V Baskar
மாமிச உணவை மறுப்போம்,வியாதிகளற்று வாழ்வோம்!
இன்றைய வேகநடை உலகில் மக்கள் ஆன்மீகத்தை உணராமல் உலகியலில் அதிகம் மூழ்கி அதன் வழி வாழ்வினை நடத்தி எண்ணற்ற நோய்களால் துன்புற்று மடிவதைப் பார்க்கின்றோம். இதய நோய், புற்று நோய், கை கால்கள் செயலிழத்தல் போன்ற கொடிய நோய்களுக்கு புலால் உண்பது ஒரு முக்கிய காரணமாக உள்ளது. அனைத்து வியாதிகளுக்கும் பாரம்பரியம் என்பது ஒரு காரணமாக இருக்க, நம்முடைய முயற்சியால் புலால் உண்பதை விடுத்து நோய்களுடன் பாவத்தினையும் தவிர்த்து புண்ணியர்களாக வாழ்வோம். புலால் உண்பதினை நாம் ஏன் தவிர்க்க வேண்டும் என்பது பற்றிய வள்ளலாரின் விளக்கங்களை ஒட்டிய கருத்துக்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

1. “ஜீவர்களெல்லாம் ஒரு தன்மையாகிய இயற்கையுண்மை ஏகதேசங்களாய்ச் சர்வ சக்தியுடைய கடவுளால் சிருஷ்டிக்கப் பட்ட படியால் ஓர் உரிமையுள்ள சகோதரர்களேயாவர். சகோதரர்களுள் ஒருவர் ஓர் ஆபத்தால் துக்கப்படுகின்ற போதும்,துக்கப்படுவாரென்று அறிந்த போதும் அவரைத் தமது சகோதரரென்று கண்ட மற்றொரு சகோதரருக்கு உருக்கமுண்டாவது சகோதர உரிமையாகலின், ஒரு ஜீவன் துக்கத்தை அனுபவிக்கக் கண்ட போதும், துக்கப்படுமென்று அறிந்த போதும் மற்றொரு ஜீவனுக்கு உருக்க முண்டாவது ‘பழைய ஆன்ம உரிமை’ யென்று அறிய வேண்டும்”. ஆன்ம வடிவில் ஒன்றுபட்டு உருவத்தால் வேறுபட்ட நம்முடைய சகோதர சகோதரர்களாக விளங்கும் பிற உயிர்களை உணவிற்காக வதைப்பது முறையோ?

2. விலங்குகள் ஒன்றையொன்று அடித்து உண்கின்றனவே? விலங்குகளுக்கு பகுத்தறியும் திறன் கிடையாது. எனவே அவைகள் செய்யும் செயல்கள் பாவ-புண்ணியங்களை உண்டுபண்ணாது. நன்மை-தீமை யாவை? என பகுத்தறியும் திறன் உள்ள நாம் சிந்தித்து, குறைந்தபட்சம் நமது நலன் கருதியாவது புலால் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

3. தாவரங்களும் உயிர்கள் தாமே? அவற்றை கொன்றால் பாவம் வராதா? மரம்,புல், நெல் முதலான ஜீவர்கள் பரிசமென்ற ஓரறிவையுடைய ஜீவர்கள் என்பதாலும் அவ்வுடம்பில் ஜீவ விளக்கம் ஒரு சார் விளங்குவதாலும்,அவ்வுயிர்கள் தோன்றும் வித்துக்களும் மற்ற வித்துக்கள் போல் சடமாதலாலும்,அவ்வித்துக்களை நாமே விதைத்து உயிர் விளைவு செய்யக்கூடுமாதலாம், அவைகளை வேறு செய்யமால் அவைகளிடத்தில் சடங்குகளாகத்தோன்றிய வித்துக்களையும்,காய்களையும், கனிகளையும்,பூக்களையும்,கிழங்குகளையும்,தழைகளையும் ஆகாரமாக கொள்வது உயிர்க்கொலையுமல்ல அது துன்பத்தினை உண்டு பண்ணுவதுமல்ல.

4. நமக்கு சிறு காயம் ஏற்பட்டாலே, மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்தும்,எக்ஸ்ரே எடுத்தும், மருந்து மாத்திரைகளை உட்கொண்டும், துன்பத்தை போக்கிக் கொள்கிறோம். ஆனால் ஆடுகளை கொல்லும் போதோ, மீன்களை அடித்து, தேய்த்து அறுத்துக் கொள்ளும் போதோ, கோழிகளை கழுத்தறுத்து கொள்ளும் போது நமக்கு மனித நேயமோ ஆன்மநேய உரிமையோ ஏற்படுவதில்லை. புலால் உணவுகள் சாப்பிடுவதை எக்காரணம் கொண்டும் விடவே முடியாது என்பவர்களுக்கு ஆடுகள் அறுத்துக் கொல்லப்படுவதை பார்க்கத் துணிவு உள்ளதா?

5. உலகப் பொதுமறை என நாம் பெருமை கொள்ளும் திருக்குறளில் புலாலுண்ணாமை மற்றும் கொல்லாமை ஆகிய இரு அதிகாரங்கள் உள்ளன. நம் நாட்டில் தோன்றிய மகான்களான மகாவீரர் மற்றும் புத்தர் வலியுறுத்துவதும், மனிதன் இப்பிறவியிலேயே இறைவனாகலாம் என்று காட்டிய வள்ளலார் வலியுறுத்துவதும் புலாலூண்ணாமையே. ஆகவே, மாமிச உணவினைத் தவிர்த்து,உடல் மற்றும் உயிர் நலம் காப்போம்!
veg.jpg

veg.jpg

venkatachalapathi baskar
2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குடந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுகளில் வள்ளல் பெருமானைப் பற்றியும் சன்மார்கத்தைப் பற்றியும் அறியாத மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் 3000 நோட்டிஸ் அடித்து வீடு வீடாக சென்று நோட்டிஸை விநியோகம் செய்து விருப்பப்பட்டவர்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. அந்த நோட்டிஸின் முதல் பக்கம் நமது பெருமானைப் பற்றியும் அவரது போதனைகளைப் பற்றியும் இரண்டாவது பக்கம் மாமிச உணவினால் ஏற்படும் கெடுதல்களைப் பற்றியும் பிரசுரிக்கப்பட்டது.

இந்த நோட்டிஸ் தமிழிலும் ஆங்கிலத்திலும் தனித்தனியாக அடிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் அடிக்கப்பட்ட நோட்டிஸ் தமிழ் தெரியாதவர்களுக்கும் வெளிநாட்டினருக்காகவம் தயாரிக்கப்பட்டது.

இந்த இரண்டு நோட்டிஸ்களும் PDF வடிவில் நமது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விருப்பப்படும் அன்பர்கள் சன்மார்க்கம் அறியாதவர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு இதனை பயன்படுத்தலாம்.
Friday, October 31, 2014 at 16:25 pm by venkatachalapathi baskar