Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
இங்கித மாலை பாடல் எண்.43க்கு உரை விளக்கம்...சுவாமி சரவணானந்தா.
வயலார் சோலை எழில் ஒற்றி வாணர் ஆகும் இவர்தமை நான்
செயலார் அடியார்க்கு அருள்வீர்நும் சிரத்தும் உரத்தும் திகழ்கரத்தும்
வியலாய்க் கொண்டது என்என்றேன் விளங்கும் பிநாகம் அவை மூன்றும்
இயலால் காண்டி என்கின்றார் இதுதான் சேடி என்னேடீ.                           (இங்கித மாலை)

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

     திருவொற்றி ஆகிய ஆன்மாவுக்கு, இம்மனிதப் பிறப்புதான் எல்லாச் சிறப்பும் வாய்ந்ததாயுள்ளதாம். ஏனெனில், இதில் நம் ஆண்டவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நம்மை ஆட்கொண்டு அருளவே இப்போது பிச்சைப் பெருமானாகத் தோன்றி முன் நிற்கின்றார்.

     அடியார்க்கு அருள் பாலித்தல், அவர்க்கு சுபாவம். அவ்வடியார்க்கு அகத்தும் புறத்தும், அருளால் சூழ்ந்து இருந்து கொண்டு, எது எது, எப்போது எப்போது வேண்டுமோ அது அதை அப்போது அப்போது, கேட்காமலே வரவழைத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். அவர்கள் வேண்டும் என்று கேட்டு விட்டாலோ உடனே அருள் செய்வது அவரது செயல். இந்த அவர்தம் அருட்பேர் இயல்பைச் சுட்டவே, அவர் சிலவற்றைத் தம்மேல் அணிந்து கொண்டுள்ளார். இம்மாதிரியான தலைவரைக் கண்டு தான் ஒரு தலைவி அவரிடம் கேட்கிறாள் : “நும் சிரத்தும், உரத்தும், திகழ் கரத்தும் வியலாய்க் கொண்டது என் ?” என வினவுகிறாள். இக் கேள்வியின் பொருள் இதுதான். பெருமானுடைய, தலையிடத்தும், மார்பிடத்தும், கையிடத்தும் கொண்டுள்ளவை என்ன என்பது கேள்வி.

     அதற்கு அவர் தரும் பதில் இங்கிதமான ஒன்றாக இருக்கிறது., அதாவது, இம்மூன்றுக்கும் பிநாகம் என்ற ஒன்றே விடை தருவதாய் இருக்கிறதாம். அதனைப் புரிந்து கொள்ளுவதற்கு, இயலால் காண்டி என்கிறார். அப்படி என்றால், இப் பிநாகம் என்ற சொல்லை மாறுபாடாக வைத்துப்பார் என்று பொருளாம். இது பி-நா-கம் என முக் கூறாகக் கொண்டு, தலை முதலாய மூவிடத்தும், பின்னிருந்து ஒவ்வொன்றாகக் கூட்டிக் கொள்ள வேண்டும். அப்போது கம், நாகம், பிநாகம் என வரும் மூன்றையும், சிரம், உரம், கரம் ஆகிய மூவிடத்தில் உள்ளனவாகக் கொள்ளலாம். அப்படிக் கொண்டால்: 

-----------------------------------------------------------------------------------------------------------------

1. சிரத்து உள்ளது கம் கங்கை எனப்பொருள்படும்.
2. உரத்துள்ளது நாகம் .. பாம்பு ஆம்.
3. கரத்துள்ளது பிநாகம் .. வில் (சிவபிரான் கொண்ட வில்லேதான் பிநாகம் என்று பெயர்)

------------------------------------------------------------------------------------------------------------------

     இதில் சிவ கற்பனா விளக்கம் தான் அடிப்படையாகக் கொள்ளப் பட்டதாய்த் தோற்றுகிறது. ஆனால் திருவருள் உண்மை சமயாதீதத்தில் விளங்குவதாய் மக்கள் சமுதாயம் முழுமைக்கும் பெரும் பயன் அளிப்பதாய் இருப்பதை அருட்பொருளால் அறிந்து கொள்ளலாம்.

     எங்கும் நிறைந்த கடவுளை இன்று அருட்பெருஞ்ஜோதியாய் வள்ளல் வழி கண்டு கொண்டுள்ளோம். அதனையே இப்போது தயாபெருஞ்ஜோதியாகக் கொண்டு அதனையும், தயவு என்னும் ஒரு சொல்லாய்த் திருவருளால் வழங்கப் பெற்றுள்ளோம். ஆம், கடவுள், அளப்பரிய பரமாகாச வடிவினராய் உள்ளதை, நம் சிரநடு ஆயிரம் இதழ் தாமரைத் தகராலயத்தில் தகர வடிவமாய்க் காண உள்ளதாம். அவ் அக வான் வெளியிலே, யகர ஆன்ம வடிவாய் விளங்கியும் விளக்கியும் கொண்டு, உகர, உயிர் உடம்பிலே தயவு ஆகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறதாம். ஆகையால், நாம், பொறி புலன் இச்சையை விடுத்து, விருப்பு வெறுப்பு கொள்ளாது, அக நிலை நின்று தயவு மயமாக வாழ்ந்து வந்தால் நாளடைவில் கடவுளின்ப அனுபவத்தோடு கழிவில்லாமல் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கலாகும். இந்த உண்மையை இந்த இங்கிதப் பாவின் மூலம் உலகுக்கு வழங்கத் திருவருளே அகநின்று ஊக்குகின்றதால் இங்கு இதனை வெளியிடலாகின்றது. இனி இச்செய்யுள் வழி உண்மை கண்டடைவோம்.

    நமக்கு இப்போது உள்ள உடம்பு நிலையற்றதாய், குறைவுடையதாய், மருளில் அழிந்து கொண்டுள்ளது, இதனை அருட் பக்குவத்தால் சுத்த சுக ஆனந்த வடிவமாக மாற்றிட பெறவுள்ளோம். அழியா எழில் ஒற்றியாம் அக ஆன்ம பதியில் தயாபதியையே கண்டு நிற்கின்றோம். அவரது தயவு விளக்கமே, தகர ஞான வடிவமாயும், யகர உயிர் ஆற்றலாயும், வுகர புறவுடல் தோற்றமாயும் அமைந்துள்ளனவாய் அறிகின்றோம். இவற்றில் தலையிடத்து த-வும், இதயத்தினிடத்து ய-வும், உடலினிடத்து வு-வும் செயல்படுவனவாய் காண்கின்றோம். இவற்றையே கம், நாகம், பிநாகம் என முறையே மூவிடத்தும் கொள்ளக் கூடும். நிறை தயவு அனுபவம் தான் நமக்கு பிநாகமாக விளங்குவது. ஆனால், இத்தயவு விளக்கமும் அனுபவமும் அறிந்து அடையப் பெறாதவரை நம் தேகம் அபக்குவ நிலையில் இருக்கும் ஒன்றாக அறியலாகும், பக்குவ நிலையில் திகழும் தேகத்தைப் பிநாகம், பினாகம், பின் ஆகம் எனக் கொள்ளலாம். அதனால் இப்போதைய அபக்குவ தேகத்தை முன் ஆகம் அல்லது முன் ஆகம் அல்லது முனாகம், முநாகம் எனக் கொள்ளக் கூடும். முன் என்பது விசார நிலையாயும், பின் என்பது அனுபவ நிலையாயும் கூறுதல் பழைய மரபே. சிவனது வில் என்றால் என்ன? சிவானந்த அனுபவ வடிவமே.

     சிவமே இப்போது யாவருக்கும் உரிய தயவு ஆக விளங்கலால் தயவு வடிவே நம் அழியா இன்பப் பிநாக வடிவமாகும். தயவு தான், தயாபெருஞ்ஜோதியாய் எங்கும் நிரம்பி இருந்து கொண்டும், நம் சிர நடுவே தய ஆம் கடவுள் ஆன்ம அத்துவித இயல் உண்மையை வழங்கிக் கொண்டிருப்பதும். ஐந்தியல் ஐஞ்சக்தி வண்ணமாய் நிறைந்து தயவு அனுபவத்தைக் கொண்டு ஆனந்தமாய் வாழச் செய்வதாயும் இருக்கிறது. இதனால், இதன் மூலம் மனித சமுதாயம் முழுமையுமே இத்தயவு அனுபவத்தால் சுத்த சுக ஆனந்த வாழ்வில் தழைத்து ஓங்கலாம்.
vlcsnap-2018-03-25-21h21m14s761.png

vlcsnap-2018-03-25-21h21m14s761.png