Damodaran Raman
சுத்த சிவ சன்மார்க்கம்-ஒரு விளக்கம்.
அன்பர்களே,வணக்கம்.உரைப்பகுதியில் சுத்த என்பதைப் புரிந்து கொள்வதற்காக  விந்து, பரவிந்து எனும் இரண்டையும் மறுப்பது சுத்த விந்து என்றும் சிவம் பர சிவம் எனும் இரண்டையும் மறுப்பது சுத்த சிவம் என்றும் சன்மார்க்கம் சிவ சன்மார்க்கம் எனும் இரண்டையும் மறுப்பது சுத்த சன்மார்க்கம் என்றும் கூறப்பட்டுள்ளது

அதைக் குறித்து சில விளக்கம்:

அத்வைதம்-அத்துவிதம் என்னும் சொல் அருட்பாவில் வருகிறது.துவிதம் என்றால் இரண்டு.அ என்பது எதிர் முன்னொட்டு.நீதி என்பதில் எதிர் முன்னொட்டைச் சேர்த்தால் அநீதி ஆகும். இவ்வாறே துவிதம் என்பதன் முன் அ என்பதைச் சேர்த்தால் அத்துவிதம் ஆகும்.அத்துவிதம் என்றால் இரண்டன்று என்பதுதான் பொருள்.அத்துவிதம் என்னும் சொல் ஆன்மாவிற்கும் இறைவனுக்கும் உள்ள உறவைக் குறிப்பிடும் ஒரு சொல்.இதனை விளக்க வந்தவர்களுள் ஆதி சங்கரர்  பொன்னும் அதிலிருந்து செய்யப்படும் நகைகளைப் போலும் அபேதம் என்றார்.இறைவனுக்கும் ஆன்மாவிற்கும் பேதமில்லை என்பது அவர்கருத்து. இது கேவல அத்வைதம். மத்துவர் இருளும் ஒளியும் போல் பேத வாதம் கூறினார்.அதாவது ஆன்மாவும் இறைவனும் வேறு வேறு என்று பேதம் பேசினார். இதுவே துவைதம் ஆகும். இராமானுஜர் சொல்லும் பொருளும் போல் பேதா பேதம்(பேதம்+அபேதம்)என்று இறைவனுக்கும் ஆன்மாவிற்கும் உள்ள உறவாகக் குறிப்பிட்டார். இதுவே விசிஷ்டாத்வைதம். இவற்றுள் எது சரியானது என வரும்போது சைவ சித்தாந்தியான மெய்கண்ட தேவர் மேற்கூறிய உறவு முறைகளை மறுத்து  சுத்தாத்துவிதம்(சுத்த+அத்துவிதம்) என்றார்.அதாவது அத்துவிதத்தை விளக்க வந்தவர்கள் கேவல அத்துவிதம்,துவிதம்,விசிஷ்ட அத்துவிதம் என்று அத்துவிதத்தைப் பலவாறு  கூறியதை மறுத்து அத்துவிதம் என்பதின் உண்மையான பொருளைத் தெளிவு படுத்தி சுத்த அத்துவிதம்-சுத்தாத்துவிதம் என்றார்.இங்கு சுத்த என்பதன் பொருள் கலப்பற்றது-தூய்மையானது என்பதாகும். நெய்யைச் சுத்த நெய்,அசல் நெய்,கலப்பற்ற நெய்,தூய நெய் என்றெல்லாம் குறிப்பிட வில்லையா?

மெய்கண்ட தேவர் கூறிய சுத்த அத்துவிதத்தை அறிந்து கொள்வது நலம். கண்ணொளியில் ஆன்ம அறிவு போல் உயிர்களுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு இருக்கிறது.கண் ஒரு காட்சியைக் காணும்போது  உயிரின் அறிவு எப்படிச் செயல்படுகிறதோ அப்படியான உறவுதான் இறைவனுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பும் இருக்கிறதாம்.இதனை மேலும் புரிந்து கொள்வதற்காக மூன்று நிலைகளில் விளக்கம் கூறப்படும். ஆன்மாவுடன் ஒன்றாய்,வேறாய்,உடனுமாய் இறைவன் இருக்கிறானாம்.உடலும் உயிரும் எப்படி ஒன்றுபட்டு உடலென உயிரென வேறுபாடின்றி இருக்கிறதோ அப்படி இறைவனும் உயிருடன் ஒன்றாய் இருக்கிறான். ஆனாலும் உடல் வேறு:உயிர் வேறு என்பதுதான் உண்மை நிலை.எனவே உயிருடன் இறைவன் ஒன்றாய் இருந்தாலும் பொருளின் தன்மையால் உயிரின் வேறாய் இறைவன் இருக்கிறானாம்.உயிரின் அறிவு, காணும் காட்சியில் தொடர்பு கொண்டால்தான் கண்டது விளங்கும்.இவ்வாறே இறைவனும் ஆன்மாவுடன் உடனுமாய் இணைந்து செயல்பட்டால்தான் உயிரால் கன்மங்களைச் செய்ய முடியும்.இதுதான் கலப்பற்ற-தூய- சுத்த அத்துவிதம்.
இறைவன் ஆட்டுவித்தால்தான் ஆன்மா ஆட முடியும் என்பதைத் தெளிவாகச் சுத்த அத்துவிதம் விளக்குகிறது.

இனிச் சிவ என்பதன் விளக்கம் வருமாறு. இறைவனின் இலக்கணமாகச் சிவஞான போதம்,இறைவன் நம் வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டக் கூடியவன் என்றால் இறைவனும் நிலையற்றவனாகி அழியக்கூடியவனாம். அப்படியானால் எந்த வகையிலும் அறிய முடியாத சூனியம்(வெறுமை-ஒன்றும் இல்லாமை) போன்றவனா இறைவன் என்றால் அப்படியன்று. என்றும் அழியாமல் இருக்கும் சத்து இறைவன் ஆவான். பசுவும் பாசமும் கூட என்றும் அழியாதன. எனவே இவற்றிலிருந்து வேறுபடுத்தவே சிவ சத்து என்று கூறப்படும்.இறைவனுடன் தொடர்பு உடையதே  சிவசத்து ஆகும். இறை ஞானத்தால் மட்டுமே இறைவனை அறிய முடியும்.

இப்போது செய்திக்கு வருவோம்.சன்மார்க்கம் என்ற பெயரில் பற்பலரும் தங்கள் தங்கள் கொள்கைகளை விளக்குவார்கள். இவர்களின் சன்மார்க்கத்தை விலக்குவதற்கே தம் மார்க்கத்தைச் சுத்த சன்மார்க்கம் என்றார். சுத்த சன்மார்க்கம்,இறைவனுடன் தொடர்பு உடையது என்பதை விளக்கவே சுத்த சிவ சன்மார்க்கம் என்று மேலும் தெளிவு படுத்தினார். சைவ சித்தாந்தம் உட்பட மற்றவர்களின் சன்மார்க்கம் மரணத்தை வெல்லும் வழி வகைகளைக் கூறா. சாகாக்கல்வியை வெளிப்படுத்தும் சன்மார்க்கத்தைச் சன்மார்க்கம்-சுத்த சன்மார்க்கம்-சுத்த சிவ சன்மார்க்கம் என்று வள்ளலார் குறிப்பிட்டார்.வேகாத காலாதிகளைக் கண்டு கொண்டு விளைய விளைவிக்கும் மெய்த்தொழிலைச் செய்வதே சுத்த சிவ சன்மார்க்கம் செல்வோரின் கடமை யாகும்.

விந்துவை அபர விந்து பரவிந்து என்று பகுக்காமல் விந்துவை விந்தாகக் குறிப்பிடுவதுதான் சுத்த விந்து.இவ்வாறே சுத்த சிவமும்.அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொண்டால் கடவுள் நிலையறிந்து அம்மயமாதல் யாவரும் அடையக் கூடியதே. வாழ்க.வாழ்க.