Sathish D
Jothi Guru Gnana Sabai-மெய்ஞானமும் மூடநம்பிக்கையும் தத்துவ விளக்கம்

மெய்ஞானமும் மூடநம்பிக்கையும் தத்துவ விளக்கம்
சாதியும் மதமும் சமயமும் காணா
ஆதி அனாதியாம் அருட்பெருஞ்ஜோதி

அன்புடையீர்,
கடவுளை காண வேண்டுமா?

தகுதிகள்:-
எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் காத்தல், ஜீவகாருண்ய ஒழுக்கம்,
புலை கொலை தவிர்த்தல், பக்தி, சுயபுத்தி, தன்நம்பிக்கை, பகுத்தறிவு இருப்பின்
உயிர் அறிவாகிய கடவுளை கண்ணார காணலாம் என்பது
திருஅருட்பிரகாச வள்ளலார், பதினென் சித்தர்களும் அருளிய நன்மார்க்கமே
ஞான சன்மார்க்கமாகும்.

பரிபாடல்:-

“உப்போடு புளிப்பும் கைப்பும் உணர்வினால் அறிந்து நீதான்
எப்போதும் உனக்குள் நாயன் இருப்பிடம் அறியாதென்னே
முப்போது குருவைப்போற்றி முனைசுழி வாசி பார்த்தால்
அப்போது நாகை நாதர் அடியினை அறிவாய் நெஞ்சே”
- நெஞ்சறிவிளக்கம்

சித்தர்கள் தெய்வ இரகசியங்களை வெளிப்படையாக சொல்லாமல் பரிபாடலாக படைத்துள்ளார்கள். மற்றும் ஞானம் என்பது பூர்வ சன்ம அருளால் குருமுகம் பெறுவதாகும். மெய்ஞானத்தை அதாவது மனிதன் தெய்வாம்சம் என்றால் மனிதனை மனிதன் மதிக்க மாட்டான். அப்படி சொன்னாலும் தேவ அசுரர் கதைப் போல போர் புரிந்து அழிந்து விடுவார்கள். (நமது கடவுள் தத்துவத்தில் எல்லா தேவர் மற்றும் தெய்வ சிலைகளை மனித வடிவத்தில் படைத்துள்ளதை சிந்திக்கவும். )

நாம் கைப்பேசி வைத்துள்ளோம். அதைப் படைத்தது யார்? மனிதனா, கடவுளா? மனிதன்தானே படைத்தான் (ஞானம் = அறிவு) அவன் பெயர் விஞ்ஞானி. அவன் தன் திறத்தால் (தந்திரத்தால்) எலக்ட்ரானிக் கருவிகளின் திரத்தைக் கொண்டு பல வசதிகள் உள்ள கைப்பேசி மற்றும் எண்ணற்ற நவீன கருவிகளை படைத்தது மனித விஞ்ஞானிதானே! அவன் உயிர்அறிவு, கடவுள் தானே! மற்றும் மனிததேகம் போல் கற்செம்பு சிலைகளை படைத்து தெய்வம், கடவுள், இறைவன் என்று பெயரிட்டது மனித தெய்வம்தானே!

நம்மை படைத்த மாதா, பிதா, குரு, தெய்வம் என்று ஞானிகள் கூறிய கண்கண்ட தெய்வம் தவறானதா?

உலக உயிர் இனங்கள் அனைத்தும் அந்தந்த இனங்கள் படைத்துக் கொண்டது தானே? அந்த அருவமான இயற்கை கடவுளை பரிசுத்த உள்ளத்தில் காணலாம் என்பது இயற்கை வேதம். கீதை கண்ணாடியில் கேட்டு நில் என்றார் ஞானிகள்.

கைப்பேசியின் உபமானம் உபமேய கருத்துக்கள்:-

இறைவன் அருவமான விஞ்ஞானி. அவன் மண் என்ற சுரோனிதத்தை எடுத்து ஆண், பெண் என்ற இரு இனங்களை படைத்தான். மனிதன் முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களை கனக்கெடுத்துதான். அவன் வினைக்கீடு (மூளை - சிம்கார்டு - சீடி) விதிப்படி அவன் வாழ்க்கையின் வரலாறு பதிக்கப்பட்டுள்ளது. ஆன்ம ஒளி (உயிர்அறிவு - பேட்டரி) கைப்பேசி பேட்டரியால் செயல்படுவதுபோல், எல்லா உயிர்களிளும் இறைவன் ஆன்ம ஒளியாக இருந்து வழிநடத்துகிறான். பேட்டரி இல்லை என்றால் கைப்பேசி பயன்படாது அதுபோல அன்ம ஒளியாகிய இறைவன் (உயிர்அறிவு) நீங்கியபோது உடல் பயனற்றதாகிறது.

தமிழ்நாட்டில் பாமர மக்கள் ஆண்டவன் பெயரால் ஆன்டியாவதைக் கண்ணுற்று எழுதும் மெய்ஞான தகவலாகும். கடவுள், இறைவன், தெய்வம் என்பது மனிதனுடைய மனசாட்சி ஆகும். இதனை நீதி மன்றங்களில் “ஐ விட்னஸ்” என்கிறார்கள். “ஐ விட்னஸ்” என்பது கடவுளாகும்.

மனிதனுடைய எதிரி அவனுடைய மனதின் சிருஷ்டி தான். இல்லாத ஒன்றை இருப்பதாக என்னும் தவறினால் விளையும் பயங்கர உணர்ச்சிகளை அவன் அழுந்த புதைக்க வேண்டும்.

ஆன்மீகம்:-

“சரியை முதல் மெய்ஞானம் நான்கும்
அரும்பு, மலர், காய், கனி போல் அன்றோ பராபரமே”
தாயுமானவர்

என்ற முதுமொழிக்கிணங்க மெய்ஞானமும் ஞானசரியை, ஞானகிரியை, யோகம், ஞானம் என கூறப்பட்டது.

அதாவது குழந்தை பருவம், பால பருவம், வாலிப பருவம், வையோதிக பருவம் மற்றும் ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, கல்லூரி இப்படி வயதிர்க்கேற்ற கல்வி கற்கின்றோம். மேற்படி கல்வி இகவாழ்க்கைக்கு உறுதுணையாகும். அதே போல ஞான மார்க்கத்தில் சரியை, கிரியை, யோகம், ஞானம். மேற்படி கல்வியே பரவாழ்க்கைக்கு இறை அருளை பெற ஞான ஒழுக்கம் இன்றியமையாததாகும் என்பதற்க்கு இணங்க திருவள்ளுவர் நாயனார்

“ஒழுக்கம் விழுப்பம் தரலாம் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.”
திருக்குறள்

இம்முறையில் பகுத்திவுள்ள மனிதர்களாகிய நாம் கடவுளை கண்ணார காணலாம் என்பது சன்மார்க்கமாகும்.

“உடம்பினை பெற்ற பயனாவது எல்லா
உடம்பினில் உத்தமனை காண்”
ஒளவைகுறள்

“உள்ளம் பெருங் கோயில் ஊன் உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசம்
தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்”
திருமந்திரம்

குருவைதேடுதல்:-

அடியேன் ஞானமடைய ஒரு சாமியாரிடம் அறிவுரைக் கேட்டேன். அவர் சொல்லும் நிலையில் இல்லை. இருப்பினும் சொல்கிறேன் என்று ஒரு கருங்கல்லையும், குரங்கு போன்ற கல்லையும் காண்பித்து இது என்ன என்றார். நான் ஒன்றை கருங்கல் என்றும் மற்றதை குரங்கு என்றேன். அவர் அறிவு இருந்தால் சிந்தனை செய்துபார் என்றார்.

கருங்கல் என்றது உன் பகுத்தறிவு. குரங்கு என்பது கற்பிக்கப்பட்டது தானே என்றார். ஆம் என்றேன். ஞானம் அறிய அதற்கான ஆசானை தேடு என்றார். நான் சன்னியாசி வேடம் இல்லாத ஒரு சாமியாரைப் பார்த்தேன். அவரிடம் ஞானம் அறிந்து கடவுளை பார்ப்பது எப்படி என்றேன்? அவர் உனக்கு திருமணமாகி பிள்ளைகள் உண்டா? என்றார். உள்ளது என்றேன். இந்த உறவை வாயினால் சொல்ல முடியுமா? என்றார் முடியாது என்றேன். அதுபோல தெய்வ இரகசியத்தை வாயினால் சொல்ல முடியாது என்றார். உணர்வுதான் தெய்வம். மனம் பூத உடலை கடந்து உள் சென்றால் கடவுளை காணலாம். அதுவே கர்பகிரகம், கருவறையாகும் முடிந்தால் பார்த்துக்கொள் என்றார்.

“முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தை சொல்லென்றாற் சொல்லுமா றெங்கனே”
திருமந்திரம்

கருத்து:-
தாய் தன் கணவனோடு பெற்ற இன்ப துன்பங்களை 9 வயது பெண்ணுக்கு சொல்ல முடியாது. அல்லவா? அப்பெண் பருவத்தால், காலத்தால், அறிந்து உணர்வாள். அதுபோல் அருட்பெருஞ்சோதியை அறிந்து உணர்ந்தால் தான் அவர் கூறிய ஆகாயத்தொளி அருட்பெருஞ்சோதி என்ற உலக நாதனை புண்ணியம் செய்தவர்கள் இப்பிறவியிலே உணர்வார்கள்.

அருட்பெருஞ்சோதி ஆண்டவர் வள்ளல் பெருமானார்க்கு உணர்த்திய மெய்ஞான இரகசியம்.

“வேதநெறி ஆகமத்தின் நெறி புராணங்கள்
விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுவதும்
ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி
உள்ளதனை உள்ளபடி உணர உணர்த்தினையே
ஏதமற உணர்ந்தனன் வீண்போது கழிப்பதற்கோர்
எள்ளளவும் எண்ணமிலேன் என்னோடு நீ புணர்ந்தே
தீதறவே அனைத்தும் வல்ல சித்தாடல் புரிவாய்
சித்த சிகாமணியே என் திருநட நாகனே”
திருஅருட்பா

கற்செம்பு சிலைகள்:-
கற்காலத்திரல் மிருகம்போல் வாழ்ந்து வந்த மக்களுக்கு ஒழுக்கம் கற்ப்பிக்க அருவமான தெய்வத்தை மனிததேகம் போல் படைத்தார்கள்.

மூடநம்பிக்கைக்கு காரணம்:-

“அவரவர் வினைக்கு ஏற்ப பெற்ற உடலை சுமக்கின்ற
பல்லுயிர்க்கெல்லாம் தலைவனை உலகோர் அறியார்
இப்பகுத்தறியா தடைகளை(கற்களை) நீக்கி தந்த குரு
அருளால் நான் கரு கொண்ட ஈசனை கண்டு கொண்டானே”

கருகொண்ட ஈசன்:-

நாம் தாய் வயிற்றில் கருவான அருவமான பொருளை குரு உருவமாக அருளினார். இதனை அருணகிரிநாதர் திருப்புகழில் “கருவின் உருவாகி வந்து வயதளிவிலே வளர்ந்து கலைகள் பலவே தெரிந்து அதனாலே” என்றார்.

கடவுள், தெய்வம், இறைவன் என்ற உயிர் அறிவு அவரவர் தேகத்தில் இருக்க தேசத்தில் கற்செம்பு, கங்கை நதி, மலைகளில் படைத்தவனை தேடி அலைவது அறியாமை. மூடநம்பிக்கையாகும் கற்காலத்தில் அரசர்கள் (போர்களத்தில் மக்களையும், மிருகங்களையும் கொன்ற பாவங்களை போக்கி புண்ணியமாக்கலாம் எனக்கூறி அக்கால சாமியார்கள் உழைக்காமல் பிழைக்க பரிகார பூசைகள், பக்தி, ஹோமம் செய்ய கோயில்களை அமைக்க அரசர்களுக்கு கூறிய மந்திர, தந்திரம் தான் மூட நம்பிக்கைக்கு கருவேராகும்.)

அக்கால கல்வி அறிவில்லாத வழிவழி பரம்பரை அரசர்கள் கூறியதை சிந்திக்காமல் செய்தார்கள். அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்ற பழமொழிக்கிணங்க இந்த மூட நம்பிக்கையை இன்றும் அரசன், பணக்காரன், பட்டதாரிகளும் பேதமையால் கடைப்பிடித்து வருவதால் ஏழை பாமர மக்களும் பழகிக்கொண்டார்கள். இதனை தமிழகத்தின் துரதிஷ்டம் எனலாம் அல்லவா? இந்த நாய் வாலை நிமிர்த்த முடியாது இது விதி என உணர்ந்து மெய் ஞானிகள்

“எண்ணிலா ஞான கல்வி அறிவுடையோர் எல்லாம்
மெய் ஞானம் ஏதென்று எடுத்துரைக்க மனவலிமை இழந்தாரையா
கண்ணிலா குருடன் கரி(யானை) கால் பிடித்த கதை போல
காசுதான் கடவுளென்று ஆசையால் அழிந்தாரையா”

எண்ணற்ற கற்செம்பு சிலைகளுக்கு புராண இதிகாச கதைகளை கூறி அச்சிலைகள் ஒவ்வொன்றிற்கும் பலவித சக்திகள் இருப்பதாக கூறி அக்கால மக்களுக்கு ஆசைக்காட்டி மூட நம்பிக்கையை வளர்த்து மக்களுக்குள் வேற்றுமையை உண்டாக்கிவிட்டார்கள். மேற்படி தடைகளை குரு அருளால் நீங்களும் நீக்கிக் கொள்ளுங்கள்.

“பழக்கம் கொடியதுபார் பாறையினும் கோழி
கிழிக்கும் பொலியைக் கிளறும் விழித்துங்
குருடர்க்கு ஒளிபகையாய்க் கூசிக்கோல் போடா
அருளை பகுக்கும் ஆன்மா”
- ஒழிவில் ஒடுக்கம்

விளக்கம்:-
யாவர்க்கும் பன்னாள் தொன்று தொட்டு வரும் பழக்கம் நீக்கக் கூடாமையின் மிகவும் கொடியது, அதனை நீ பார்த்து அறிதி அஃது எங்ஙனம் எனின். பன்னாள் குப்பைசீத்த பழக்கத்தால் கோழி கற்பாறையாயினும் சீக்கும், நெற்பொலிமேல் விடுப்பினும் சீக்கும். (அஃதன்றி) காசநோய் படர்ந்த குருடர் கண்ணோய் தீர்ந்து விழித்தபோதும் கதிரொளி இருட்பகை போலாய்க் கூசி முன்பிடித்த கோலை கைவிட்டார். அவர்போல் அருளை அடையாமுன்னர் அது இது என்று நானாவாய்ப் பழுத்த பழக்கத்தால் இப்போது பகுத்தற்கு இடம் இன்றி எங்கும் தானாயிருந்த அவ்வருளை அடைந்தும் ஆன்மா அதனை பகுத்து நாடும்.

குறிப்பு:-
சீக்கக்கூடாத பாறையைச் சீத்தல்போல் பகுக்கக்கூடாத அருளைப் பகுத்தலானும், கிளற வேண்டுவதின்றி நின்று தின்னாது பொலியைக் கிளறுதல்போல், பகுக்க வேண்டுவதின்றியிருந்து அருள் ஆனந்தத்தை அநுபவியாது அவ்வருளைப் பகுத்தலானும், காசமிருந்தபோது கூசிப் பிடித்த கோலை அக்காசம் நீங்கிக் கதிரொளி கண்டும். இவ்வொளி முன் தோன்றிய இருளாய்க் கூசிக் கைவிடார்போலும், முன்னர் ஆணவமறைப்பான் அது இது என்று பகுத்த போதத்தை இப்போது அவ்வாணம் நீங்கி அருளொளி கண்டும், இவ்வருளொளியை முன்னர் ஆணவ இருள்போல் பாவித்து விடாராகலினும், இங்ஙனம் உவமை கூறினார்.

தேகாதி பிரபஞ்சங்களை எல்லாம் திருவருள் வடிவாய்க் காண்பதே அன்றி, அவற்றை நானாவாய்ப் பகுப்பினும் இவ்வருளைப் பகுப்பதாமென்பது காண்க.

மக்கள் சிந்தனைக்கு:-

தஞ்சாவூர் நந்திக்கு 108 பால்குடம் அபிஷேகம், அந்த பால் வீணாவதைப் பார்த்தும் இப்பாமரர்களுக்கு அறிவு வரவில்லையே. கேட்டால் பழைய வழக்கம், முன்னோர்கள் செய்தது என்பார்கள். முன்னோர்கள் அறிவு குருடர்கள். நீர் பட்டதாரி உனக்கு பகுத்தறிவு இல்லை என்பது தானே அர்த்தம்.

சொர்ண அபிஷேகம், தேன், இளநீர் இப்படி பல பரிகாரம், பூசைகள் செய்ய பழகிவிட்டார்கள். இத்தனையும் மக்கள் பணம் தானே. சிந்தியுங்கள்.

பாமர மக்களை பொய் சொல்லி ஏமாற்றி பிழைப்பவர்கள் பூசாரிகள் தானே. இந்த பாவத்திற்கு என்ன பரிகாரம். தமிழ் மக்களே, கண்ணிருந்தும் குருடராய் இராமல் பகுத்தறிவைக் கொண்டு விழித்தெழுவீர்.

உலகத்தில் மனிதனை விட உயர்ந்த தெய்வம் இல்லை. இதனை முன்னோர்கள், மாதா, பிதா, குரு, தெய்வம் மற்றும் கண் கண்ட தெய்வம் சூரியன், சந்திரன் தானே என்றதை உணர்த்தி உள்ளதை சிந்தியுங்கள்.

ஜோதி குரு ஞான சபை அறக்கட்டளை
நெய்தவாயல், மீஞ்சூர்
கைப்பேசி - 9840749548
(முன் பதிவு மூலம் விளக்கம் பெறலாம்
ஞாயிறு, மாலை 3 முதல் 4 மணி வரை)