SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வேதாகமங்கள் பற்றி வள்ளலார்
வேதாகமங்கள் பற்றி வள்ளலார்
வேதங்கள்,ஆகமங்கள்,சாத்திரங்கள்,புராணங்கள்,இதிகாசங்கள்கூறும் கதைகளையும் கற் பனைகளையும் வள்ளலார் ஏற்கவில்லை.
கலை உரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும் கண் மூடிப் பழக்கமெலாம் மண் மூடிப்போக என்றார். வேதாகமங்கள் சூதாகச் சொல்லுகின்றன என்றும் உண்மையை வெளிப்படையாக உரைக்கவில்லை என்றும் வள்ளலார் கூறியுள்ளார் .இவைகளால் எந்தப் பயனும் இல்லை என்றும் வள்ளலார் கூறுகிறார்.

வேதாகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர்
வேதாகமத்தின் விளைவு அறியீர் --சூதாகச்
சொன்னவலால் உண்மை வெளி தோன்ற உரைக்கவில்லை
என்ன பயனோ இவை.( பாடல் எண்1512 )2223

சாத்திரங்கள்:
சாத்திரங்கள் எல்லாம் தடு மாற்றம்தான் சொல்லுகின்றன.
நேத்திரங்கள் போல் காட்ட நேராது என்கிறார்.

சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி
நேத்திரங்கள் போல் காட்ட நேராவே --நேத்திரங்கள்
சிற்றம்பலவன் திருவருள் சீர் வண்ணம் என்றே
உற்றிங்கறிந்தேன் உவந்து (பாடல் எண் 1511 )23

வேதாங்கள், ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள், சாத்திரங்கள் முதலானவற்றைப் போற்றிக்கொண்டிருக்கும் பக்திமான்கள்,அருளாளர்கள் மத்தியில் இவற்றால் ஒரு பயனும் இல்லை என்று சொல்ல எந்த அளவிற்கு அவர் ஞான அறிவு பெற்றிருந்தார் எனப் புரிந்துகொள்ளவேண்டும் .அவைகளில் உண்மை இல்லை என்று வள்ளலார் கூறவில்லை.மாறாக மக்கள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியவாறு உண்மை வெளிப்படையாக அவைகளில் சொல்லப்படவில்லை என்பதே அவர் கூற்று. எந்தப் பயனும் இல்லாது அவைகளை வைத்துக்கொண்டு வாதம் செய்து காலத்தை வீணடிக்கவேண்டாம் என்கிறார் இது அவர் மக்கள் மீது கொண்டிருந்த அளவற்ற கருணையினால்தான் .வேதங்களிலும் மற்றவைகளிலும் உண்மைதான் சொல்லப்பட்டிருக்கின்றது என்று ஏமாறாதீர்கள் .அவற்றில் உண்மை வெளிப்படையாக இல்லை.
ஜாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே ஞான
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர் அவர்தாமே
வீதியிலே அருட்ஜோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே ...1473