விட்டால், நீங்கள் அடையப் போகிற பெரிய பிரயோஜனம் போய்விடும். அல்லது, அதில் முயற்சி செய்து, அவ்வளவு காலம் உழைத்து, அந்த அற்பப்பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும். ஆகையால், அவைகளில் லக்ஷியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லக்ஷியம் வைக்கவேண்டியது. முன் சொன்ன ஏகதேச சித்தி கற்பனையென்கின்றது வாசகப் பெரு விண்ணப்பத்தாலும் இயல்வேதாகமங்கள் புராணங்கள் என்ற அருள்விளக்கமாலைப் பாசுரத்தாலு* முணர்க. மேலும் அதிற்கண்ட குறிப்பையுந் தெரிந்து கொள்ளுங்கள்.