Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
திருக்கதவம் திறத்தல் பாடல் எண்.8க்கு உரை விளக்கம்..சுவாமி சரவணானந்தா.
வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்
   விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்
ஓதுகின்ற சூது(அ)னைத்தும் உளவனைத்தும் காட்டி
   உள்ளதனை உள்ளபடி உணரஉணர்த் தினையே
ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர்
   எள்ளளவும் எண்ணமிலேன் என்னோடுநீ புணர்ந்தே
தீதறவே  அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்
   சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

000000000000000000000000000000000000000000000000000000000000000

விளக்கம்.

     கடவுள் உண்மை பற்றி வேதங்களும் ஆகமங்களும் சொல்லியுள்ளனவெல்லாம் சாதாரண மனோ பகுத்தறிவால் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால், சொற்பொருளுக்கும், கற்பனைகட்கும் அப்பாற்பட்டது பரம்பொருள். அது சுத்த அருள் அல்லது தயவு மயமானது, சச்சிதானந்த நித்திய வஸ்து, எல்லாம் வல்லது, என்று அருள் அனுபவத்தால் கண்டு, அனுபவித்தவர்கள் சொல்லுகின்றனர். ஆகையால் நாமும் அம்மேனிலையுற்று அருள் ஜோதி மயமாகி இருந்தால் தான் அக்கடவுள் அனுபவம் கைகூடுவதே அல்லாது, படிப்பால், விவாதத்தால், விரிவுரையால் மற்ற உபாயங்களால் எல்லாம் கடவுளைக் கண்டு கொள்ள முடியாது. இதனால் தான்.

இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்
   இவை முதலா இந்திர்சா லங்கடையா உரைப்பார்
மயலொருநூல் மாத்திரமே சாலமென அறிந்தார்
   மகனேநீ நூலனைத்தும் சாலமென அறிக
செயலனைத்தும் அருள்ஒளியாற் காண்கஎன எனக்கே
   திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே
அயலறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற
   ஆடுகின்ற அரசேஎன் அலங்கலணிந் தருளே”

     ஆடல் அரசராகிய அருட்பெருஞ் ஜோதியை, அதன் மெய் அருளாலே, சத் விசாரத்தால் சார்ந்து நின்று அன்பாலே, ஜீவ தயவாலே உளம் உருகிடும்போதுதான் உண்டாகின்ற அக அனுபவமே, அருள் ஒளிக் காட்சியால் பெறப்படும் அனுபவமாம். உலகறி வேதாகமங்கள் உண்மை அல்ல. அந்த வேதாகமத்திற்கு ஆதாரமாகிய ஒன்று எதுவோ அதுவே அருள் மெய்ப்பொருள்; அது, அகமிருந்து புறத்தே தோன்றியுள்ள யாவற்றிற்கும் காரணமாய் இருக்கின்றதாம். புறத்தன எல்லாம், தோற்றமாற்ற மறைவு ஆகிய மாயா மயமானவையே ஆம்.

     இப்படி அருட் ஜோதிபதி  ஒருவரே அகத்தில் ஒரு படித்தாய் இருக்க, புறத்தில் அனந்த வண்ண பேத தோற்றங் கொண்டுள்ளதால்,  இப்போது அது ஒன்றே ஈரியல்போடு, எதுவுமாய், எவருமாய், நாம் ஒவ்வொருவருமாய் விளங்கிக் கொண்டிருப்பது உண்மையாகும். இவ்வனுபவத்தில் உள்ள மனிதன் (உண்மையில் ஒன்றான கடவுள் தான்) எங்கும், அயலறியாது, எங்கும் தானாய் வெளிப்பட்டுத் திகழ்வதை யுணரமுடிகின்றதாம். இதுதான் அயலறியா அறிவு என்பதாம்.

     இந்த ஒன்றான இறை அருட் ஜோதியைக் கலந்து நிற்கும் ஒருவன், அருள் அனுபவி ஆவான், இவனுக்கு வேதங்களின் விளைவும், ஆகமங்களின் விதிமுறைகளும், புராணங்களின் கட்டுக் கோப்பும், இதிகாசங்களின் இலட்சியங்களும் இவை இவை என நன்கு புலனாகும். இவனது வாழ்க்கை அருள் ஒளியால் நடைபெறும். அருள்மயமாகாமல் மருள் மயக்கில் இருந்து கொண்டே, வேதாகம பண்டிதனய், புராண விரிவுரை வல்லுனராய் இதிகாச கதாப் பிரசங்கியாய் விளங்குபவர், அருள் அனுபவம் இன்மையால், வீண் போவது இயல்பே.

     நம் வள்ளல் அடிகள், அருள் ஒளியை யுள்ளத்து உணர்விலே கொண்டு விளங்கினதால், எல்லா மறைப்புகளையும் தவிர்த்துக் கொண்டு உள்ளதையுள்ளபடி அறிந்து கொண்டதோடு, வாழ்விலே என்றும் தழைத்தோங்கவே வேண்டினார். உண்மையைச் சரியாகப் புரிந்து கொண்ட பின், மறுபடியும் பொய்ந்நெறிகளிலே பற்று கொள்வார்களா, அவற்றில் செல்வார்களா, மாட்டர்கள். வீண் போது கழிக்கவும் விரும்பார்கள்; விரைவிலே இறைவனோடு இரண்டற இருந்து கொண்டு, எவர்க்கும் அவ் இறை இன்ப வாழ்வு ஏற்பட இயன்ற உதவி செய்து கொண்டிருப்பதே இவருடைய திருவுள்ளம் ஆகும். இதுவே, இவர் ஆண்டவரிடத்து வேண்டுகின்ற சித்து விளையாட்டு.

     சுத்த சன்மார்க்கி, தயவு நிறை வாழ்வு பெற்று, நிரதிசய ஆனந்தமாய் செயலொடு திகழ்ந்து கொண்டிருப்பதே லட்சியமாய்க் கொண்டவனாவான். மற்றவர்கள் தான், மந்திர தந்திர மாயாஜால மனோவசியம் முதலானவும், யோக ஞான அற்புதானந்த மகா சித்துச் செயல்களும் பெற முயன்றும், ஓரளவு பெற்று இருந்தும், முடிவில் ஆதி அருட் ஜோதியிலே மறைந்து கரைந்து சமாதி நிலை எய்தி விடுகிறார்கள். இன்றோ நம் சுத்த சன்மார்க்கத் தலைவர், கடவுட் கலப்பில் மறையுறாது, கடவுள் தானே தன் இயல் உண்மை அறிவின்ப அனுபவத்தை எல்லாம், இவர் வடிவில் இருந்து உலகம் கண்டு உய்ய உதவிக் கொண்டுள்ளார்.

     அருட்பெருஞ் ஜோதிக் கடவுள், மனிதனுக்கு, அற்புத சித்தி வல்லப சக்தியை வழங்கி, மக்கள் சமுதாயத்தை வியக்கச் செய்யவும், மயக்கச் செய்யவும், விரும்பவில்லை. அப்படிப் பெறும் அற்புதச் சக்தி சித்திகள் எல்லாம் அற்பமாய், வேண்டக் கூடாதனவாய் தோற்றுகின்றது. சுத்த அருட் ஜோதி முன்னிலையிலே, ஆனால் இதுகாறும் பிழைத்துக் கொண்டுள்ள புலனெறியுலகம் புற மாயா மயக்கச் சித்திச் செயல்களையே வியந்தும் போற்றிக் கொண்டும் உள்ளதாம். அப்படிப்பட்ட வியத்தகு சித்திகளில் மயங்காதாரும் கூட, புலன் இன்ப வாழ்வையே இச்சித்தி ஏற்றோ, வெறுத்து ஒதுங்கிச் சென்றோ, உண்மை கொண்டு உயரின்ப வாழ்வில் நிலை கொள்ளாது போகின்றது, திருவருட் சம்மதமல்ல.

     இறைமயமாகி, இறவா இன்பில் என்றும் தழைத்திலங்கும் பெருநிலை பெறுவதே நம் வள்ளல் விழைந்த தீதற்ற அனைத்தும் வல்ல சித்தாடல் ஆகும். புற உலகம் கண்டிருந்த இந்த ஞான சித்தர் உயிர் இரக்கம் மிக உடையவர். அந்தப் பேரிரக்கம் தான் பிறர் படும் துன்பங்களைக் கண்டும், கேட்டும், உளம் மிக நெகிழ்ந்து அருள் ஆண்டவரிடம் முறை இட்ட போதெல்லாம், அத் திருவருட் சக்தியே பல சித்திகளை நிகழ்த்தித் துன்புற்றோரை இன்படையச் செய்திருக்கின்றது உண்மையே. இவையொன்றும் இச்சையாலோ, உலகு மதித்துப் புகழ்ந்து போற்ற வேண்டும் என்றோ செய்யப்பட்டன அல்லவாகும். ஆகையால் இவர்தம் அருட்சித்துச் செயலால் இவரது உள்ளத்தில் ஆணவ அகங்காரமற்ற அருள் ஒளியையே, பெருக்கி, முடிவில் அருட்பிரகாசச் சித்தி வடிவாய் என்றென்றும் விளங்கும்படி செய்துவிட்டுள்ளது.

     உலகவரால், அன்றும், இன்றும், போற்றிக் கொள்ளப்படுகின்ற எத்தனையோ சித்தர்கள், மகான்கள், யோகியர்கள் எல்லாம், இறைமயமாய் என்றும் இருந்து கொண்டு, ஆம் உலகில் மரணமில்லாது இருந்து கொண்டு வாழும் பெருஞ் சித்தி பெறவில்லையே என்றால், அது சுத்த சன்மார்க்கத்தில்தான் வெளியாக்கப்படுவது திருவுளச் சம்மதமாய் இருந்து, அந்நெறிக்கு முதல்வராகிய நம் அருட் பிரகாசர் மூலம் உலகறிய வந்துவிட்டுள்ளதாம்.  இனி இந்த சித்திப் பேறே உலகெல்லாம் போற்றிக் கொள்ள உள்ளதாம்.

      சுத்த சன்மார்க்க அருட்ஜோதி உதயமாகியும், அபக்குவர்கள் அகவானில் இன்னும் உள் உதயமாகாத காரணத்தால், பழமையிற் பற்றும், மயக்கமும் கொண்ட பலரும், அற்ப அற்புத சித்திகளையே மதித்து, அகங்களித்து இருந்து வீண் போகக் காண்கின்றோம். வள்ளலே உள்ளும் புறமும் இருந்து அருட் பக்குவம் வருவித்துக் கொண்டிருக்கின்றதால், அதி விரைவில், காலத்தே, சுத்த நெறியினைச் சூழ்ந்து கொள்ளும் உலகம்; நல் விளைவும் பயனும் காணலாம்.

     
   
vlcsnap-2014-09-06-12h32m02s188.png

vlcsnap-2014-09-06-12h32m02s188.png