Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
இங்கித மாலை பாடல் எண்.35க்கு உரை விளக்கம்...சுவாமி சரவணானந்தா.
வலம்தங் கியசீர் ஒற்றிநகர் வள்ளல் இவர்தாம் மெளனமொடு
கலந்திங் கிருந்த அண்டசத்தைக் காட்டி மூன்று விரல் நீட்டி
நலம்தங் குறப்பின் நடுமுடக்கி நண்ணும் இந்த நகத்தொடுவாய்
இலம்தங் கரத்தால் குறிக்கின்றார் இதுதான் சேடி என்னேடீ...          (இங்கித மாலை)

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

       வலிமை மிக்க இந்தத் திருவொற்றி மோனவள்ளல் நமக்கு அருள்புரிவதற்காகவே இங்கு வந்துள்ளார். இவ்விடத்தில் உள்ள ஓர் (அண்டஜம்--முட்டையில் உருவாகிய) அன்னப் பறவையைச் சுட்டிக் காட்டுகிறார். நடு விரலும், சுட்டு விரலும், பெருவிரலும் ஆகிய மூவிரல்களையும் நீட்டி இவ்வளவு என்று குறிக்கின்றார். அன்னத்தை இந்த மூவிரல் அளவையால் சுட்டுவது ஓங்கார ஆன்மாவின் மூவியலைக் குறிப்பதாக விளங்கும். அகர-உகர-மகரமே ஓர் ஆன்மாவின் அகத்தே சூக்குமமாய் இருந்து செயல்படும்போது, பிறப்பு, வளர்ப்பு, அழிவு ஏற்படுகின்றன. திருவருள் நியதிப்படியே பிறப்பு ஏற்ற ஆன்மா சிறிது காலம் வாழ்ந்து சில அகவிளக்கதைச் சேர்த்துக் கொள்கிறது. அவ்விளக்கம் நிறைவுபெற எவ்வளவோ காலம், எத்தனையோ பிறவி தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.

“அகார காரணத்திலே அனேக அனேக ரூபமாய்
உகார காரணத்திலே உருத்தரித்து நின்றனன்
மகார காரணத்திலே மயங்கிநின்ற வையகம்
சிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே”                         (சிவவாக்கியம்)

       அகர உகரத்தால் தோன்றி விளங்கும் ஒரு ஜீவான்மா, மகரத்தால் மடிந்து மறைந்து கிடக்கின்றது. மறுபடியும், நியதிப்படி பிறிது ஒரு வடிவு சூழும் போது தோன்றி வளர்கின்றதாம். முடிவில் நிறை அருள் சேர்கின்ற போது, மரணம் ஏற்படாது என்றும் நலமே தங்கி வாழச் செய்ய உள்ளார் நம்பதி. இந்த உண்மையை மெளன மொழியில் உணர்த்துவது இலேசான காரியம் அல்ல, ஆனால், திருவருளுக்கு எதுதான் முடியாது !

“எல்லாம் செயல் கூடும் என்னாணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே யேத்து’”

       என்ற அருள் வாசகப்படி இங்கு இங்கிதத்தில் இணைந்துள்ளது. நலம் தங்குறப் பின் நடு முடக்கி என்பதை, நடு முடக்கிப் பின் நலம் தங்குற என மாற்றிப் பொருளாக்க வேண்டும். மரணத்தை வென்று என்ற கருத்தினை அழிக்குஞ்செயலைச் சுட்டும் நடு விரலை மடக்கிடுதலாக குறிக்கப்பட்டுள்ளது. இம்மரணத்தை யொழித்து விட்டால்,  தானே பின் நலமே தங்கி வாழலாகும். அப்படி நடு விரலை மடக்கி விட்டபின், அடுத்து பெருவிரலும் சுட்டு விரலும் இப்படி நகத்தொடு நகம் இணையச் செய்து, வாயில் தம் கரத்தை அழகாக சீழ்க்கையிடும் குறி செய்கின்றார். இந்தச் சீழ்க்கை குறி ஆனந்தமாக நலமே வாழும் வெற்றிக் குறியையுணர்த்துவதாம்.

     புலனெறியாளர்கள் இச் செய்யுளுக்கு, கொக்கோக, காம சாத்திர அடிப்படையில் பாலுணர்ச்சியைப் பெருக்கும் வகையில், பொருளாக்குவர். அது தவறு, அருளின்ப லட்சியமுடைய சன்மார்க்கத்திற்கு ஒவ்வாது.
IMG-20170907-WA0064.jpg

IMG-20170907-WA0064.jpg