SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
ள்ளலார் அனைவரையும் அழைக்கிறார்

வள்ளலார் அனைவரையும் அழைக்கிறார்
நான் உங்களைக் குறித்துத்தான் சொல்கிறேன் என்வார்த்தையைக் கேளுங்கள் -நேர்மையற்ற மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர் உங்களால் எனக்கு
எந்தப் பயனும் வேண்டியதில்லை-நான் சொல்லும் உண்மையைப் பொய்யாக வேறு நினைக்கவேண்டாம்-ஏட்டிலே எழுதி வைக்கப்பட்டுள்ள சமயம், மதம் முதலிய எல்லாம் பொய் பொய்யே நீங்கள் அவற்றில் புகுந்து
கொள்ளவேண்டாம்- சிவம் ஒன்றே பொருள் எனக் கண்டு அறிந்து கொள்ளுங்கள் -தெறிக்கின்ற சிற்சபை நடத்தைத் தெரிந்து துதியுங்கள் சித்தி எலாம் இத்தினமே சத்தியமாக உங்களை அடையும்.

குறித்துரைக்கின்றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
கோணு மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்
வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது
மெய் யுரையைப் பொய்யுரையாய் வேறு நினையாதீர்
பொறித்த மதம் சமயம் எலாம் பொய் பொய்யே அவற்றில்
புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் எனக் கண்டறிமின்
செறித்திடு சிற்சபை நடத்தைத் தெரிந்து துதித்திடுமின்
சித்தி எலாம் இத்தினமே சத்தியம் சேர்ந்திடுமே.(பாடல்எண் 1549-24)

சமயம்,மதம் எல்லாம் ஏட்டிலே எழுதப்பட்டவையே அவைகள் உண்மையல்ல பொய் பொய்யே என்று வள்ளலார் நமக்கு அறிவுறுத்துகிறார்.அவற்றை
உண்மை என்று நன்கு படித்த மேதைகளும் நம்புகிறார்கள். சமய மதம் எல்லாம் பொய்யே என்றால் அவற்றுள் கூறப்பட்டுள்ள சம்பவங்களும், கடவுளர்களும் கதிகளும் நரகம், சொர்க்கம் , பதங்கள்,கைலாயம் வைகுண்டம் போன்ற லோகங்களும் எல்லாம் பொய் ஆகிவிட்டன.எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பி ஏமாந்துகொண்டிருந்த நமக்குத் தைரியமாக உண்மையைச் சொன்னார் வள்ளலார்

ஆன்மீகத்தில் உள்ள உண்மைகளை இதுவரை வந்த அருளாளர்கள் மக்களுக்கு வெளிப்படையாக எடுத்து உரைக்காமல் அவர்கள் மட்டுமே தெரிந்துகொள்ளக்கூடிய பரி பாஷையில் சொன்னதாலும் அவ்வாறே எழுதியதாலும் இன்றுவரை மூடநம்பிக்கையே நிலவி வருகிறது. தன்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் சரி, பழித்தாலும் சரி மக்களுக்கு உண்மையை நாம் சொல்லுவோம் என்று துணிந்து இந்தச் சிறு தெய்வங்கள் எல்லாம் இல்லை ,வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் உண்மையை வெளிப்படையாகச் சொல்லவில்லை, அவற்றால் ஒரு பயனும் இல்லை ,சமய மதம் எல்லாம் பொய்யே அவற்றில் நுழையாதீர் என்றெல்லாம் நமக்கு விளக்கி நாம் இறைவனின் உண்மையை அறிந்து அவனை அடையக்கூடிய வழி சொன்னதுதான் வள்ளலார்