Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
திசைகள்...சுவாமி சரவணானந்தா.
     இவ்வுலகில் முக்கியமாகக் குறிக்கப்படும் திசைகள் நான்காம். அவை, கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு எனப்படும். இத்திசைக் குறிப்பு ஞாயிற்றைக் கொண்டும், அதன் புறத்திருக்கும் ஒரு பொருளுக்கு மேல், கீழ், வலம், இடம் ஆகிய பக்கங்கள் குறிக்கப்படுகின்றனவாம். கீழ், மேல், கிழக்கு, மேற்காகவும், தெற்கு, வடக்கு வலம் இடமாகவும் உள்ளனவாம். சூரியன் இல்லாமல் ஒன்றும் உண்டாகாது. சூரியனிலிருந்து சிதறிப்பிரிந்து அச்சூரியனை நோக்கி சுழன்று கொண்டே சுற்றி வருகின்றன நம் பூமியும், அதன் கிரகங்களும், சூரியனை வலம் சுற்றுகின்றதாகக் கொள்ளுமிடத்து, இந்தப் பூமிக்கு சூரிய உதயமாம் திக்கு கிழக்கு எனவும், அதற்கு எதிர்திசை மேற்கு எனவும் நேர்துருவப் பக்கம் வடக்கு எனவும், அதற்கு எதிர் தெற்கு எனவும் கொள்ளப்படும். இது போன்றுதான் மற்ற கோட்களின் திசையும் அறியப்படும். தனிவெளியில், ஒருவன், ஞாயிறும், விண்மீன்களும் தோற்றாத இருளிரவில் இருந்து கொண்டு, துணை கருவியொன்றுமின்றி திசையறிய முடியாதாம். உழக்குக்குக் கிழக்கு இல்லை என்பது பழமொழி.. இத்திசையறிவால் என்ன பயன் என்றால், ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக் காட்டுவதற்கும். தூரத்தைத் தெரிவிப்பதற்கும் பயன்படுத்துவது ஒன்று. ஒவ்வொரு திசையிலிருந்து வரும் காற்றுக்களால், இன்ன பயன் உண்டாம் என அறிந்து கொள்ளுவது ஒன்றாம். இக்காற்றுகளை நம் தமிழில் வாடை, கொண்டல், தென்றல், கோடை என வடக்கு கிழக்கு, தெற்கு, மேற்குக்குரியன என்ற முறையில் குறிக்கின்றனர். இக்காலத்திய படங்களை எடுத்துக் கொண்டு திசை குறிக்குமிடத்து, மேல் பாகம் வடக்காகவும், கீழ் பாகம் தெற்காகவும், அப்படத்திற்கு இடப்பாகம் கிழக்காகவும் வலப்பாகம் மேற்காகவும் குறிக்கின்றனர். நாற்றிசையிலிருந்தும் ஒலி பரவுகின்றது. உலக விஷயங்கள் வந்து வந்து சூழ்ந்து கொண்டேயிருக்கின்றன. இப்படி வரும் விசேஷச் செய்திகளையே செய்தித்தாள்கலில் குறிக்கப் பெறுகின்றனவாம். இந்தச் செய்திகள் நாற்புற விஷயங்கள் என்பன குறிக்கவே அந்தத் திசைக்குறிய செய்திகளின் முதல் எழுத்துக்களையே நியூஸ் (NEWS) என்ற ஒரு புதுச்சொல்லாக்க்கி, அதற்குச் செய்திகள் என்ற பொருளும் வழங்கியுள்ள்னர். இந்தப் புறச் செய்திகளை புரிந்து கொள்ளுதல் சிறிது கூடும். இதிலிருந்து அக நிலைக்கு ஏறி உண்மை கண்டு, அருள் அனுபவம் பெற வேண்டுவதுதான் நம் க்டமையாகும்.

     நமது உண்மைக் கடவுளான்ம வடிவம், சிரநடுச் சிற்றம்பலத்தில் அணுவாய்த் தோற்றி., நாற்றிசையும், தன்னியல் உண்மைத் தயாவொளியைப் பரப்பிக் கொண்டிருக்கின்றதாகும். இதன் முகப்புறம் க்ழக்கு, பின் புறம் மேற்கும், வலப்புறம் தெற்கு, இடப்புறம் வடக்குமாக உள்ளனவாம். இவற்றைத் தற்புருஷம், சத்தியோஜாதம், அகோரம், வாம தேவம் என்னும் நான்கு முகங்களாகவும். மேனிலையை ஈசான முகமெனவும் யோக ஞான நூல்கள் கூறும். ஒவ்வொரு திசை நோக்கி தியானாதிகள் புரிந்து, குறிப்பிட்ட சித்திகளை அடையலாம் என்ப. இந்த தியான சமாதி சித்தியனுபவங்கள் சன்மார்க்கியின் குறிக்கோளல்ல. அவன் அம்மேனிலை நின்று தயவாலே உண்மை நெறிக்குத் தக வாழ்தல் வேண்டுவதே முக்கியம். இக்காரணமாகத்தான் சத்திய ஞான சபை வளர் வடலூர்ப் பதிக்கு உத்தர ஞான சித்திபுரம், உத்தர ஞான சிதம்பரம், பார்வதிபுரம், வடலூர் என்ற பெயர்கள் தரப்பட்டுள்ளனவாம்.  இந்தத் திசையின் உண்மைக் கருத்தும் அனுபவமும் குறித்து, சாகா இன்ப வாழ்வைச் சுட்டும் “அருட் ஜோதிப் பந்தாடலில்” முதல் நான்கு பாக்கள் குறித்துள்ளார் நம் வள்ளற் பெருமான்.

     உலகியற் சித்திகளை வழங்க வந்த கன்ம சித்தர்கள், அற்புதத் தளிகளில் கருப்பீடத்தே மந்திர சக்கரங்களை நால் வாயில்களோடு அமைத்து, உயிரூட்டி, (பிராணப் பிரதிஷ்டை செய்து) வைத்துள்ளார்கள். சுற்றுப் பிரகாரங்களில் நாற்கோபுர வாயில்களும் நிர்மாணித்துள்ளனர். இவற்றில் பக்தி சிரத்தையோடு வழிபடுவோர் குறிப்பிட்ட இஷ்ட காரிய சித்திகளைப் பெறுதல் கூடும். இவற்றால், உலகியற் சித்திகள் ஓரளவு தான் கிடைக்கும், சரியை, கிரியை கடந்தவர்கள் யோக ஞான சிலைக்கு ஏறியவர்கள் கடவுளோடு கலந்து போம் சாயுச்சிய நிலை வரை அடையலாம் என்பது முன்னோர் கருத்தாம். ஆனால்,இன்றைய நம் சன்மார்க்கம், இரண்டற்ற ஒன்றாகிய கடவுள் நிலையிலிருந்தே தயாவொளியை நாற்றிசையும் பரப்பிக் கொண்டு நாளும் இன்ப வாழ்வில் விளங்கச் செய்வதாய் இருக்கின்றதாம்.

“போன்றி உரைக்கின்றேன் பொய்யென் றிகழாதீர்
நாற்றிசைக்கண் வாழும் நமரங்காள்-ஆற்றலருள்
அப்பன் வருகின்றான் அருள் விளையாட் டாடுதற்கென்(று)
இப்புவியில் இத்தருணம் இங்கு”

என்று நமது திருவருட் பிரகாச வள்ளலார், அகப்பெரும் பதியின் கண்ணின்று உண்மை கூறி அழைப்பு விடுக்கின்றார். நாற்றிசை உலவரை எல்லாம் அருட் பேராற்றல் கொண்டே அருட் பெருஞ் ஜோதித் தந்தையார், இவ்வுலகில் அருளின்பத் திருச்செயலை என்றும் விளங்கச் செய்வதற்கு எழுந்தருள்கின்றார் என உறுதி கூறப்படுகின்றது. இந்த உறுதிமொழி அன்றொரு நாள், அந்த வடலூர்ப் பதியினின்று இசைத்தது மட்டுமன்று, நாம் நம் உள்ளக் கோயிலின் திருமுன் அடைந்து நிற்கும்போதெல்லாம் இந்த உறுதி வாசகத்தை நாம் உள்ளவாறு கேட்கின்றோம். திருவருளை அடையும் போது, நமது அருட்பெருஞ் ஜோதியின் அடைவும் பயனும் பெறுவோமென்பது திண்ணம். அகண்ட பெருநிலையில் வெளிமுற்றும் அடங்குவது இந்நானிலையில் என்னலாம்.  இந்நிலையில் நிலைத்து விளங்கிக் கொண்டிருப்பது, கடவுள் மட்டுமல்ல, அல்லது மனிதன் மட்டுமல்ல; கடவுளே சுத்த மனித நிலையில் வெளிப்பட்டு பேரின்ப சித்திப் பெருவாழ்வில் நிலை கொண்டிருப்பதே இந்த நானிலையாம். இந்நானிலை நின்று அருட் பூரணத்தாலே நாற்றிசை நிரம்பி விளங்குதல் சுத்த சன்மார்க்க அனுபவமாம்.




20150325_094954.jpg

20150325_094954.jpg