SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
இறைவனை எப்படி அறிவது
இறைவனை எப்படி அறிவது?
நம் உடம்பில் உயிர் உள்ளது என்பதை நாம் எப்படி அறிகிறோம் .உடம்பின் செயல்பாட்டை வைத்துத்தானே? அதேபோல் பிரபஞ்ச இயக்கம் முதலிய மனுஷ்ய தரத்திற்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளை வைத்தே இறைவனை அறியமுடியும். . இந்த உடம்பின் செயல்பாடு நின்று போய் விட்டால் உயிர் போய்விட்டது என்று உணர்கிறோம்.அதேபோல் இறைவனின் செயல்பாடுகள் எவ்வளவோ உள்ளன,அவற்றைக் கொண்டு இறைவன் என்ற ஒருவன் இருக்கிறான் என்பதை நாம் உணரவேண்டும் என்கிறார் வள்ளலார்;

பரம் அதனோடு உலகுயிர்கள் கற்பனையே எல்லாம்
பகர் சிவமே என உணர்ந்தோம் ஆதலினால் நாமே
பிரமம் எனப் பிரற்குரைத்து பொங்கி வழிந்து ஆங்கே
பேசுகின்ற பெரியவர்தம் பெரிய மதம் பிடியேல்
உரமிகு பேருலகுயிர்கள் பரம் இவை காரியத்தால்
உள்ளனவே காரணத்தால் உள்ளன இல்லனவே
தரமிகு பேர் அருள் ஒளியால் சிவமயமே எல்ல்லாம்
தாம் எனவே உணர்வது சன்மார்க்க நெறி பிடியே.
( பாடல் எண் 1165)11

வள்ளலார் இறைவனைப் பற்றி முடிவாக என்னதான் சொல்கிறார்.?

1 .இந்த உலகத்தில் உள்ள எல்லாச் சமயங்களும் ,எல்லா மதங்களும் காட்டுகின்ற இறை வடிவங்கள் அத்தனையும் அந்தந்த சமய மதங்களில் தோன்றிய ஞானிகளின் கற்பனையே தவிர இறைவன் அந்தந்த வடிவங்களில் இல்லை.
2 அதேபோல் சமயங்களிலும், மதங்களிலும் இறைவனுக்க இடப்பட்ட அத்தனை பெயர்களும் கற்பனையே.
3 இந்த உடம்பில் உயிர் எப்படி ஒன்றுதான் இருக்க முடியுமோ அப்படி இறையவனும் உலகில் ஒருவனாகத்தான் இருக்கமுடியும்
4 இந்த உயிரை எப்படி உடம்பின் செயல்பாட்டால் அறிகிறோமோ அவ்வாறே இறைவனையும் அவனது செயல் பாட்டால் மட்டுமே அறியமுடியும்.
5 கோடிக்கணக்கான மக்கள் இந்த உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் சமயத் தெய்வங்களைத்தான் வழிபடுகிறார்கள் .காரணம் அவர்கள் உண்மை அறியவில்லை. 6 பாமர மக்கள் மட்டுமல்ல இதுவரை பெரியவர்கள் என்று பெயர் இட்டுக்கொண்டிருந்தவர்களும், உண்மையை அறியாது, பாமர மக்களைப் போன்றே சமயத் தெய்வங்களை அப்படியே இருப்பதாக நம்பி கண்ணை மூடிக்கொண்டு ஏமாந்து பாடி வைத்திருக்கின்றார்கள்.
7 கடவுளைப் பற்றிய உண்மையை ஆதியிலே வல்லவன் ஒருவன் மறைத்துவிட்டான். அவன் பூட்டிய அந்தப் பூட்டை இதுவரைக்கும் ஒருவரும் திறந்த பாடில்லை.

இறைவன் ஒருவனே

எய்வகை சார் மதங்களிலே பொய்வகைச் சாத்திரங்கள்
எடுத்துரைத்தே எமது தெய்வம் எமது தெய்வம் என்று
கைவகையே கதறுகின்றீர் தெய்வம் ஒன்றென்று அறியீர்
கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்
ஐவகைய பூத உடம்பு அழிந்திடில் என் புரிவீர்
அழியுடம்பை அழியாமை ஆக்கும் வகை அறியீர்
உய்வகை என் தனித்தந்தை வருகின்ற தருணம்
உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே .........1477

இதுவரை யாரும் கூறாத பல உண்மைகளைத் தைரியமாக வள்ளளார்தான் எடுத்துக் கூறினார் .நாம் இறைவனைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற பெருங்கருணைதான் இந்த உண்மையைக் கூற வைத்தது. மற்ற அருளாளர்கள் உணராத உண்மையை வள்ளலார் உணர்ந்தார் .நமக்கும் உணர்த்தினார். சமயத்தில் வள்ளலார் செய்த பெரும் புரட்சி இதுவாகும்.