Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
இங்கித மாலை பாடல் எண்.30க்கு உரை விளக்கம்...சுவாமி சரவணானந்தா.
வளஞ்சேர் ஒற்றி மாணிக்க வண்ணர் ஆகும் இவர் தமை நான்
குளஞ்சேர்ந்திருந்த(து) உமக்கொருகண் கேலச் சடையீர் அழகிதென்றேன்
களஞ்சேர் குளத்தின் எழில்முலைக்கண் காண ஓர் ஐந்(து) உனக்கழகீ(து)
இளஞ்சேல் விழியாய் என்கின்றார் இதுதான் சேடி என்னேடீ.                   (பாடல் எண்.30)

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

     எங்கும் நிறைந்த அகண்ட ஜோதிபதியே, மாணிக்க வண்ணராக வளமிக்க ஒற்றியில் இருக்கின்றார். அவருக்கு ஒருகண்குளத்தே அமைந்துள்ள்து. இந்த கண் எது ? குளம் எது ? உண்மையில் எங்கும் நிறை ஜோதியே, நம் பதிக்கு அழகிய விரிசடையாய் எழிலுறுகின்றது. அவரது முழு உண்மையும் அனுபவப்பட நம் தலை நடு குளக்கண்ணாய் அமைந்திருக்கின்றது. இப்படி அமைந்திருப்பதுவே அவர்க்கு மிகப் பொருத்தம் ! அதுவே அழகிது எனப்பட்டுள்ளது. உண்மைக்குளம் தலையுள் நடுவாய் இருக்கவும் அவண் இருக்கும், அகண்ட ஒளியைக் கண்டு நிற்கும் மெய்ஞ்ஞானக் கண்ணாய் இருக்கவும். அவற்றின் பிரதிபலிப்பே புறத்தே கட் புருவ நெற்றி நடுவிள்ங்கல் காரணமாக, அந்நெற்றியையே குளம் எனவும், நெற்றிக் கண்ணே ஞானக் கண் எனவும் அபக்குவர் கொள்ளுவர். மேனிலையில் குளக்கண் ஒன்றாய் இருக்க, அதுவே, கண் நாக்கு, மூக்கு, செவி, (ஞானக் கூடமாம்) உடல் எனும் ஐந்துக்கும் ஒரே இடமாய் அமைந்திருக்கிறது. ஆனால், ஜீவான்மத் தலைவியின் அனுபவம் கூடற்கு, அது கீழ் இறங்கி, இதயத்தானத்திலிருந்து செயல்படுகின்றது. இது இங்கு களம் சேர் குளமாகக் குறிக்கப்படுகின்றது.

     கழுத்தாகிய விசுத்திக்குக் கீழ் நிலையில் பொருந்தியுள்ளது, இதயமாம் அனாகதமே. இது தலைவிக்குரிய குளமாம்.  இங்கு செயல்படுகின்ற ஜீவான்மத் தலைவிக்கு, ஐம்புலன் உணர்வுக்காம் தனிக் களம், ஐந்து கண்களாய் விளங்குவனவாம். இவ்விதயத்துள்ள மன உணர்வு ஒவ்வொரு பொறிபுலனுடனும் கூடி உலகியலில் அனுபவிப்பதாம். இப்படி ஆன்மத் தலைவிக்கு ஐங்கண் அமைந்துள்ளது மிக மிகப் பொருத்தமே என்பது, “ஓர் ஐந்து உனக்கு அழகு ஈது !” என்ற தலைவர் இங்கித உரையால் விளங்குவதாம்.

      தலைவியை “இளம்சேல் விழியாய்”. என்று விளிக்கிறார், தலைவர்.  ஜீவான்ம பக்குவ நிலையையுணர்த்துவது, இச்சேல்விழி. மூடாதே சதா விழித்திருக்கும் இம்மீன் விழியின் செயல் பக்குவ ஆன்மாவின் அகவிழிப்புண்மையைச் சுட்டுவது. இந்த அகவிழிப்பு உண்மை யோக ஞான சித்தர்களின் அனுபவத்தில், அறிதுயில், சுக நித்திரை, யோக நித்திரை என்றெல்லாம் விளங்குவதாம். ச்த்த சன்மார்க்க அனுபவத்தில் நித்தியானந்த வாழ்வில், துரியாதீத நிலையோடு கூடிய ஜாக்கிரம் ஆக, ஜாக்கிராதீதம் என விளங்குவதாம். இந்த ஜாக்கிராதீத இங்கிதானுபவம் இங்கு இவ்இளஞ்சேல் விழியாளுக்கு இசைக்கப்படுகின்றது.
vlcsnap-2018-03-25-19h46m41s500.png

vlcsnap-2018-03-25-19h46m41s500.png