Thiru Arutprakasa Vallalar- Tamil
8. சாலை சம்பந்திகளுக்கு இட்ட சமாதிக் கட்டளை 30 - 3 - 1871
8. சாலை சம்பந்திகளுக்கு இட்ட சமாதிக் கட்டளை

30 - 3 - 1871



திருச்சிற்றம்பலம்


அன்புள்ள நீங்கள் சமரச வேத சன்மார்க்க சங்கத் தருமச்சாலைக்கு மிகவும் உரிமையுடையீர்க ளாகலில் உங்களுக்கு உண்மையுடன் அறிவிப்பது.

நீங்களும் உங்களை அடுத்தவர்களும் சிற்றம்பலத் தந்தையார் திருவருளாற் சுகமாக வாழ்வீர்களாக.

கர்ம கால முதலிய பேதங்களால் யார்க்காயினுந் தேக ஆனி நேரிட்டால் தகனஞ் செய்யாமல் சமாதியில் வைக்கவேண்டும். இறந்தவர்கள் திரும்பவு மெழுந்து நம்முடன் இருக்கப் பார்ப்போம் என்கிற முழு நம்பிக்கையைக் கொண்டு எவ்வளவுந் துயரப்படாமலும் அழுகுரல் செய்யாமலும் சிற்றம்பலக் கடவுள் சிந்தையுடனிருக்க வேண்டும். புருடன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம். மனைவி இறந்தால் புருடன் வேறு கல்யாணப் பிரயத்தனஞ் செய்யவேண்டாம். பிள்ளைகள் இறந்தால் சஞ்சலிக்க வேண்டாம். கர்ம காரியங்கள் ஒன்றுஞ் செய்யவேண்டாம். தெரிவிக்கத் தக்கவர்களுக்குத் தெரிவித்து ஒரு தினத்தில் நேரிட்டவர்களுக்கு நேரிட்ட மட்டில் அன்ன விரயஞ் செய்யவேண்டும். இவ்வாறு உண்மையாக நம்பிச் செய்யுங்கள். செய்திருந்தால், சமரச வேத சன்மார்க்க சங்கமும் மேற்படி தருமச்சாலையும் நிலைபெற விளக்கஞ் செய்யும் பொருட்டாகவும் சிதம்பரங் கோயில் திருச்சபைகளைப் புதுக்கி நிலைபெற விளக்கஞ் செய்யும் பொருட்டாகவும் கருணை கூர்ந்து எனது தந்தையாராகிய எல்லாம் வல்ல திருச்சிற்றம்பலக் கடவுள் பார்வதிபுரம் சமரச வேத சன்மார்க்க சங்கத் தருமச்சாலைக்கு எழுந்தருளிக் காட்சி கொடுக்குந் தருணம் மிகவும் அடுத்த சமீபமாக விருக்கின்றது. அந்தத் தருணத்தில் சாலைக்கு உரியவர்களாகி யிருந்து இறந்தவர்களை யெல்லாம் எழுப்பிக் கொடுத்தருளுவார். இது சத்தியம். இது சத்தியம். இந்தக் கடிதம் வெளிப்பட்டறிந்து கொள்ளாமுன் இறந்து தகனமானவர்களையும் எழுப்பியருளுவார். இது வெளிப்பட் டறிந்தபின் தகனஞ் செய்தல் கூடாது. அது சன்மார்க்கத்திற்குத் தக்கதல்ல. ஆகலில் மேற்கண்டபடி உண்மையான நம்பிக்கையுடன் வாழ்வீர்களாக.

எனக்கு உலக அறிவு தெரிந்தது தொட்டு எனது தந்தையார் திருவருளை நான் அடையும் வரையில், என்னுடன் பழகியும் என்னை நம்பி யடுத்தும் என்னைக் கேள்வியால் விரும்பியும் எனக்கு உரிமைப் பட்டும் இருந்து இறந்தவர்களை யெல்லாம் எழுப்பிக் கொடுத்து சமரச சன்மார்க்க சங்கத்தை விருத்தி செய்விக்கத் திருவுள்ளத்துக் கருதிய பெருங் கருணை வள்ளல் சாலைக்கு உரியவர்களாகி யிருந்தும் அவநம்பிக்கையுடன் இருக்கின்றவர்கள் விஷயத்திலும் இந்த உபகாரம் செய்தேயருளுவார். ஆனால் அவர்கள் சன்மார்க்க சங்கத்திற்கு மாத்திரம் அருக ராகார்கள். ஆகலில் நம்பிக்கையுடன் இருங்கள். பெரிய களிப்பை யடைவீர்கள். இது சத்தியம். இது சத்தியம்.

பிரமோதூத வருடம் இப்படி

பங்குனி மாதம் 18ஆம் நாள் சிதம்பரம்

பார்வதி புரம் இராமலிங்கம்
* * *