Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
இங்கித மாலை பாடல் எண்.31க்கு உரை விளக்கம்...சுவாமி சரவணானந்தா.
பலம்சேர் ஒற்றிப் பதியுடையீர் பதிவே றுண்டோ நுமக்கென்றேன்
உலஞ்சேர் வெண்பொன் மலைஎன்றார் உண்டோ நீண்ட மலைஎன்றேன்
வலஞ்சேர் இடைத்தவ் வருவித்த மலைகாண் அதனின் மம்முதல் சென்(று)
இலஞ்சேர்ந் ததுவுமென்கின்றார் இதுதான் சேடி என்னேடீ....             (பாடல் எண்.31)

000000000000000000000000000000000000000000000000000000000000000000000

     ஒற்றியாம் கடவுள் நிலையம் பலம் சேர்ந்தது எனப்பட்டுள்ளது. பலம் என்றால் வலிமை என்று கூறினால் போதாது. நம் தலைநடு அருள் விளக்கம் தரும் ஓவண்ணமாய் இருப்பதாக விரிந்த பொருளில் கொண்டால் பயன் மிக உண்டாம்.

     “இந்த ஒற்றிதான் உங்களுக்கு உள்ளதோ, வேறு ஏதேனும் இருக்கிறதோ”, என்று கேட்கிறாள் தலைவி. அதற்கு அவர் சொல்லுகிறார். “எமக்கு வலம்சேர் வெண்பொன் மலையும் உண்டு: என்று. அதாவது வெண்பொருள் அல்லது அருட்பொன் மயமாய் உள்ள திரண்டகல்லாம் மலையும் இவர்க்கு உண்டு என்கின்றார். கல் என்பது திரயோதசாந்த அருட்பெருஞ்ஜோதி வெளி நிறை நிலையே பெருஞ்ஜோதி மலையாகப் பேசப்படுவது. இச்சோதிமலை அனாதி நித்தியமாய் என்றும் உள்ளது. எனினும் காண்பதற்கு அருட்கண் இருந்தாலன்றி கூடாது.  இதுதான் உலகியலில், வெள்ளிடை மலை எனப்படுவது. அருட்கண்ணுடையார்க்கு இருப்பதாக..நன்று விளங்குகின்றது. அக்கண்ணில்லார்க்கு, இவ்வெண்ணிடை மலை தோன்றுவதே இல்லை. உலகியலார், தம் ஊனக்கண்ணாலும், புறக்கருவிகளாலும், மனமுதலிய கரணத்தாலும், இந்த நிலையான மலையைக் காண முடிகின்றதில்லை.

       கடவுளுக்கு, அகல்வான் வெளிநிலையே பொன் அம்பலம் ஆகவும், பொற்சபை எனவும், அருட்பொன்மலையாகவும் புறத்திலங்க, ஆன்ம சிற்றணு நிலையே சிற்றம்பலமாகவும், சிற்சபையாகவும் இந்த ஒற்றியாகவும் அகத்தே விளங்குகின்றன. ஆகவே, கடவுளுக்கு உரிய இடம், சிற்சபையும், பொற்சபையுமாம்.

             மேல், நீண்ட மலை உண்டோ என வினவப்படுகிறது. அதாவது மகரத்தை மா - என நெடிலாக நீட்டி இசைக்கும்போது, மலை, மாலை என ஆகும். என்ன மாலை என்றால், அந்த் ஜோதிமலையின் ஆற்றல் கொண்டதாய், அக ஆன்மாவைச் சூழ்ந்ததாய் விளங்க வல்ல மாலை எது? அது, மலை இடை ‘த’ சேர்க்கப்பட்ட மதலை என்றால் கொன்றையாம்,  இக்கொன்றை மாலைதான் இவர் அணிந்துள்ள மாலை. மேலும். அம்மாலையத் தலையிற் சூடியுள்ளதைச் சுட்டும்படி, தலைமாலையாய்க் கொண்டுள்ளாராம். அதுதான் மம்முதல் சென்று இலம் சேர்ந்தது என்றுள்ளது. அதாவது மதலையின் மகரம் நீங்கி மேலிடத்தே, விடுதலையாம் வீட்டின்பத்தைச் சுட்ட விளங்குவதாம்.

     கொன்றை மலர் சுத்த ஆன்ம வண்ணமாய், பொன்மய பத்திதழ் கொண்டு மலர்ந்து விளங்குவது. இந்த ஆன்ம உண்மை ஒளி விளங்கும் நிலை தலையிடமாய் அனுபவப்படுவது இயல்பே. ஆகையால் தான் இம் மதலை (கொன்றை) மாலையைத் தலைஇடம் கொண்ட மாலையாக தாமம் என்ற பொருள் விளங்கத் தலையில் அணியப்பட்டுள்ளது. மேலும், பிரமர்களின் தலையோட்டையே மாலையாக அணிந்துள்ளதாகச் சிவபதியைக் குறிப்பர். பிரம்மகபாலம், ஜோதியிருந்த விசேடத்தால் அப்படி அணிந்து கொள்ளப்பட்டதாக புனைந்துரை செய்யப்பெற்றது. அவர் எலும்பும் கபாலமும் அணிந்ததில்லையாயின் அவையும் இற்று மண்ணாயிடும் என்று திரு மூலர் திருமந்திரத்தில் குறித்துள்ளார். அவர் அணிந்ததிருத்தலின் அவ்வெலும்புக்கு அந்த அழியா ஆற்றலா ? அல்லது, அது அழியாதிருப்பதாலே, இதனை அவர் அணிந்து கொண்டிருக்கிறாரா, என ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டியதில்லை. இம்மனிதப் பிறப்பில், கடவுள் உண்மை கபால நடுத் தீபம் போல் மிளிர அதனைச் சூழ்ந்து விள்ங்கும் பிரபா வட்டமே மாலையாகக் கண்டு போற்றிக் கொள்ளப்படும்.

         தேவர்கள் தோற்றத்திலும், தெய்விகப் பெரியோர்கள் தோற்றங்களிலும், தலையைச் சூழ்ந்து பிரபை காணல் அக ஒளிக் காட்சியின் அனுபவமே.

         மதலை மலராம் கொன்றைப்பூ ஆன்மாவாக இருத்தலின், அதனை நம் பதி சிரத்தில் அணிகின்றார். மம்முதல், மெளனஜோதியாக உள் திகழ்கின்றது. அதனை மம்மர் ஆகிய அறியாமை மயக்கம் நீங்கின ஆன்மாதான் மேலேறி வீட்டு நிலை அடையும். இதுதான் இல்லம் சேர்ந்த விடுதலை பெற்ற தலைவி நிலை.
New Doc 2018-07-06 (4)_1 (1).jpg

New Doc 2018-07-06 (4)_1 (1).jpg