T.M.R.
திரு உந்தியார்
கிராமிய சிறுவர்களின் விளையாட்டுகளில் "உந்தி பறத்தல்" என்பதும் ஒன்று. வயிற்றுக் கொப்புளை உந்தி என்பர். உந்தி பறக்கும்படி இரண்டு சிறுவர்கள் ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக்கொண்டு, பாட்டு பாடிக்கொண்டே சுழன்று சுழன்று சுற்றுவதே உந்தி பறத்தல் விளையாட்டு. தற்காலத்தில் இவ்விளையாட்டு எங்கும் விளையாடப்படவில்லை.

"உந்தி பறத்தல்" என்ற பாடல் கலித்தாழிசை என்னும் பாவகையால் அமைக்கப்பட்டிருக்கும். இதில் முதல் இரண்டு வரியை ஒரு சிறுமியும், மூன்றாம் வரியினை மற்றொரு சிறுமியும் பாடுவதாக அமைக்கப்பட்டிருக்கும். "உந்தி பறத்தல்" என்ற பாவகையினை மாணிக்கவாசகரும், திருவியலூர் உய்யவந்ததேவ நாயனாரும், வள்ளலாரும் பாடியுள்ளனர்.

அருட்பெருஞ்ஜோதி அடிமை
தி.ம.இராமலிங்கம் இயற்றிய
திரு உந்தியார்

                                                               (கலித்தாழிசை)

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் வந்தென்
மருள் போக்கினாரென்று உந்தீபற
அபய மளித்தானென்று உந்தீபற. 1

சித்தெல்லாம் வல்லான் சிற்சபை வந்தெனை
பித்தனாக் கினானென்று உந்தீபற
வினை யொழித்தானென்று உந்தீபற. 2

வானவரும் கடவுளென வந்தவ ராவரும்
ஞானசபைக் கடிமைஎன்று உந்தீபற
தனித்தலைமை இடமென்று உந்தீபற. 3

நேயனாகி நீஎன்றும் நானென்று மில்லாதாகி
காயமும் மாயமாகுமென்று உந்தீபற
காலனும் கனிவானென்று உந்தீபற. 4

ஜோதியாய் சூழ்ந்து ஜோதியாய் வந்தென்
ஜாதியைக் கெடுத்தானென்று உந்தீபற
மதமும் ஒழிந்ததென்று உந்தீபற. 5

ஞானசபைத் தலைவன் ஞாயிறாய் வந்தென்
கானமாகி ஒளிர்வானென்று உந்தீபற
காதலாகி வருவானென்று உந்தீபற. 6

எட்டம்பலம் முடையான் எனைத் தொட்டு
கட்டியணைத் தானென்று உந்தீபற
கருணை பொழிந்தானென்று உந்தீபற. 7

வடலூர் ஞானம் வந்தெனைப் பேணும்
மடமும் மாய்ந்ததென்று உந்தீபற
நடுக்கண் திறந்ததென்று உந்தீபற. 8

சத்தியச் சபையைச் சுற்றிய சங்கிலிபோல்
நித்தியம் ஆனேனென்று உந்தீபற
காற்றைக் கடந்தேனென்று உந்தீபற. 9

கள்மாது கொலைபுலைக் கழன்று ஞானசபைக்
குள்ளே சென்றேனென்று உந்தீபற
உண்மையைக் கண்டேனென்று உந்தீபற. 10

சிற்சபைச் செயலெலாம் சிறியேனின் செயலாக்கி
அற்புதம் புரிந்தானென்று உந்தீபற
சுதந்தரம் அளித்தானென்று உந்தீபற. 11

பொற்சபை போகமெலாம் புரிந்திடச் செய்தே
கொற்றவ னாக்கினானென்று உந்தீபற
அடிமை யாக்கினானென்று உந்தீபற. 12

ஞான முழுதாகி ஞானயொளியாகி எனக்கு
வானநிலை யளித்தானென்று உந்தீபற
காலநிலை கடந்தேனென்று உந்தீபற. 13

அன்பெனும் தயவால் ஆடுஞ்சபை யொளியை
என்னுள் கண்டேனென்று உந்தீபற
உத்தம னானேனென்று உந்தீபற. 14

தராத பொருளெலாம் தயவால் எடுத்தேன்
இராமலிங்க மானேனென்று உந்தீபற
ஓங்கினேன் என்று உந்தீபற. 15

Please be continue...

https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqdXVkUkd3SzB0UVU/view?usp=sharing

ThiruUnthi Para.jpg

ThiruUnthi Para.jpg

2 Comments
karuneegar umapathy
Wow..Mr.T.M.Ramalingam.superb..meaneingful. 'Your Dreams come True"
Thursday, January 29, 2015 at 18:08 pm by karuneegar umapathy
TMR RAMALINGAM
Thank you Mr.Karuneegar Umapathy sir..
Friday, January 30, 2015 at 10:33 am by TMR RAMALINGAM