கவிஞர். கங்கைமணிமாறன்
ஆன்மாவில் இனிக்கும் அற்புதம்..!
அறிவினான் ஆகுவது உண்டோ... ? என்று  
வினாத்தொடுக்கிறார் வள்ளுவர்.
இருப்பது ஒன்றே முக்கால் அடி.
எண்ணத்தை வெளிப்படுத்த ஏழே சீர்கள்.
அதற்குள்...
ஒரு கேள்வி கேட்டு விடை சொல்லும்
கருத்து வெளிப்பாட்டு உத்தி
வள்ளுவர்க்கே வாய்த்த வரம்.
கற்றதனால் ஆய பயன் என்கொல்...?
என்பார் இதற்கு முன்பு.
பல இடத்தில் இந்தப் பாங்கு உண்டு.
நிற்க.
முகப்புக்கு வருவோம்.
பிறிதின் நோய் தம்நோய்போல் போற்றவில்லை என்றால்....
பெற்ற அறிவினால் ஆகிய பயன் பூஜ்யம் என்கிறார் அவர்.
பிறர் நோய் எனப்பேசாது,
அஃறிணையை உளப்படுத்தி
பிறிதின் நோய் என்றது
அவர்தம் பெருங்கருணைத் திறத்திற்கு
எடுத்துக் காட்டு.
வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம் வாடினேன்...
என்ற வள்ளல் பெருமானின்
இணையற்ற இதய ஈரம்...
வள்ளுவத்தின் சாரலாய் வந்து,
நம்
வாழ்வுக் கண்களை
அகலமாய்த் திறக்கும் அதிசயம்
ஆன்மாவில் இனிக்கும் அற்புதம் வாய்ந்தது.