Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
அறம்.(.ஒன்று மூன்றான உண்மை). என்ற நூலிலிருந்து..சுவாமி சரவணானந்தா.
அறம்.

சுவாமி சரவணானந்தா.

00000000000000000000000000000000000000000000000000000000000

      அறம் என்பது பற்றி எவ்வளவோ கற்றும், கேள்விப் பட்டும் உள்ளோம். ஆனால் அதன் உயர் பொருளும், அதனால் உண்டாம், பெரும் பயனும் பற்றி அறிந்தவர்கள், சிலரேயாவர். ஆம், அறம் என்பது தருமம், ஈகை, தன்மை, குணம், சுபாவம் என்பனவாகக் கூறப்படும். பகுத்தறிவாலே, சில நல்ல கொள்கை கோட்பாடுகளை வகுத்தளித்து, அவற்றை ஒரு விதிமுறை எனக் குறித்து விட்டிருப்பாராயின், அப்படி அறுதியிட்டு குறிக்கப்பட்ட, அல்லது அறுவை செய்யப்பட்ட, சட்ட முறையே அறம் என்று ஏற்றுக் கொள்ளுகின்றனர். இம்முறையில்தான் அற நூல்களை ஆக்கித் தந்துள்ளனர் ஆன்றோர்கள். அப்படிப்பட்ட அறநூல்களிலே சிறந்த ஒன்றே திருக்குறள் என்னலாம். இல்லறம், துறவறம் என்பவை யாவரும் அறிந்தனவே. மனிதனுக்கு, அறிவுக் காரணமாக, அற வாழ்வு அவசியம் கொள்ளப்பட வேண்டியிருக்கின்றதாம். இவ்வறத்தையே, உயர்திணையொழுக்கம் என்று கொண்டனர் முன்னோர். பின்பு, இவ்வற நெறியையே சமய மத மார்க்கமாகவும் கொண்டனர். மதம் மனித குலத்துக்கு இன்றியமையாதது என்றும் கூறினர்.

          ஆனால், இந்த அறக் கொள்கை எல்லாம், எல்லோருக்கும் நன்மையே வழங்கி ஒத்துழைத்து இன்பம் காணச் செய்வதாயில்லாமல் குறைவு பட்டு கிடக்கின்றனவாம். ஏனென்றால், இவ்வற நெறி முறை சுத்த ஞான ஒளி விளங்கும் மனத்திலிருந்து எழாது. ஏகதேச விளக்கங் கொண்ட அசுத்த மனக் கரணங்களிலிருந்து வெளிப்பட்டுள்ளதே காரணமாம். மதம் என்றால் சுத்த நிலையில், பூர்ண மதியின் அம்சமான நிறை ஞானம் கொண்டதாயிருக்க வேண்டும். அப்படி இல்லாதபோது, குறை அறிவிற்கண்ட சமய மதம் ஏக தேசமே பொருந்துவதாகின்றதாம். ஆகையால்தான் மதங்களின் நெறி முறைகள் பலவாயிருப்பதோடு எதுவும் பூரணமாக விளங்காது போயிற்றாம். இப்பொழுது திருவருளால் மனித மனத்தில், மெய்யறிவு, கடவுளின் நிறையருள் தன்மையாகவே வெளிப்பட்டிருக்கின்றது. இந்த அருள் ஞானம் தான் கடவுளையுணர்த்தும் பூரண அறிவாக இருக்கின்றது. இவ்வருளையே இன்று, கடவுளின் தன்மை, சுபாவம், தருமம், அறம் என்று கண்டு கொள்ளுகின்றோம். முடிவாக, அறம் என்றால் அருள் என்றே கொள்ளப்படும். இந்த அருள் எல்லாம் வல்ல ஆண்டவர் தன்மை என்பதை உள்ளத்தில் இருத்திக் கொள்ள வேண்டும். இந்த அருள் தான் மனிதனுக்கு அவசியமானது என்று சொல்லவும் வேண்டுமோ ? பகுத்தறிவின் சிகரம் இந்த அருள்தான். பகுத்தறிவாகிய மலைப் பிரதேசம் மிகப் பெரியது உயர்ந்தது, உச்சி அடைய எவ்வளவோ காலமாக எவ்வளவோ மனிதர்கள், எப்படி எப்படியோ முயன்றிருக்கிறார்கள், இடையிடையே, மலை வாசத்தில் சுகங்கண்டவர்கள், பனிச் சிகரத்தை தூரக் காட்சியாகவே கண்டு களித்து விட்டுப் போய்விட்டனர் போலும். சிகரத்தேறி நின்று பரந்த சுற்று வட்டக் காட்சியோடு, உச்சி வானின் நெருக்கமான பரிசமும் பெறச் சென்றவர்கள், சமீப காலம் வரை எவரும் இலராயினர். அண்மையில்தான் அருளீன்ற அருட்ஜோதி வள்ளல் தோன்றி, திருவருளலே அவ்வருட் சிகரத்தில் ஏறாமலேறி நின்று அருளைக் கண்டு கொண்டார். தன் அகத்திலே, அருட் சிகரத்திலே நிலையான வாழ்வை அருளாலே கொண்டு வாழ்கின்றவர் ஆகிவிட்டார். ஆகையால், திருவருளின் நிறையுண்மையைத் திருவருட்பாவிலே பொழிந்து விட்டிருக்கின்றார். கடவுட் பூரண அருள் இதுவென்பது திருவருட்பாவின் புறத் துணையோடு, நம் அகத்திலே தோன்றாத் துணையாயிருக்கும் பதியின் அந்த மெய்யருள் ஒளியினாலேயே கண்டு கொள்ளுகின்றோம். இந்த அருள் தான் உண்மையான கடவுளின் அறம் என்பது தெளிவாம். மெய்யறிவு என்பதும், பூர்ண ஞானம் என்பதும் இவ்வருளேயாம்.
vlcsnap-2018-03-25-19h46m41s500.png

vlcsnap-2018-03-25-19h46m41s500.png